Wednesday 20th of September 2017

Home வரலாறு ஈரோடு பவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா
பவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 05 March 2012 21:45

பவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா

பவள சங்கரி திருநாவுக்கரசு

 

 

 

 

தலப் பெயர்: திருநணா (பவானி)
இறைவன் பெயர்: சங்கமேஸ்வரர்
இறைவி பெயர்:வேதநாயகி, வேதாம்பிகை, பண்ணார் மொழியம்மை

 

 

 

 

திருஞானசம்பந்தர் பதிகம்

 

1. பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு எறு அது ஏறி
அந்தார் அரவு அணிந்த அம்மானை இடம்போலும் அம்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளிஒளிரத் தேமாகங்கனி உதிர்க்கும் திருநணாவே.

 

2. நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை யேந்தி
ஈட்டும் துயரறுக்கும் எம்மான் இடம்போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசைகாட்ட முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரைசேர்க்கும் திருநணாவே.

 

3. நன்று ஆங்கு இசை மொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த
மின் தாங்கு செஞ்சடை எம் விகிதர்க்கு இடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயிலாலும் சாரல் செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடிபணியுன் திருநணாவே.

 

4. கையில் மழு ஏந்திக் காலில் சிலம்ப் அணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்கு இடம்போலு மிடைந்து வானோர்
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்கச்
செய்ய கமலம் பொழில் தேன அளித்து இயலும் திருநணாவே.

 

5. முத்து ஏர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்து ஏர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலை சூழ்ந்த
அத்தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி
தெத்தே என முரலக் கேட்டார் வினைகெடுக்கும் திருநணாவே.

 

6. வில் ஆர் வரையாக மாநாகம் நாணாக வேடம் கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா அருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருநணாவே.

 

7. கானார் களிற்று அவை மேல்மூடி ஆடு அரவு வன்று அரைமேல் சாத்தி
ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானா விதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண்டு அடியார் அடிவணங்கும் திருநணாவே.

 

8. மன்னீர் இலங்கையர்தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்
அல் நீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியும் முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திருநணாவே.

 

9. மை ஆர் மணிமிடறன் மங்கையோர் பங்கு உடையான் மனைகள் தோறும்
கையார் பலியேற்ற கள்வன் இடம்போலும் ங் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்
செய் ஆர் எரிஆம் உருவம் உற வணங்கும் திருநணாவே.

 

10. ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார் உரையகற்றும் மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சாரச்
சேடர் சிறந்து ஏத்தத் தோன்றி ஒளிபெருகும் திருநணாவே.

 

11. பல் வித்தகத்தால் திரைசூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞான சம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இம் மண்ணின் மேலே.

 


அமைவிடம்

ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

 

சிறப்பு

திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும்,  இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

 

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

 

கூடுதுறையிலிருந்து திருக்கோயில் வரும் வழியில் அமிர்தலிங்கேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. கையில் எடுப்பதற்கு வாகாக அமைந்துள்ளதால் , இந்த மேல்பாகத்தைக் குழந்தை இல்லாத தாய்மார்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு மூர்த்தியை வலம் வந்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்கின்றனர்.

 

 

காயத்ரி லிங்கேசுவரர்

அடுத்து பதுமகிரி அமைந்துள்ள, காயத்ரி லிங்கேசுவரர் சன்னதி உள்ளது. இம்மலையும் அதனை அடுத்துள்ள காயத்ரி மடுவும், காயத்ரி லிங்கமும் மிகப்பழமையானதாகும்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரிக் கரையோரம் “காயத்ரி லிங்கேசுவரர்” தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

 

மூர்த்தி - லிங்கம்,
தலம் - பதுமகிரி,
தீர்த்தம் - காயத்ரி மடு.

 

விசுவாமித்திர மாமுனிகள், இங்குதான் காயத்ரி மந்திரத்தை ஓதினார் என்பதால், இங்கிருந்து காயத்ரி மந்திரத்தை தவறின்றி ஓர் முறை ஓதினாலும், ஓராயிரம் முறை ஓதியதற்குச் சமமாக பல நன்மைகள் கிட்டும் என்று நம்பப்படுகிறது.

 

இங்குள்ள காயத்ரி மடு, நீத்தம் கற்றவர்கள் கூட, நீந்திவர இயலாமல் திணறும் அளவிலான சுழற்சி உடைய , வளைந்த பாறையால் அமைந்துள்ளது வியப்புக்குரியது. இதன் காரணமாகவே தற்போது இது மூடப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் மேற்கில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்க முக அமைப்புடன் கூடிய “சகசுவர லிங்கேசுவரர்” சன்னதி மிக அழகான வடிவமைப்பு கொண்டது. சங்கமேசுவரர் ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு மேடையின் மீது, “இலந்தை மரம்” தல மரமாக அமைந்துள்ளது. இம்மரம் நாள்தோறும், இறையனாரின் பூசைக்கு, மிகச்சுவையான ஒரு கனியைக் கொடுப்பதாகவும், குழந்தை பேறு தரவல்லது என்றும் நம்பப்படுகிறது.

 

இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் கல் தூண்களின் இருபுறங்களிலும் கல்லினால் செய்த கற்சங்கலி மிகுந்த வேலைப்பாடு உடையது. சங்கமேசுவரர் சன்னதிக்கு வடக்கில், சுரகரேசுவரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு மிளகு ரசம் வைத்து படையலிட்டு, அப்பிரசாதத்தை அருந்திவர, சுரம் (காய்ச்சல்) பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்குவதாகவும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

 

 

வேதநாயகி அம்மன் சன்னதியின் முன் மண்டபத்தில், “சிரிக்கும் சிலை” மற்றும் மிக அழகிய பல சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அச்சிலை சிரிக்கும் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை, “கல் விரிக்கும் கலை” எனப் போற்றப்படுகிறது.

 

இக்கோவிலின் ,வேதநாயகி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு மதிற்சுவரில் மூன்று துவாரங்கள் காணப்படுகின்றன. இந்த துவாரங்களின் பின்னணியில் ஒரு சுவையான கதையும் கூறப்படுகிறது. 1804ஆம் ஆண்டில் இங்கு ஆட்சியராக இருந்தவர் வில்லியம் கேரோ. தினசரி சங்கமேசுவரர் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையும், கூடுதுறையில் நீராடுவதையும், அம்மன் புகழ் பாடுவதையும் கேட்டு ஆச்சரியம் கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் மேல்மாடியில் இருந்த தம் அறையில் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், திடீரென, வேதநாயகி அம்மன் போன்று தோற்றம் உடைய ஒரு சிறு பெண் குழந்தை தம்மை எழுப்பி, கையைப் பிடித்து வெளியே அழைத்து வருவது போல் கனவு கண்டு , உடனே விழித்துக் கொண்டவர் எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் படுத்திருந்த இடத்தின் மேலிருந்த விட்டம் முரிந்து  மேற்கூரையே முற்றிலும் இடிந்து விழக் கண்கூடாகக் கண்டார். அம்பிகையே நேரில் வந்து தம் உயிரைக் காத்ததாக நம்பிய ஆட்சியர் அவர்கள், மனம் கனிந்துறுகி, தமது காணிக்கையாக அம்மனுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய , யானைத் தந்தத்தினால் ஆன, பல்லக்கு ஊஞ்சலும், ஆபரணங்களும் வழங்கியுள்ளார். ஆயினும், இவர் வேற்று மதத்தவரானக் காரணத்தால் அம்மனை தரிசிக்க அனுமதியில்லை. இதை அறிந்த தாலுக்கா தாசில்தார், அம்பிகையைத் தரிசிக்கும் பொருட்டு, மூன்று துவாரங்களை அமைத்துக் கொடுத்தார். அதன் மூலம் அம்மனை அவர் மனமார தரிசித்திருக்கிறார்.

 

வேதநாயகி அம்மன் ஆலயத்தை அடுத்து சௌந்திரவல்லித் தாயார் சன்னதியும் , ஆதிகேசவப் பெருமாள் சன்னதியும் உள்ளன. இப்புனிதமான இரு சன்னதிகளுக்கிடையில் யோக இலக்குமி நரசிம்மர் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ஆதிகேசவப் பெருமாள்  சங்கு சக்கரதாரியாக திவ்ய தரிசனம் அளிக்கிறார். இங்குள்ள வேணுகோபாலர், பாமா, ருக்குமணி உருவச் சிலைகள் சாலிக்கிராமத்தால் மிகவும் அழகுற அமைக்கப் பெற்றவைகளாகும்.

 

நூல்கள்

புலவர் கு.குமாரசுவாமி பிள்ளையவர்களால் கூடற்புராண வசனம் என்னும் நூலும், பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலும் இயற்றப்பட்டுள்ளது. ஓலைச்சுவடியிலிருந்து வேதநாயகியம்மன் சதகம் என்னும் நூலும் கிடைத்துள்ளது. கலம்பகம், உலா போன்ற நூல்களுடன், திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர் அவர்கள் இயற்றிய பவாநி வேதநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் பவானி தலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

 

“நணா” எனும் தலத்திற்கு உடைய இறைவன் “நண்ணாவுடையார்” எனபடுகிறார். ”மிகத்தொண்மையான துவாரபாலகர் கற்சிலைகள் கொண்ட பவானிச் சிவாலயத்தில் முற்கால அரசர்கள் பலருடைய கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். இங்கு கிடைக்கும் முதல் கல்வெட்டு விசய நகர மன்னன் கிருட்டிண தேவராயனின் (1509 - 1529) கொங்கு மண்டல நிர்வாகி பாலதேவராசன் காலக்கல்வெட்டுத்தான் . 1640 முதல் கெட்டி முதலிகளின் கல்வெட்டுகளும், பிற கல்வெட்டுகளும் உள்ளன. “ என்கிறார் புலவர் கல்வெட்டு ராசு அவர்கள்.

 

மேலும் அவர், 1640, 1645, 1741ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் நண்ணாவுடையார் , நண்ணாவுடையார் சுவாமி, பண்ணார் மொழியம்மை, பண்ணார் மொழியம்மன் என்றே குறிக்கப்படுகிறது, என்கிறார்.

 

11.01.1840-ல் கலெக்டர் வில்லியம் கேரோவின் எழுத்துப் பொறிப்பில் “ஸ்ரீ பவாநி கூடல் வேதநாயகி அம்மன்” என்ற தொடரைக் காணுகின்றோம். தலைதடுமாறிக் கலைந்து கிடந்த வேதங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் நான்றா - புராண ஐதீகத்தால் “வேதகிரி” என்றும், அம்மன் வேதநாயகி என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். பண்ணார் மொழியம்மையின் பெயர் வேதநாயகியாக மாற்றம் பெற்றதற்கு “வேதகிரியே” காரணம் என்கிறார். நாரதர் செய்த வேள்வியின் சாம்பலால் இம்மலை ஏற்பட்டதாகக் கொங்கு மண்டலச் சதகம் கூறுகிறது. நண்ணாவுடையார் எழுந்தருளியுள்ள பவானியை “நண்ணாவூர்” எனக் குறிக்கும் வழக்கமும் முன்பு இருந்துள்ளது.

 

 

திருவிழா : மார்கழி, தை மாதங்களில் பவானித் திருமுறைக் கழகத்தினரால் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், ஆடிப் பதினெட்டுப்பெருக்குத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கரைக்கப்படுவதும் பெருகி வருகின்றன. நீண்ட ஆயுளுக்கும், திருமணத்தடை நீங்கவும், இங்கு வழிபடுவதும் வழமை.

 

பவானி அருள்மிகு வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேசுவரப் பெருமான் மற்றும் அருள்மிகு சௌந்தரவல்லித் தாயார் உடனமர் ஆதிகேசவப் பெருமாள் திருவருளால் இத்தலம் மிகச் சிறந்து விளங்குவதோடு, மக்கள் பல்வேறு நலங்களும் பெற்று வாழ்கின்றனர்.

 


 

Last Updated on Monday, 05 March 2012 21:59
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  September 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
      1  2  3
  4  5  6  7  8  910
11121314151617
18192021222324
252627282930 

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved