Friday 20th of April 2018

Home கல்வெட்டுகள் சென்னைக் கல்வெட்டுகள்
சென்னைக் கல்வெட்டுகள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Friday, 18 February 2011 22:49

சென்னைக் கல்வெட்டுகள் - சில குறிப்புகள்
புலவர் செ. இராசு

 

 

சென்னைப் பெருநகரத்திலும், அதை ஒட்டிய பல பகுதிகளிலும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. கால வெள்ளத்தில் அவை சிதைந்து அழிந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை மையத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவினர் 1903, 1923, 1929, 1942- ஆம் ஆண்டுகளில் படியெடுத்துள்ளனர். 1903- ஆம் ஆண்டு படியெடுத்தவை மட்டும் அச்சாகியுள்ளன. பல்லவ மன்னன் தந்திவர்மன் காலம் முதல் [கி.பி.808] சென்னையில் தொடர்ந்து கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. பிற்காலச் சோழர், பாண்டியர், விசயநகர அரசர்கள், பொத்தப்பிச் சோழர், நாயக்கர், கிழக்கிந்தியக் கம்பெனியினர் காலக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. புகழ்பெற்ற இராசராசன் மெய்க்கீர்த்தி இரண்டு இடங்களில் கிடைக்கிறது.


தமிழ், வடமொழி, தெலுங்கு, ஆங்கிலம், இலத்தீன், உருது மொழிகளில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இருமொழிக் கல்வெட்டுக்களும், நான்கு மொழிக் கல்வெட்டுக்களும் சில இடங்களில் உள்ளன. 1967- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் சென்னையில் உள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் தொகுத்துச் "சென்னை மாநகரக் கல்வெட்டுகள்" என்னும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

 

துரையும் பெரியதுரையும்
ஐரோப்பியநாட்டு உயர் அலுவலர்கள் 'துரை' என்றும், கவர்னர் போன்றவர்கள் 'பெரியதுரை' என்றும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

 • லார்ட் ஆரிஸ் துரை [LORD HARRIS]
 • சி.யி. பேபர் துரை [C.E.FABER]
 • எச். இச்சின்ஸ் துரை [H. HITCHIN]

 

'சென்னைப் பட்டணத்தின் பெரியதுரை மேசர் செனறல் சார் ஆற்ச்சை பெல்கேமல்' என்று கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சில இடங்களில் இச்சொல் 'தொரை' என்றும் எழுதப்பட்டுள்ளது. துரையின் மனைவி 'துரைச்சாணி' எனப்பட்டார். கல்வெட்டில் 'சாணி' என்ற சொல் மனைவியைக் குறிக்கும்.

 

கி.பி. ஆண்டு
கி.பி. ஆண்டுகளைக் குறிக்க 'இங்கிலீஸ் வருஷம்' என்று பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 'நம்முடைய கர்த்தர் பிறந்த 1786' என்று எழுதப்பட்டுள்ளது.

 

தொண்டைமான்
சங்க கால இளந்திரையனும் அவன் மரபினரும், புதுக்கோட்டை- அறந்தாங்கி மன்னர்களும், கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினரும், சில பாளையக்காரர்களும், அரசனின் சிறப்புப் பெயர் பெற்ற அலுவலர் சிலரும் 'தொண்டைமான்' என்று அழைக்கப்பட்டனர். ஆவணங்களிலும், இலக்கியங்களிலும் இப்பெயரே பயின்று வந்துள்ளது. ஆனால் சென்னைக் கல்வெட்டுக்களில் மட்டும் 'தொண்டமான்' 'தொண்டமண்டலம்' என்றே பயின்று வந்துள்ளது. இராமலிங்க வள்ளல் பெருமான் 'தொண்ட மண்டலம்' என்பதே சரியான தொடர் என எழுதியுள்ளார்.

 

உப்புத் தயாரிப்பு
திருவல்லிக்கேணிக் கடற்கரையில் உப்புத் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இரண்டு திருவல்லிக்கேணிக் கல்வெட்டுகளில் உப்புத் தயாரிக்கும் இடம் சோழர் காலத்தில் இருந்துள்ளமை குறிக்கப்படுகிறது. அதற்கு 'விக்கிரம சோழப் பேரளம்' என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.

 

கல்வெட்டுத் தமிழ்
சென்னைக் கல்வெட்டுகளில் சில சொற்கள் அரிதாக வழங்கப்பட்டுள்ளன.

 

 • கல்வெட்டில் பயின்று வரும் சொற்கள் - அதன் பொருள்
 • ஞாதிகள் - பரம்பரை
 • அத்து - எல்லை
 • குதுவை [கொதுவை] - அடைமானம்
 • விற்குதல் - விற்றல்
 • வாராவதி - பாலம்
 • சிவன்படவர் - செம்படவர்
 • கெற்பசுதாகரன் - மகன்
 • பனிநீர் - பன்னீர்
 • மேலண்டை வாடை - மேல்புறம்
 • பாட்டைசாரி - வழிப்போக்கர்கள்

 

கோயில் பலகாரம்


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 1568- ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டொன்றில் புளியாதரை [புளியோதரை], பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை ஆகிய பலகாரங்கள் கூறப்படுகின்றன. அவை செய்யத் தேவையான பொருள்களையும் அக்கல்வெட்டுக் கூறுகிறது [பருப்புப் பொங்கல் - அரிசி, பயறு, வெல்லம், நெய், தேங்காய்: அப்பம் - அரிசி, பருப்பு, வெல்லம், எண்ணெய்: தோசை, அரிசி, உளுந்து, பருப்பு, எண்ணெய்].

 

ஊர் எல்லை


'சென்னைப்பட்டணத்திலிருக்கும் துளுவ வெள்ளாளரில் கண்டமகாரிஷி கோத்திரம் ஸ்ரீபெரும்புதூர் திருமணம் செங்கற்சூளை முத்துமுதலியார் குமாரன் அருணாசலமுதலியார்' பெயரில் அவர் மனைவி அலமேலம்மாளும், மகன் முத்து முனியப்ப முதலியாரும் அருணாசயீலசுவரர் கோயிலைக் கட்டினர். "அருணாசயீலசுவரர் ஸ்தூபி கோபுரம் தெரியிற வரைக்கும் அருணாசலசுவரன் பேட்டை' என்று வழங்கப்பட வேண்டும் என்று கல்வெட்டில் பொறித்துள்ளனர்.

 

ஆழ்வாரும் அடியாரும்


பதினாறாம் நூற்றாண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமழிசையாழ்வார், திருக்கச்சிநம்பிகள் ஆகியோரின் உருவங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. திருமழிசையும், திருக்கச்சி நம்பிகள் [கி.பி.1009] அவதாரம் செய்த திருத்தலமான பூவிருந்தவல்லியும் சென்னையின் அருகே இருப்பது குறிப்பிடத் தக்கது. மயிலாப்பூரில் திருப்பூம்பாவை உருவம் பிரதிட்டை செய்யப்பட்டதை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. பூம்பாவை மயிலாப்பூரைச் சேர்ந்தவர். திருஞான சம்பந்தரால் எலும்பு வடிவிலிருந்து பெண்ணாக்கப்பட்டவர்.

 

ஊர் பெயர்கள்


சென்னை மாநகரின் பல பகுதிகள் தனித்தனி ஊர்களாக முன்பு இருந்துள்ளன. அவற்றின் சில பெயர் வடிவங்கள் வேறு வகைளில் காணப்படுகின்றன.

 

1] அயனாவரம்


அயனாவரம் - அயன்புரம் என்று அழைக்கப் பெற்றுள்ளது. 'ஜெயங்கொண்ட சோழமண்டலத்துப் புழல் கோட்டமான விக்கிரமசோழ வளநாட்டுத் துடர்முள்ளிநாட்டு அயன்புரம்' என்பது கல்வெட்டுத்தொடர். அயன்புரம் வேதம்வல்ல அந்தணர்கட்கு அளிக்கப்பட்ட 'சுரோத்திரிய கிராமம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

 

2] பெரம்பூர்
பெரம்பூரின் பண்டைய பெயர் 'பிரம்பூர்' என்பதாகும். 'காஞ்சி மண்டலத்தைச் சேர்ந்த புழல்க்கோட்டம் பிரம்பூர் நாட்டில் சென்னைப் பட்டணம் பெத்துநாயக்கன் பேட்டை' என்பது கல்வெட்டுத் தொடர். பெரம்பூர் தனி நாடாக இருந்துள்ளது.

 

3] வேளச்சேரி
வேளச்சேரி 'சினசிந்தாமணிச் சதுர்வேதமங்கலம்' என்று பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

 

4] பல்லாவரம்
பல்லவபுரம், பல்லவர்புரம் என்று பல்லாவரம் அழைக்கப்பட்டது. 'பல்லவர்புரமான வானவன் மாதேவிச் சதுர்வேத மங்கலம்' என்று கல்வெட்டில் அவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.

 

5] வியாசர்பாடி
வியாசர்பாடி - வைஷ்ஷாறுபாடி, வைஷ்ஷாறுக் கிராமம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வியாசரும் அவ்வூருக்கும் தொடர்பு இல்லை.

 

6] சைதாப்பேட்டை
சைதாப்பேட்டைக்குப் பெயர் சையதுபேட்டை என்று சிலர் கூறுவர். ஆனால் கல்வெட்டில் 'இரகுநாதபுரம் என்கிற சைதாப்பேட்டை' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

 

7] எழும்பூர்
எழும்பூரைக் கல்வெட்டுக்கள் 'எழுழூர்' என்று குறிக்கின்றன. 'புலியூர்க் கோட்டம் எழுமூர் நாட்டில் திருவல்லிக்கேணி' என்பது கல்வெட்டுத் தொடர்.

 

8] புரசைவாக்கம்
புரசைவாக்கம் - 'புரசபாக்கம்' என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் 'புரசபாக்கம் கிராமம்' என்ற தொடர் காணப்படுகிறது.

 

9] சென்னை
பெரும்பாலும் எல்லாக் கல்வெட்டுகளும் 'சென்னப்பட்டணம்' என்றே குறிக்கின்றன. சில கல்வெட்டுக்கள் 'சென்னைபுரி' எனக் குறிக்கிறது.

 

10] மயிலாப்பூர்
மயிலாப்பூர், மயிலார்ப்பில், மயிலார்ப்பு என்று மயிலாப்பூர் குறிக்கப்படும் எல்லா இடங்களிலும் 'திரு' என்று அடைமொழி சேர்த்தே குறிக்கப்பட்டது. [அல்லிக்கேணி - திருஅல்லிக்கேணி என அழைக்கப்பட்டது போல] இலக்கியங்களில் மயிலாபுரி, மயிலை என இவ்வூர் குறிக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் தேவாரம் 'மாமயிலை' என்று கூறும்.

 

11] திருவேற்காடு
சமயச் சிறப்புள்ள இடங்களுக்குத் திரு என்ற அடைமொழி சேர்த்துக் கூறப்படுவது வழக்கம். ஆனால் திருவேற்காடு - 'வேற்காடு' என்று திரு அடைமொழி இன்றியும் அழைக்கப்பட்டுள்ளது.

 

12] திருவான்மியூர்
கல்வெட்டுக்களில் 'செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டுக் கோட்டூர் நாட்டுத் திருவான்மியூர் என்ற குறிப்புக் காணப்படுகிறது.

 

13] நுங்கம்பாக்கம்
நுங்கம்பாக்கத்தின் பழம் பெயர் 'பொம்மபுரம்' என்பதாகும். கல்வெட்டுக்களில் 'பொம்மபுரத்திற்குப் பிரதிநாமமான நுங்கம்பாக்கம்' என்ற தொடர் காணப்படுகிறது.

 

14] செம்மஞ்சேரி
செம்மஞ்சேரியை ஒரு கல்வெட்டு 'செம்மண்பாக்கம்' எனக் குறிக்கிறது.

 

பச்சையப்ப முதலியார் கல்வெட்டு


காஞ்சீபுரம் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாள் என்பவருக்கும் பெரியபாளையத்தில் 1754 ஆம் ஆண்டு பச்சையப்பர் பிறந்தார். பிறக்கு முன்னரே தந்தையாரை இழந்தார். ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் ஐந்து வயது பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமிமேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார். பூச்சியம்மாள் நெய்த வாயல் பெளனி நாராயண பிள்ளையிடம் சென்று ஆதரிக்க வேண்டினார். துவிபாஷியான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர் பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்கவரும் ஐரோப்பியர்கட்குத் துவிபாஷியானார். பின் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் துவிபாஷியாக இருந்தார். பின் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு துவிபாஷியானார். மிகப்பெரும் பொருள் சேர்த்தார். சகோதரியார் சுப்பம்மாள் மகள் ஜயம்மாளை மணந்தார். வாரிசு இல்லாத பச்சையப்பர் 1794 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் நாள் காலமானார். அப்போது இவர் சொத்து 42080ரூ பெறுமான கம்பெனிப் பத்திரங்களும், 200000 ரூபாயுமாகும். கோர்ட்டில் 47 ஆண்டுகள் இருந்த இப்பணம் பின் 447267 ரூபாயாயிற்று. பச்சையப்பர் உயில்படி பல கோயில்கட்குக் கொடை கொடுக்கப்பட்ட பின் அவர் விருப்பப்படி 'வித்யாசாலை' ஏற்படுத்தப்பட்டது. அதுவே இன்று பச்சையப்பர் பெயரில் பல நிறுவனங்களாக ஆலமரம் போல் படர்ந்துள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே 'வித்யாசாலை' பற்றிய கல்வெட்டு உள்ளது.

 

'மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்காநின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும், இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு 5 வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை யேற்படுத்தப்படும்' என்பது அக்கல்வெட்டின் ஒரு பகுதியாகும்.

 

எல்லீசன் கல்வெட்டு


சென்னை மாவட்ட ஆட்சியராகவும், பண்டாரத் தலைவராகவும் விளங்கியவர் ·பிரான்சிஸ் வைட் எல்லீஸ். அவர் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்ற அறிஞர். மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவர் திருக்குறள் அறத்துப்பாலை 1812ல் மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

 

அவர் தம் உரையில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூற் பகுதிகளை மேற்கொள் காட்டியுள்ளார். கிடைக்காமல் அழிந்துபோன வளையாபதியிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.

 

1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.


வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன்
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன்
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில்
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம்
கலிங்க துளுவ கன்னட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம்
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.


இவர் பண்டாரத் தலைவராக இருந்த காரணத்தால் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார்.


இவர் கல்லறைக் கல்வெட்டிலும்
'திருவள்ளுவப்பெயர்த் தெய்வம் செப்பிய
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.
என்று திருக்குறள் மொழிபெயர்ப்புச் செய்தி கூறப்படுகிறது.

 

சென்னை புனிதமேரி தேவாலயக் கல்வெட்டு


தஞ்சையில் புகழ்பெற்ற கிறித்தவப் பாதிரியாக விளங்கியவர் கிறிஸ்டியன் ·பிரடெரிக் சுவார்ட்ஸ் அவர்கள் [1726-1798]. கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் ஐதர்அலி- திப்புசுல்தானுக்கும் சமரசம் ஏற்பட முயற்சி செய்தவர். தஞ்சை மராட்டிய வம்ச இரண்டாம் சரபோசி மன்னரை [1798-1832] வளர்த்து ஆளாக்கி அரசராக்கியவர். கிழக்கிந்திய ஆங்கிலக் கம்பெனியாரிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஸ்வார்ட்ஸ் நினைவாக ஒரு ஆங்கிலக் கல்வெட்டைக் கம்பெனியார் மேற்கண்ட தேவாலயத்தில் 1806ஆம் ஆண்டு [75 வரிகள் உள்ள கல்வெட்டு] பொறித்தனர். அக்கல்வெட்டில் சுவார்ட்ஸ் பாதிரியாரின் பல்வேறு பணிகள் பாராட்டப்படுகின்றன. ஆங்கிலேயர்களைக் கொல்வதையே பொழுதுபோக்காகக் கொண்ட ஐதர் அலி,
"To Permit the venerable Father Swartz. To pass unmolested, and show him respect and kindness. For he is a Holyman, and means no harn to my government"
என்று சுவார்ட்சு பற்றிக் கூறிய தகவல் இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.

 

சென்னைச் சமூகம்


அய்யர், அய்யங்கார், ஆயிரவாள், கிராமணி, சாணன், துளுவவேளாளர் [நல்வேளாளர், முதலியார்], நகரத்தார் [செட்டியார்], நாயக்கர், பஞ்சாளத்தார் [ஆசாரிகள்], பிள்ளை, மன்றாடி [கோன்], முத்தரையர் முதலிய பல சமூகங்கள் பற்றிய குறிப்புகள் சென்னைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

 

பல கிறித்தவப் பெருமக்கள் [ஐரோப்பியர்கள்] குறிக்கப்படுகின்றனர். இன்றைய சாந்தோம் பகுதியில் பல சமணர்கள் வாழ்ந்துள்ளனர். அஞ்சுவண்ணம் வணிகக் கிராமம் குறிக்கப் பெறுவதால் பல இசுலாமியர் வாழ்ந்த விபரம் தெரிகிறது.

 

நாணயங்களும் அளவும்


ரூபாய், பொன், பணம், வராகன், கெட்டி வராகன், மாடை, கழஞ்சு போன்ற பல நாயணங்கள் குறிக்கப்படுகின்றன. 125 குழி கொண்டது ஒரு மனை என்ற நில அளவு வழங்கியுள்ளது.

 

சில செய்திகள்

 • * வழிப்போக்கர்கள் பிராமணரும், சூத்திரரும் தனித்தனியாகச் சமையல் செய்யச் சில கோயில்களை ஒட்டிய இடம் ஒதுக்கப்பட்டிருந்தன.
 • * சிலர் கோயில் அறக்கொடைகளை 'யீசுபரன் புத்தி குடுத்தமட்டும்' நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர்.
 • * கோயில் கொடைகளுக்குத் தீங்கு செய்பவர்கள் 'கவர்ன் மெண்டால் தண்டிக்கப்படுவர்' என்று கூறப்பட்டுள்ளது.
 • * உயில் 'மரண சாசனம்', 'மரண சாதனம்' எனப்பட்டது.
 • * நுங்கம் பாக்கம் 'வான் ஆய்வுக் கூடம்' [Observatory] 24.11.1792 அன்று கம்பெனி அளித்த இடத்தில் தொடக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, லத்தீன் ஆகிய ஐந்து மொழிகளில் அதைப்பற்றிய கல்வெட்டு உண்டு. 2 1/2 டன் எடையுடன் 15 அடி உயரத்தில் தூண் நிறுவப்பட்டுள்ளது. தமிழில் 'ஆகாசத்திலிருக்கின்ற உருவங்களைக் காணுகிறதற்கு அனுகூலமாக இந்தக் கூடம்' கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 • * பல இடங்களில் மடங்கள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் போன்ற அற நிறுவனங்கள் இருந்தன. தண்ணீர்ப் பந்தல்களில் தண்ணீர் மட்டுமல்ல; உப்பு, ஊறுகாய், நீராகாராம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாலங்கள் பல கட்டப்பட்ட விபரங்கள் தெரிகின்றன.

துணை நூல்கள்:
1. Annual Reports on Indian Epigraphy 1903, 1923, 1929, 1942
2. South Indian Inscriptions Vol. VIII.
3. Epigraphia Indica Vol. VIII P.290.
4. Antiquities from Santhome and Mylapore. Part I, II
5. சென்னை மாநகர்க் கல்வெட்டுகள் - இரா. நாகசாமி [1970]
6. தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் - புலவர் செ. இராசு [1987]

 

தொகுப்பு புலவர். செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,
(முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு தொல்லியல்துறைப் பேராசிரியர், துறைத் தலைவர்)
கொங்கு ஆய்வு மையம்,
3, பி. வெங்கடேசுவராநிவாஸ்,
13/2, வள்ளியம்மை தெரு, நாராயணவலசு,
ஈரோடு - 638011.
தொலைபேசி: 220940


தமிழக வரலாற்றுப் பேரவையின் 8ஆம் கருத்தரங்கு, சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வியின் வரலாற்றுத்திரை சார்பில் நடந்தபோது 13, 14-10-2001 அன்று அளிக்கப்பட்ட கட்டுரை. 
 
 

 

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
30      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved