Saturday 24th of February 2018

Home வரலாறு திருவண்ணாமலை வந்தவாசிக் கோட்டை
வந்தவாசிச் கோட்டை PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 01 October 2011 08:44

 

வந்தவாசி


வந்தவாசி - திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கிய ஒரு நகர். வந்தவாசி என்றால் தமிழக மக்களுக்கு முதலில் நினைவில் வருவது வந்தவாசி பாய். இந்த நகருக்கும் சரித்திரம் உண்டா என்றால் ஏன் இல்லை என கேட்டு நம்மை வியக்க வைக்கின்றது இந்த நகரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் செய்திகள்.

 

இந்த ஊரின் சிறப்புக்களையும் குறிப்புக்களையும், இந்திய சரித்திரக் களஞ்சியம் (தொகுதி 6) நூல் ஆசிரியர் ப.சிவனடி, தனது நூலில் வழங்கியிருப்பதை இங்கே நமது வாசிப்பிற்காக இணைக்கிறேன்.

 

"வந்த என்ற சொல்லுக்கு நூறு என்று பொருள். வாசி என்பது வசிப்பவரைக் குறிக்கும். எனவே இதை நூற்றுவர் வாழுமூர் எனக் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் வெள்ளிமலை என்ற பொருளில் இதைத் தளகிரி என்பர்.

 

இவ்வூர் இன்று அம்பேத்கர் வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் வந்தவாசிக் கோட்டத்தில் உள்ளது. இது சித்தூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர், இராணிப்பேட்டையிலிருந்து தெற்கே தென்கிழக்கில் சுமார் 53 கிலோ மீட்டர், திருப்பதியிலிருந்து தெற்கில் சுமார் 110 கிலோ மீட்டர், வேலூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூர் சூக்க ஆற்றின் வடக்கே சிறிது தொலைவில் உள்ளது.

வந்தவாசியில் சலகண்டேசுவரர் கோயில் உள்ளது. வாலாசா மலைக்குத் தவளகிரி என்ற பெயர் உண்டு. இங்கு கோரைப்பாய் முடைவதும், தோல் பதனிடுவதும் பெருந்தொழில்களாகும்."

 

எங்கள் திருவண்ணாமலை பயணத்தின் இரண்டாம் நால் வந்தவாசிக்குச் செல்வது ஏற்பாடாயிருந்தது. எங்களுக்கு வந்தவாசி ஊரைப் பற்றி சில தகவல்கள் வழங்க திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர் முனவர்.ம.ராஜேந்திரன் அவர்கள் சரித்திர ஆர்வலர்கள் சிலரை எங்களைச் சந்தித்து தகவல் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை நாங்கள் சந்திக்க ஏற்பாடாகியிருந்த இடம் வந்தவாசிக் கோட்டை.

 

 

 

கோட்டை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது காண்பதற்கே வருத்தமளிப்பதாக உள்ளது. கோட்டையின் மதில் சுவர்களின் ஒரு பகுதி மட்டுமே காணக்கூடியதாக உள்ளது. சுவர்களைச் சுற்றிலும் ம்ண் புதர்கள் செடிகள் வளர்ந்து பாதையை மறைந்துக் கொண்டுள்ள நிலைக் காணமுடிகின்றது. தமிழ் நாட்டிலுள்ள சிதலமடைந்த எண்ணற்ற கோட்டைகளின் வரிசையில் இதனையும் சேர்க்கலாம்.

 

இக்கோட்டைப் பகுதிக்கு பின்பகுதியில் குடிசை கட்டிக்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல.. தமிழகத்தின் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இந்த வந்தவாசிக் கோட்டையைப் பற்றி தெரிந்திருப்பார்களா என்பது ஐயமே!

 

 

வந்தவாசிக் கோட்டை மராட்டியரால் கட்டப்பட்டிருக்கலாம் என ப.சிவனடி, தனது நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் நெவாயத்து குடியைச் சேர்ந்த ஆர்க்காட்டு நவாபு தோஸ்து அலியின் (1732 - 1740) வேண்டுகோளுக்கிணங்க அவரின் மருமகனான முகமது தக்கி கான் என்பவருக்கு முகலாயப் பேரரசர் வந்தவாசி ஜாகீரை முதலில் கொடுத்திருந்தார். சந்தா சாகிபும் முகமது தக்கி கானும் சகோதரியரை மணந்திருந்தமையால் நெவாயத்துகளையடுத்து 1744 இல் ஆர்க்காட்டு நவாபுகளான வாலாசாக்கள் முகமது தக்கி கானை நீக்கி விட்டுப் பிரெஞ்சுப் படையதிகாரிகளை வந்தவாசிக் கோட்டைக்குள் விட்டனர். இந்தக் கோட்டை இந்துக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது என்றும் இதன் சுற்றளவு சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் இருக்கலாம் என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.

 

தமிழக சரித்திரத்தை அறிந்தவர்களுக்கு வந்தவாசிப் போரின் முக்கியத்துவம் நிச்சயம் தெரிந்திருக்கும்.1760ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள்.தமிழகத்தில் வணிகம் செய்ய வந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த குழுக்கள் இந்திய தேசத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொண்ட போர் நடைபெற்ற தினம். ஆங்கிலேயர்களும் ப்ரெஞ்சுக்காரர்களும் எதிர்கால ஆட்சிப் பொறுப்பை முடிவு செய்த ஒரு போர் வந்தவாசிப் போர்.

 

சரித்திரப் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் தனது வரலாற்றுப் பார்வையில் வந்தவாசி எனும் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.


"இரண்டு ஐரோப்பியக் குழுக்கள் தமிழகத்தில் மோதிக் கொண்டார்கள். இதில் தமிழக நவாப் உள்ளிட்ட சிற்றரசர்கள், பொதுமக்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர். சில நூறு தமிழர்கள் அல்லது இந்தியர்கள் கூலிப்படைச் சிப்பாய்களாக இரு தரப்பிலும் இருந்தனர். ஒரு சில ஆயிரம் உள்ளூர் குதிரைவீரர்கள் யூனுஸ்கான் தலைமையில் ஆங்கில முகாம்களைக் கொள்ளையடிக்கும் எதிர்பார்ப்பில் பிரெஞ்சுத் தளபதி லாலியுடன் சேர்ந்தனர்.  ஐரோப்பியப் போரில் (ஏழாண்டுப் ) போரில் எதிரும் புதிருமாகப் போரிட்டுக் கொண்ட ஆங்கில பிரெஞ்சுப் படைகள் தங்களது காலனியாதிக்கத் தலைவிதியை வந்தவாசிப் போரில் முடிவு கொண்ட விசித்திரமான நிகழ்ச்சி இது. இதில் களநாயகர்களும் கதையின் நாயகர்களும் ஐரோப்பியர்களே. தமிழ் மண்ணில் நடைபெற்ற இப்போரில் இந்தியர்களின் பங்கு எடுபிடித் துணை நடிகர்கள் என்னும் அளவிற்குத்தான் இருந்தது. இதனை ஒரு தேசிய அவமானமென்றும் கூற முடியும் அல்லவா?"

 

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர் முனவர்.ம.ராஜேந்திரன் அவர்கள் கவிஞர் வெண்ணிலா மேலும் சில வரலாற்று ஆர்வலர்கள் இணைந்து வந்தவாசி போரை நேற்றைய வரலாற்றிலிருந்து இன்றைய தகவலுக்காக மக்களிடம் இச்செய்தியைக் கொண்டு சேர்க்கும் வகையில் சென்ற ஆண்டு வந்தவாசிப் போர்ர் நடந்து முடிந்த 250வது ஆண்டின் நினைவாக வந்தவாசிப் போர் - 250 என்ற கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளனர். அறிஞர்களின் கட்டுரைகளும் வரலாற்று ஆர்வலர்களின் தகவல் தொகுப்புக்களும் வந்தவாசி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், இங்கு சமண மதத்தின் தாக்கம், இங்குள்ள ஆலயங்களின் சில வரலாற்றுத் தகவல்கள ஆகியனவற்றை குறிப்பிடும் வகையில் இந்த கட்டுரை தொகுப்பு நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். வந்தவாசிப் போரை மையமாக வைத்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஆவணக் காப்பகங்களிலிருந்து திறட்டபப்ட்ட வரலாற்றுச் சான்றுகள், இந்த நூலுக்கு அணி சேர்க்கின்றன. இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள மிக அழகிய தெளிவான வர்ணப் படங்கள் வரலாற்றுச் செய்திகளை விளக்க பெறும் துணை புரிகின்றன.

 

வந்தவாசி திருவண்ணாமலையின் சரித்திரத்தில் இடம் பெறும் மிக முக்கியமான் ஊர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

 

எங்களுக்கு தகவல் வழங்க வந்த திரு.இசாக் வந்த வாசி பற்றியும் வந்தவாசிப் போர் பற்றியும், இக்கோட்டையைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடும் ஒலிப்பதிவினைக் கேட்கலாம். பற்பல தகவல்கள். மிகச் சுவாரசியமான குறிப்புகள் அடங்கிய ஒலிப்பதிவு பேட்டி இது.

 

 

 

 

 

விக்கிபீடியாவில் இந்த போர் பற்றிய குறிப்பை http://en.wikipedia.org/wiki/Battle_of_Wandiwash காணலாம்.

 


 

படங்கள்: ப்ரகாஷ் சுகுமாரன், சுபா ட்ரெம்மல்

ஒலிப்பதிவு: சுபா ட்ரெம்மல்


 

படத்தொகுப்பு:

 

 

கோட்டையின் மதில் சுவர்

 

 

வந்தவாசிக் கோட்டை

 

 

சுபா (வந்தவாசி கோட்டையின் முன்)

 

கோட்டையின் முன்புறம் குளத்தில் செடிகளும் புதர்களும்

 

 

கோட்டையின் முன்புறம் குளத்தில் செடிகளும் புதர்களும்

 

 

வந்தவாசி நகர்

 

மதிய வேளையில் வந்தவாசி நகரில் ..

 

கோட்டையின் உட்புறம்

 

 

 கோட்டையின் உட்புறம்

 

 

திரு.இசாக், அவர் நண்பர் ஒருவர், திருமதி.புனிதவதி, ப்ரகாஷ்.

 

 

வந்தவாசியின் இந்த தலைமுறை..  எங்கள் பேட்டியையும் உரையாடலையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்  நிற்கின்றனர்.

 

மதில் சுவரைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் திருமதி.புனிதவதி, திரு.இசாக், சுபா.


 

 பதிவு செய்யப்பட்ட நாள்: 08.03.2011

 

 

 

 

Last Updated on Saturday, 01 October 2011 10:37
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  February 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
     1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
262728    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved