
| 23 - நாமக்கல் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Monday, 14 June 2010 21:08 |
|
ஓலைச்சுவடிகள் தேடிய படலம் - ௨௩ (23)
உண்மையில் நாங்கள் பெருமாள் முருகனை சந்திக்கவில்லை எனில் எங்களுக்கு "இ " எனும் பெயரில் ஆரமிக்கும் பேராசிரியையைப் பற்றித் தெரிந்திருக்காது; நாங்கள் தேடிப்போகும்போது பெருமாள் முருகனும் வழியிலேயே வந்து எதிர்கொண்டார். பேராசிரியையைப் பார்த்திராவிட்டால் நாககிரிப் பண்டிதரிடம் அவ்வளவு ஓலைச் சுவடிகள் இருப்பதும் எங்களுக்குத் தெரிந்திராது; அவரைப் பற்றிய ஒரு குணச் சித்திரமும் எங்களுக்கு முன்னேயே கிடைத்து விட்டது; எனவேதான் அவரது மகனின் மிக அலட்சியமான மறுத்தலையும் எங்களால் செவ்வனே எதிர்கொள்ள முடிந்தது. எல்லாம் இறைவன் காட்டிய வழி என மகிழ்ச்சி கொண்டோம்.
இப்படித்தான் பாருங்கள், இன்னொரு சம்பவமும் நடைபெற்றது.
நாமக்கல்லில் கணபதி நகர் என்ற பகுதியில் மாதவன் என்ற ஒரு முகவரியைத் தேடிக்கொண்டிருந்தோம். பலரிடமும் எல்லா வழிமுறையிலும் விசாரித்தும் யாருக்கும் நாங்கள் தேடிய முகவரியைக் காட்ட முடியவில்லை .
சாமியாரிடம் போய்ச் சேர்ந்தால், அவர் ஒரு சிறிய குடிலில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால் அவர் பெயர் மாதவன் இல்லை. அவர் தம்மை ஆதி மூலம் ஸ்வாமிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் வருபவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி, மருளும் குழந்தைகளுக்கு மந்திரங்கள் செய்து தோஷங்கள் நிவர்த்தி செய்து வருவதாகக் கூறினார். சமுதாயத்தில் இத்தகையோருக்கான இடம்தான் எப்போதும் உண்டே ! வேதாந்தங்கள், தத்துவங்கள் எனப் பேச்சு நீண்டதும், தம்மிடமும் ஞான சைதன்யம் எனும் ஓர் ஓலைச் சுவடி இருப்பதைக் கூறினார். அதைப் பெருமையுடன் எங்களிடம் காட்டினார். இதைத்தானே நாங்கள் எதிர் பார்த்தோம். எங்களது அடுத்து வந்த பேச்சுகள் தஞ்சைக்கு இந்த ஓலைச் சுவடிகள் கொடையாகக் கொடுக்கப்பட்டால் எப்படிச் சீராகப் பாதுகாக்கப்படும் என்பதைப் பற்றி நீண்டது . சாமியார்தான் எப்போதோ எங்கள் எண்ண அலையில் வந்து விட்டாரே! அவரும் மன மகிழ்ச்சியுடன் ஓலைச் சுவடிகளை எங்களுக்குத் தரச் சம்மதித்தார்.
ஒரு ஓலைச் சுவடியை அன்புடன் அளிக்கும் சுவாமிகள் - அவர் மனைவியும் படத்தில்
அடுத்ததாக குருசாமிப் பாளையத்தில் ஒரு நாவிதரிடம் நிறைய வைத்தியச் சுவடிகள் இருப்பதாகப் பேராசிரியை சொன்னதாக நான் எழுதியதும், எனக்கு ஒருவித அச்சம் உண்டானது . இவ்வாறு எழுதியது யார் மனத்தையாவது புண்படுத்தியிருக்குமோ என்று. உண்மையில் நான் ஒரு குலப் பெயர் கூறுவதால் தாழ்வு ஏற்பட்டுவிடும் என நினைக்கவில்லை; அந்தப் பேராசிரியை குறிப்பிட்டதை அப்படியே எழுதினேன். சொல்லப்போனால் நாவிதர் எனப்படும் குடிகள்தான் பண்டைய நாளில் அந்தந்த ஊரின் மருத்துவத் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர்கள்; அறுவை சிகிச்சை செய்யவும் தெரிந்தவர்கள். இப்போது சிகை திருத்துவோராக மட்டுமே சுருங்கிப்போய் விட்டனர். இவர்கள் மருத்துவர் எனவும் அழைக்கப்பட்டனர் .
வள்ளுவர் என்று அழைக்கப்படும் குடிகள் அந்த நாளைய ஜோதிட, வானியல் நிபுணர்கள். நெல்லைப் பகுதியில் வண்ணார்கள் எனும் துணி வெளுப்போர் மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறப்படுகிறது. சிறிது சிறிதாக அந்தக் குடிகளில் வந்த அவர்களின் வாரிசுகள் வேறு வேலைகளை நாடிப் போய் விட்டனர்; ஆனால் அவர்களிடையே வளர்ந்த அந்த பாரம்பரிய அறிவு இன்னும் வாழும் மிகச் சில முதியவர்கள் மத்தியில்தான் இருக்கிறது. அவர்களும் மறைந்து விட்டால் தமிழர் தம் பாரம்பரிய அரிய கலைகளில் சில பிரிவுகள் அறியப்படாமலேயே மறைந்துவிடும். இத்தகைய குடிகளில் வந்த முதியவர்களிடம் சென்று இயன்றவரை அவர்களைப் பேசச் செய்து அவற்றைப் பதிவு செய்வதும் மரபு காக்கும் ஒரு செயலாகும். இத்தகைய முதியவர்கள் "வாழும் ஓலைச் சுவடிகள்". கிடைக்கும் போதே அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்; .அவர்களின் நம்பிக் கையைப் பெற்று அவர்களிடம் தொடர்ந்துவரும் பாரம்பரிய அறிவைச் சேகரிப்பது என்பதும் ஒரு மிக முக்கிய பணியாகும்; தக்க ஆதரவு இருந்தால் இவற்றையும் செய்யலாம்.
கட்டுகட்டாக சுவடிகள் -கடையின் கண்ணாடி தெரிகிறது பாருங்கள்
அத்தனையும் அரிய சித்தர் நூல்கள்
அன்புடன் |
| Last Updated on Monday, 14 June 2010 21:17 |
பிற வளங்கள்



