Monday 19th of March 2018

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்
44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 31 January 2011 14:49

30 Jan 2011

 

44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம் 
 
எனது எட்டயபுர பயணத்தின் முதல் நாள் மாலையில் திரு.இளசை மணியனைச் சந்தித்ததைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். திரு.இளசை மணியன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்; இனிமையானவர். பாரதி ஆய்வு மையத்தைத் தொடங்கிய காலம் தொட்டு இந்த மையத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளதோடு தற்சமயம் இந்த மையத்தின் மேலாளராகவும் பொறுப்பு வகிக்கின்றார். முதல் நாள் மாலை என்னைச் சந்திக்க வந்திருந்த போது ரகுநாதன் நூல் நிலையத்திற்குக் கட்டாயம் வருகை தந்து செல்லுமாறு கூறிச் சென்றிருந்தார். இந்த பாரதி ஆய்வு மையம் அமையக் காரணமாக இருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள்.  தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் சகோதரி திருமதி.சாவித்ரியின் இல்லத்திலேயே நான் அன்று இரவு தங்கியிருந்ததால் எனக்கு எட்டயபுரத்தைப் பற்றியும் இவர்கள் குடும்பத்தினரைப் பற்றியும் அவர்களின் தமிழ் ஆர்வமும் சேவையும் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. ஆக இந்த நூலகமும் அருகாமையிலேயே இருப்பதால் மறு நாள் காலையில் திருநெல்வேலி புறப்படுவதற்கு முன் அங்கு சென்று வர திட்டமிட்டிருந்தேன். காலையில் பெருமாள் தரிசனம் முடித்து எட்டீஸ்வரன் கோயிலில் அர்ச்சனை செய்து ஆலயத்தைச் சுற்றி பார்த்து பின் குருக்களுடன் கீரை மஸ்தான் சமாதிக்குச் சென்று முடித்து திரும்பியதும் ரகுநாதன் நூல் நிலையம் - பாரதி ஆய்வு மையத்திற்கு விரைந்தேன்.
 
 

 

 

 
இந்த நூலகம் அமையக் காரணமாக இருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள். இந்த நூலகத்தை உருவாக்கி தனது நூலகத்தில் இருந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு இந்த நூலகத்தை எட்டயபுரத்தில் உருவாக்கினார் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள். பேச்சாளர்,  எழுத்தாளர், சமூக  சிந்தனையாளர், இலக்கிய வாதி என பன்முகம் கொண்ட தமிழறிஞராகத் திகழ்ந்தவர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள். இவர் 20.10.1923ல் பிறந்து 31.12.2001ல் மறைந்தார். 
 
இவரது படைப்புக்களில் பல மிக புகழ் பெற்றவை. நூல் விமர்சனங்கள், கதை, கவிதை, நாவல் நாடகம் வரலாற்று நூல்கள், ஆய்வு நூல்கள் என பல வடிவங்களில் இவரது எழுத்து ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் சோவியத் நாடு என்னும் இதழின் ஆசிரியராகவும் 20 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1944ம் ஆண்டில் தினமணியில் துணை ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் 1946ம் ஆண்டில் முல்லை இதழின் ஆசிரியராக பணியாற்றியதோடு பின்னர் சாந்தி என்னும் இலக்கிய மாத இதழைத் தானே பதிப்பித்தும் வெளியிட்டார். பாரதியின் கருத்துக்களின்  பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட தொ.மு.சி.ரகுநாதன் தம்மை பாரதி ஆய்வாளராக ஆக்கிக் கொண்டார். பாரதி ஆய்வின் தொடர்பில் இவர் பாரதி காலமும் கருத்தும், பாரதி சில பார்வைகள்,  கங்கையும் காவிரியும் பாரதியும் ஷெல்லியும்,ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.பாரதி காலமும் கருத்தும் என்னும் ஆய்வு நூலுக்கு 1983ல் சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது.

 

 

 

 


 
இவரது இலக்கிய படைப்புக்களைக் கௌரவித்து தமிழ்ப் பலகலைக்கழகம் 1988ம் ஆண்டு இவருக்கு தமிழன்னை விருது வழங்கி சிறப்பித்தது. இது மட்டுமன்று; அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், சோவியத் நேரு விருது  என பற்பல விருதுகள் இவரது தமிழ்ச் சேவைக்காக வழங்கப்பட்டு இவர் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்.

 

 
இவர் உருவாக்கிய பாரதி ஆய்வு மையம் "ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்" என இப்போது வழங்கப்படுகின்றது. இந்த நூலகத்தில் தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் நூல்களோடு அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள், பரிசுகள், படங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் இவர் நூலகத்துக்காக வழங்கிய தனது சொந்த சேகரிப்பில் இருந்த நூல்களோடு ஆசிரியர் துரைராஜ் அவர்கள்  சேகரிப்பில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும் உள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பாரதியின் சில கையெழுத்துப் பிரதிகளும் பாரதியின் அனைத்து எழுத்தாக்கங்களும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இளசை மணியன் அவர்கள் எனக்குத் எடுத்துக் காணபித்து விவரங்கள் தெரிவித்தார்.
 

 

 

 

 

 


அதில் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடிய முரசு என்ற தலைப்பிலான ஒரு நூல். இது பாலி.சு.நெல்லையப்ப பிள்ளயால் சென்னை இந்தியா அச்சுக் கூடத்தில் 1917ல் பதிப்பிக்கப்பட்டது. இது போன்று பாரதியின் நூல்கள், பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கைகள், அவரது கையெழுத்தில் அமைந்த தகவல்கள் என பலதரப்பட்ட அரிய படைப்புக்களைத் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் சேகரித்து வைத்துள்ளார்கள்.
 
 

 
 
இது ஒரு சிறிய நூலகம் தான். ஆனாலும் நூலகத்தின் உள்ளே உள்ள நூல்களும்  சேகரிப்புக்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நூலகத்தின் முகப்பில் பத்திரிக்கைகள் வாசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் சென்றிருந்த சமயம் சில இளைஞர்கள் இப்பகுதியில் அமர்ந்திருந்து பத்திரிக்கைகள் வாசித்துக் கொண்டிருந்தனர். இந்த நூலகத்துக்கு ஆய்வாளர்களும் மாணவர்களும் அதிலும் குறிப்பாக பாரதி பற்றி ஆய்வு செய்பவர்கள் வந்து செல்வதாக திரு.இளசை மணியன் குறிப்பிட்டார். 
 
 

 
பாரதியின் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட திரு.இளசை மணியன் பாரதி கட்டுரைகளைப் "பாரதி தரிசனம்" என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இந்தியா பத்திரிக்கையில் வெளிவந்த பாரதியின் கட்டுரைகளின் தொகுப்பு இவை. இவை மட்டுமன்றி இந்தத் தொடரில் விரிவாகப் பேசப்படும்  1879ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட வம்சமணித்தீபிகை நூலினை மறுபதிப்பு செய்தவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். இவை மட்டுமல்லாது "எட்டயபுரம் வரலாறு" என்னும் ஒரு நூலினை திரு.சதாசிவன், மா.ராஜாமணி ஆகியோருடன் இணைந்து எழுதி 1976ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். திரு.இளசை மணியன் அவர்களின் ஆய்வுப் பணிகளும் பதிப்புப் பணிகளும் மேலும் தொடர்ந்து வருகின்றன. அவர் தற்சமயம் தொ.மு.சி. ரகுநாதன் அவர்களின் படைப்புக்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு வம்சமணி தீபிகையை மீண்டும் மறு பதிப்பு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
 
தொ.மு.சி. ரகுநாதனின் உழைப்பின் பயனாக இந்த "ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்" அமைந்துள்ளது. இம்மையத்தைத் தொடர்ந்து பராமரித்து வரும் திரு.இளசை மணியன் அவர்களும் நிர்வாகப் பணியில் உள்ள அனைவரும் போற்றத்தக்கவர்கள்.
 
தமிழகத்திலுள்ள  பல கிராமங்களில் இவ்வகையான நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவ்வகை நூலகங்களில் பற்பல வரலாற்று ஆவணங்களும், கலைப் பொருட்களும், அரிய பல பழம் நூல்களும் இருப்பது கண்கூடு. இவ்வகை நூல்களும் ஆவனங்களும் இன்னூலகங்களில் இயன்ற அளவில் பராமரிக்கப்பட்டு வந்தாலும் நூல்களின் பாதுகாப்புக் கருதி மின்பதிப்பாக்கம் செய்யபப்பட வேண்டியதும் அவசியமான ஒன்றே! 
 
 
தொடரும் .. 
 
அன்புடன்
சுபா

 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  March 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728293031 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved