Friday 20th of April 2018

15 - காஞ்சிபுரம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 05 June 2010 21:30

 

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ---- ௧௫ (15)

 

 

தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட  பல்லவ  நாடு அதற்குமுன்,  முற்காலச் சோழர் ஆட்சியிலும் அதையே தலைநகராகக் கொண்டு சிறப்புற விளங்கி இருந்திருக்கிறது. அப்போதும்  அதற்குத் தொண்டை நாடு என்றுதான்  பெயர் இருந்திருக்கிறது.  ஏறத்தாழ 700 ஆண்டுகள்  பல்லவர்கள்  தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும், அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்தும் அவர்கள் யார்?  எங்கிருந்து வந்தவர் என்பன போன்ற கேள்விகட்கு  விடையளித்தல் இன்னமும் சிரமமானதே.

 

இது குறித்துப் பல்வேறு கருத்துக்கள்  இன்னும் ஆராய்ச்சியாளர் மத்தியில் விளங்கி வருகின்றன. இந்திய வரலாற்று  நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு'  என்னும் நூலின் முதற் பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஃலவர் என்னும் பாரசீக  மரபினர்' என்று கூறுகிறார்; பிறகு அவரே மறுபதிப்பில் தம் கூற்றை மறுக்கிறார். ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர்  தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்   என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக்  கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர்   எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் பலருண்டு.


மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று, அவர்தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்டை மண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும்.  வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத்தில் தொண்டை மண்டலம் எனப்பட்டது. அது அருவா நாடு, அருவா வடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது.  அருவா நாடு  என்பது காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை  இருந்த நாடாகும். இது குன்று களும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி  முதலிய மலையூர் களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி'  (மாகாணம்) எனப்படும். கரிகாற்சோழன் காடு கெடுத்து நாடாக் கினான், விளை நிலங்களை ஆக்கினான். ஏரி  குளங்களை வெட்டு வித்தான்; தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்;  நாகரிகத்தைத் தோற்றுவித்தான் என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறு கின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர்  ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்க நூல் களில் காணக் கிடைக்கின்றது.  திரையன் எனும் மன்னன் அருவா வட தலை நாட்டை ஆண்டபோது,  இளந்திரையன் அருவா நாட்டை  ஆண்ட னன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும் பாணாற்றுப் படையில் சிறப்பிக்கப்படுகிறான்.  இத்தனை மாறுபாடுகள் கொண்ட கருத்துக்கள் உலவும்    தொண்டை  மண்டலம் பெயரில் ஒரு மடம் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறது.

 

எங்கள் பட்டியலில்
*gnanaprakasham ,
thondai mandala aathinam
57, ubathalaivar brama sivam st ,
kanchipuram -2*
என ஒரு முகவரி இருந்தது .அதிக சிரமமில்லாமலேயே, அதைத் தேடிக் கண்டுபிடித்தோம்; .
மிகப்பெரிய விஸ்தாரமான கட்டிடம் ! கூடம் கூடமாக நீண்டது கட்டிடம் .


எத்தனை பெரிய மாளிகை என வியந்து கொண்டே மேலே சென்றோம்.  கடைசியில் இருந்த ஒரு கூடத்தில் தனிமையில் சாயந்தபடி அமர்ந்திருந்தார்  ஆதீனம். இத்தனை பெரிய மாளிகையில் இப்படித் தனியே இருப்பது எத்தனை கொடுமை என எண்ணியவாறே  ஆதீனத்திற்கு வணக்கம் கூறி எங்களைப் பற்றிய அறிமுகம் நிகழ்த்தினோம்.


அங்கே ஒரு சாரியில் இருந்த மர அடுக்குகளில் அடுக்கடுக்காக   வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகள் எங்கள்  கண்ணையும் கருத்தையும்  சுண்டி இழுத்தன. ஓரக்கண்ணால் அவற்றைப் பார்த்தபடி ஆதீனத்திடம் பேசிக்கொண்டிருந்தோம்.  ஆதீனம் எங்களைச் சற்று அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்று தலையில் அணியும் உருத்திராக்க முடியையும், கழுத்தில் அணியும் மாலைகளையும் அணிந் தபடி திரும்பி வந்து அவரது அரியாசனத்தில்  அமர்ந்தார்.

 

அவரது புதிய கோலம் அவரது பெருமையையும், பாரம்பரியத்தையும் சொல்லா மலேயே சொல்லும் விதத்தில் அமைந்திருந்தது.  எங்கள் பேச்சிலும் ஒரு வினயமும், மரியாதையும் வந்தது. ஆதீனத்தின் பேச்சிலும் ஒரு கம்பீரம் வந்தது. அந்த அரியாசனத்திற்குரிய கொடை குணமும், அற வழிச்சீலமும்  ஆதீனத்திடம் தானே வந்துவிடும்  என்னும் நம்பிக்கையில்  நாங்களும் பேச ஆரம்பித்தோம்.  ஆதீனமும் எங்களுடன் மிகப் பரிவுடன் பேசினார். அவர் இந்த ஆதீனத்தின் 232 வது சந்நிதானம்.  நாங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுவடி வரிசைகளைச் சுட்டிக் காட்டி  அவற்றை அருகில் சென்று கையில் எடுத்துப் பார்க்கலாமா  எனக் கேட்டோம்

 

 

 

ஆதீனமும் சம்மதித்துப் பூட்டியிருந்த அல மாரிகளைத் திறந்து விட்டார்.  ஆவலுடன் அருகில் பாயத் தயாரா னோம். அப்போது ஆதீனம் அவை அத்தனையும் அவர்கள்  மடத்தின் கணக்கு வழக்குப் பற்றியது என்று கூறியதும், உடன் வந்த முனைவர் கோவை  மணிக்குச் சற்று சுவா ரஸ்யம் குறைந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது ஏதாவது பழந்தமிழ் இலக்கியம் சிக்காதா என்று. எனினும் கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமில்லாமல் அருகில் சென்று அவற்றைப்  பார்த்தோம். எங்களுக்கு வியப்பளிக்கும் விதமாக அதில் இருந்த மூன்று பெரிய சுவடிக்கட்டுகள் தேவாரம், நிகண்டு முதலியவையாக இருந்தன. அவற்றை மட்டும் தனியே  எடுத்து வந்து ஆதீனத்திடம் காட்டினோம்.

 

 

 

 அவர் "நீங்களே பாருங்கள், நாங்கள் இந்த சுவடிகளை எத்தனை சீராக வைத்திருக்கிறோம்  என்று ? இவற்றை நிபுணர்களின் துணையுடன் அவ்வப்போது சுத்தி செய்து எண்ணெய் இட்டு வைத்திருக்கிறோம்; எனவே உங்கள் துணை தொண்டை மண்டல ஆதீனத்திற்குத் தேவையில்லை " என்றார்.  உண்மையிலேயே ஓலைச் சுவடிகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தன.  எனவே எங்கள் முதல் அஸ்திரம் கூர் மழுங்கிப்போனதால்  அடுத்ததை  எடுத்தோம் .


"ஐயா, இவை சுவடிகளாக இங்கேயே இருந்தால் ,குடத்தில் இட்ட விளக்கு போல் ஆகிவிடுமே !  மேலும் காலத்தை வென்ற இந்தச் சுவடிகளில் உள்ளதைப் பாதுகாக்க வேண்டுமானால் இவற்றை  மின்னாக்கம் செய்து கணினி வழிப் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும் "
இதைக்கேட்டதும் அதற்க்கு உடன்பட்ட ஆதீனம் ,"இந்த நூல்களை நீங்கள் இங்கேயே வந்து
மின்னாக்கம் செய்து கொண்டு போவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
" என்றார்.

 

 


முனைவர் கோவை மணியும் இந்த மூன்று கட்டுகளையும்  விரைவில்  வந்து மின்னாக்கம்
செய்து கொள்வதாக உறுதி கூறினார் .


ஆதீனனம்  பிறகு எங்களுக்கு திருநீறு அளித்து எங்கள் தேடுதல் முயற்சி
நல்லவித்தமே நடைபெற ஆசி கூறினார் .


தமிழ்நாட்டில்  நாடி சாஸ்திரம்அல்லது  ஏடு பார்த்தல் என்று ஒரு கலை பல
இடங்களில் வழங்கி வருகிறது.  மூன்று காலத்தையும்  ஜாதகருக்குக் கூறும் அந்த ரிஷிகளின்  கூறப்படும்  பலன்கள்  பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கின்றன.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும்  எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும், அவர்களின் ஜாதக  அமைப்புகளைப் பற்றியும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர் என நம்பப்படுகிறது . ஜாதகரின்  பெயர், ஊர், பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டுஅந்த ஏடுகளில் காணப்படும் எனக் கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் காகபுசுண்டர் நாடி, கெளசிக நாடி, சப்த ரிஷி நாடி, அகத்தியர் நாடி போன்றவை மிக முக்கியமானவை.  இந்தப் பிரபஞ்சத்தில்  நடைபெறும் அனைத்து   செயல்களும் ஓர் ஒழுங்கு முறையும் நியதியும்,கட்டுக்கோப்பும் கொண்டே விளங்கு கின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும்  அனைத்துப் பொருள்களும், அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன்  ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்கு கின்றன. காலதத்துவத்தின் ரகசியங்களையும்  "Cosmic  Order"  எனப்படும் பிரபஞ்ச நியதியையும் தன்னுள்ளடக்கிக் காட்டும்  நூல்களில் நாடி சாஸ்திரமும் ஒன்று என நம்பப்படுகிறது; ஆனால் இந்த நாடிகள் குறிப் பிட்ட சில ஊர்களிலேயே மிகப் பிரபலமாக வழக்கத்தில் உள்ளன.


நாங்கள் இதுவரை பார்த்த மூன்று மாவட்டங்களில் சுமார் இருபது நாடி ஜோதிடர்களின் முகவரிகள் இடம் பெற்றிருந்தன; ஆனால் இவற்றில் பெரும்பாலானோர் அவர்கள் வைத்திருந்த சுவடிகளை அருகில்  சென்று பார்ப்பதையோ ,அதைத் தொடுவதையோ விரும்ப வில்லை. எங்களை முதலில் இடத்தை விட்டுக் கிளப்புவதிலேயே குறியாக இருப்பார்கள்.  எனக்கு இது பற்றிய உண்மையை அறியும் வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் நீண்ட காலமாக உண்டு .இதன் உண்மை அறியவே நானும் நிறைய நாடி ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்ப்பது போல் தொடர்ந்து சென்று நட்பாக இருக்க முயன்றதுண்டு; ஆயினும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் அவர்கள் தங்கள் ரகசியங்களை காப்பதிலேயே  குறியாக இருந்தனர்; ஆனால் இந்த ஓலைச் சுவடி தேடும்  படலத்தில் ஒரு நாணயமான, திறந்த மனம் கொண்ட ஜோதிடரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது .அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக எழுதுகிறேன் .

 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Last Updated on Friday, 11 June 2010 16:24
 

இணைப்புகள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
30      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved