தீர்த்தகிரி புராணம் - சைவ எல்லப்ப நாவலர். உமை தீர்த்தச் சருக்கம் 131. உமையம்மை தவம் செய்ய இமோர்ப்பருவதராசனிடம் விடை பெற்றல். இரணியகர்ப் பனையளித்து விண்டுவெனும் பெயர்படைத்தோ யிமவான் றன்னை சரணமிசைப் பணிந்துமையா ளெடுத்துரைப்பா ளரியபெருந் தவத்தா லீசன் கருணைபெற வெனக்குவிடை கொடுத்தருள்வா யெனவுரைத்தாள் கருத்து வாடித் தரணியினிற் கியன்றதவந் தொடங்குகென வுரைத்தனனச் சைல மீதே. 132. பரமசிவனின் தவ வடிவம். தங்காந்தன் மநமகிழ வலப்பாத மலரூசித் தலையி லூன்றி கொங்காந்த முடியுலிரு கரங்குவித்துச் செபவடங் கைக்கொண் டுநின்றாள் செங்காந்தட் பசுங்கொடியுஞ் செங்காந்தட் பசுங்கொடியுஞ் சிரத்தே தோன்றல் அங்காந்தட் கொழுமுகையுங் கொழுமுகைவிட் டகலாத வடிவு போலும். 133. உமையம்மை தவம் மேற்கொளல். பகலவன்றா னகன்றதற்பின் கார்காலந் தனிற்படிகப் பாறை மேவிச் சகலபுவ னமுமளித்த பசுங்கொடிநாண் மழைசொரியத் தவமே செய்தாள் தொகையளக முகங்கழுத்துத் தோண்முலைமேற் சொரிந்தபுயற் றுளியின் நோற்ற முகிலுடன்றா மரைபணிலங் கழைமருப்பத் தினும்பிறந்த முத்தம் போலும். 134. இமயத்தின் உச்சியில் பார்வதி தவம் செய்தல். மீனிறைவ னெனுமகர வுருவமுத்தன் னாளசல மிசையிற் சேர்ந்து வானுலவி மழையருளி யுடலமுழு தையுமறைப்ப மறைந்து நின்றாள் ஏனமன மறிவரிய விறைவர்திரு முடிமிசையி லிருக்க வேண்டி தானுமந்தச் சாநுவியாம் பகீரதிதன் வடிவுகொண்ட தன்மை போலும். 135. தேவர்கள் உமையம்மையைத் தடுத்தல். அக்காலந் தனிலிமய மலைமகளை யிமையவர்க ளணுகிப் போற்றி மைக்காலு மழைத்துளியுங் கடுங்காலும் பொறுத்தொருகான் மலரை யூன்றி முக்காலந் தொறுமுமையே தவமியற்ற வுமக்கெளிதோ மொழியக் கேளும் மெய்க்காமன் றனையெரித்துப் பரனகலும் போதவர்பின் மேவி னோமே. 136. சிவபெருமான் உமையம்மையை மணக்கப்போகும் செய்தியை தேவர்கள் கூறுதல். எங்களிடர் தவிர்த்தருள வுமையை மணஞ் செய்தருளு மென்றோ மீச னங்கதுவே புரிந்தினிமே லறுமுகளை யுமக்களிப்பே மகலு மென்றார் சங்கரியே நீருமந்தப் பெண்ணைசுற்றுந் தபசாரச் சைலஞ் சாரு மங்கலநாண் டரிப்பரென மொழிந்துமலர் பொழிந்துமந மகிழ்ந்து போனார். 137. உமையம்மை தவத்தைக் கைவிடல். வானவர்க ளதன்றதற்பி னுமயவளுந் தவமொழிந்து வருத்த மாற்றி கானகமு நெடுவரையும் புறம்பனைத்துங் கடந்துபெண்ணைக் கரையின் மேவித் தேனமருந் தபசாரக் கிரியிலொரு தலத்திருந்து சிகர நாம மானவொரு பதிமூன்று முறைத்திறையை நினைத்திருந்தா ளந்த வேலை. 138. உமையம்மை வேண்டும் வரத்தை சிவபெருமான் வினவுதல். பழமறையு மறிவரிய பதயுகமு மதளுடைய பவள மேனி முழுதுமிள நிலவெறிக்கும் வெண்ணீறும் புயநான்கு முன்னூன் மார்பு முழைமருவுந் திருக்கரமுஞ் சடைமுடியும் விழிமூன்று முமையாள் காண மழவிடையின் மிசைத்தோன்றி மலைமயிலே யுனக்களிக்கும் வரமே தென்றான். 139. உமையம்மை சிவபெருமானைப் போற்றுதல். ஆரமுத மருந்திமையோ ரழிந்தாலு மொருகாலு மழியாய் போற்றி வாரண மன்றுரித்தாலும் வாரணத்தை யளித்தருளு மருந்தே போற்றி நாரணர் ஆரணரிறந்த விறுதியிலைந் தொழிலொழிந்து நடந்தாய் போற்றி பூரணமாய் நிறைந்திருந்து மறைக்குமறைந் திருக்குதொரு பொருளே போற்றி. 140. சிவபெருமானின் தோற்றத்தைப் போற்றுதல். என்பணிந்து தோல்புனைந்து விடமருந்தி யெருதேறி யிருப்பாய் போற்றி யன்பினருக் கரம்பையருங் கற்பகநீ ழலுமுழுது மளிப்பாய் போற்றி வன்பினரூ ரெரித்தாலு மூவருக்கன் றருள்புரிந்த மணியே போற்றி பொன்புரையுஞ் சடையானே தீர்த்தமலை யுடையானே போற்றி போற்றி. 141. சிவபெருமான் உமையம்மையை மணந்து கொள்வதாகக் கூறுதல். ஏற்றுயருங் கொடியானே யடியவருக் கௌஇயானே யிறையே போற்றி கூற்றுவனை யுதைத்தருளுங் கொடியானே யருமறையின் கொழுந்தே போற்றி போற்றியெனப் புகழ்ந்முமநக் கருத்தையெல்லா முரைத்தனளிப் புவியை யீன்றாள் சாற்றுதலுங் கொன்றையினா னுனக்கு மடம் தருவமென்று தழுவிக் கொண்டான். 142. தீர்த்தம் தோன்றுதல். மங்கைநெடு நாள்பிரிந்து கொங்கையினாற் தழுவுதலு மகிழ்ச்சி யாகி யங்கமெலா முருகிவழிந் திடுமதுபோற் கலந்துமுன்னை யாகஞ் சேர்ந்த கங்கைமகண் மலைமகளைக் கண்டுபொறா தெதிரெழுந்த காட்சி போலத் திங்களணி மனிமுடியா னிடத்தில்வந் துதித்ததொரு தீர்த்தந்தானே 143. உமையம்மை தீர்த்த நீராடல். இத்தீர்த்த முனக்களித்தோ மிதின்மூழ்கு வார்நினைந்த வெல்லாங் கூடு மெய்தீர்த்தந் நனக்குமுன்றன் பெயராக வுரைக்கவென்று விளம்பி வான்மே லத்தீர்த்த கிரியானும றைந்தனனப் பொழுதுமையா ளரனை வாழ்த்தி யெத்தீர்த்தங் களும்புகழு மதின்மூழ்கி யிறைவிமண மெய்தி னாளே. 144. முருகக்கடவுள் அவதரித்தல். எண்ணரிய விறன்முருக னுதித்தனன்அன் றொருவேலை யீந்தான் பின்னும் விண்ணவர்நா டழியாமல் காத்தருள்செய் வாயெனவே விடையு மீந்தான் கண்ணுதலை யடிவணங்கி யறுமுகனு மமருலகங் காவல் பூண்டான் மண்ணுலகிற் றீர்த்தகிரி பதின்றன்று பெயருடனும் வழங்கிற்றன்றே. திருநாமச் சருக்கம். 145. தீர்த்தகிரியின் பதிமூன்று காரணப்பெயர்களை விவரித்தல். மங்களமாம் பதின்மூன்றுங் காரணப்பே ரைம்பூத வடிவி னாலே தங்கியவைம் பூதமலைப் பெருமையினாற் பெருந்தீர்த்தச் சைல மாகும் திங்களணி சதாசிவனார் வடிவமென விளங்குதலாற் சிவவே தண்டம் கங்கைநதி வடபாலி லொருசடையிற் பெருகுதலாற் கங்கா சூடம் 146. காரணப்பெயர் சிறப்புகள். உத்தரந்தக் கணஞ்செறிந்த வெழுசடையாற் செடிலெனும்பே ருடைய தாகுஞ் சித்தரெலா முறைகையினாற் சித்தணிவா சப்பேருஞ் சிறந்த தாகுஞ் சத்தமலை கடலெனவே முழங்குதலா லதுநிரந்தா பரவெற்பாகும் இத்தலத்திற் பிணியறுக்குஞ் செய்கையினாற் கதாபகமென் திசைக்கும் பேரே. 147. தீர்த்தகிரியின் காரணப்பெயர்கள் விவரித்தல். சாடரிய துரிதமெல்லா மகற்றுதலாற் றுரிதஹரந்த வந்தா னொன்று கோடிபலன் கொடுப்பதனாற் றபசாரஞ் சோகமெல்லாங் குலைக்கையாலே காடமருஞ் சோகஹர முமைக்குறவா லிராமேட்டங் கந்தன் றீமை வோடாவிதிற் றவம்புரிந்த கொடுமுடியாற் சுவாமிசிங்க முரைக்கும் பேரே 148. பெயர்களை உச்சரிப்பதால் வரும் பலன்கள். இப்பெயர்கள் பதின்மூன்றுந் தனித்தனியே நமவெனுஞ்சொல் லிசைத்துக் கூறி லப்போழுதே யறிந்துசெய்த பவந்தீரு மரசருக்கு மரச ராவர் முப்பொழுது மவைகளெலா நினைத்துமடுக் கூவலிலே மூழ்கு வார்க்குச் செப்பரிய கங்கையிலே மூழ்குமதிற் பதின்மடங்கு சித்தி தானே 149. தீர்த்தமலைத் திருநாமப் பலன். சோகமறுந் துயரகலும் வினைநீங்கும் பிறப்பொழியும் துரித நீங்கும் மாகமுறும் பிணிபோகுங் கல்விவரு நிலையுண்டா மழகு சேரும் ஏகமத் தில்லாளும் மறிவுடைய புதல்வருநல் லிசையு மாமெண் போகமுண்டாம் வீடுமுண்டாந் தீர்த்தமலைத் திருநாமம் புகலு வோர்க்கே 150. அகத்தியர் தீர்த்தங்களின் தன்மையைக் கூறுதல். அகத்தியனா மணிவரைமேற் குதிக்குமிந்த கதைபசுந்தே னருவியாடி மிகுந்தகளிப் புடன்விரும்பி யிராகவகுஞ் சரமுரைப்பான் விரிஞ்சன் பாலா நகத்திலுள்ள தீர்த்தமெல்லா மொருவகையோ பிறிதுமுண்டோ நவில்வா யென்றான் பகுத்திரண்டு வகையாமென் றிவைகளெல்லாம் விரித்துமுநி பகர்வ தானான் தீர்த்தச் சருக்கம் 151. சிவ தீர்த்த சிறப்பு. தாழ்வரையிற் கொடுமுடியின் மருங்கிலுள்ள தீர்த்தமெல்லாஞ் சாற்றும் போதி லேழ்கடலும் வானகத்தி லுளமீனை யளவிடினு மெண்ணா லாகா சூழவந்து குரோசவெல்லை சிவனுருவா யிருக்குமந்தத் தூய்மையாலே யாழிகுளங் கிணறேரி மடுவனைத்துஞ் சிவதீர்த்த மாகுந் தானே 152. வசிட்ட, கௌரி, வன்னி, கந்த தீர்த்தங்கள். நாளும் வளர் சடையில் வரு மொருதீர்த்த மதுவசிட்டர் நாம மாகு நீளும்வட சடைகீழிற் கிழக்காக கௌரிகங்கை நிகழ்வ தாம்செவ் வேளரிய வினைதொலைத்த தொருதீர்த்தந் தெற்குளதாம் விளம்பிற் கந்த மாளுடையான் றருவருளாற் றென்புறத்தே வன்னிபெற்ற வரிய தீர்த்தம். 153. அகத்திய தீர்த்தத்தின் தன்மைகள். என்பெயரா மொருதீர்த்த வைகளின் றென்புறமாக யினிமை காட்டும் அன்புடனென் பெயரதனா லருச்சனைசெய் யிலிங்கதா பரம தாகும் துன்பமற வதிலொருக்கான் மூழ்கிநினைத் தவர்க்குமநத் துயரந் தீரு முன்பரிதாந் தமிழ்க்கடலும் வடகடலையுந் தெளிந்தறிவின் முத்தி யாவார் 154. தீர்த்த நீராடி வந்தோரது பாதம் கழுவிய நீரின் சிறப்புகள். இந்தவகை தீர்த்தமெல்லா நினைத்திடினு முரைத்திடினு மிறப்பு நீங்க மந்தமலை யடிதருமண் ணிலைதீண்டி யகன்றவையுந் தீர்த்த மாகுந் கந்தமிகு மலையிலொன்றின் மூழ்கிவந்தோர் வலப்பாதங் கழுவுந் தண்ணீர் சிந்துவிலும் யமுனையிலுங் கன்னியிலும் பெருமைபெற்ற தீர்த்த மாகும் 155. இந்திர தீர்த்தத்தின் தன்மை. பொருப்பினது மருங்காமங் கீழ்த்திசையி லிந்திரன்றன் பொய்கை தோன்றும் விருப்புடைய பெண்ணையில்வந் துதித்ததொரு தீர்த்தமதில் வினைக ணீங்கும் உருப்பசியே முதலான வரம்பையரு மூழ்குவரவ வுலக நாதன் குருப்பழியு நம்பினவ உடறுணித்த பவந்தீர்த்தான் குளித்துத் தானே இந்திர தீர்த்தச் சருக்கம் 156. அவுணர்களால் அமரர்கள் எல்லாம் அழிந்தமை. முற்காலந் தனிலொருநாள் பொன்னுடன் வெள்ளிபத்தனுக் குமுனிவுண் டாகி சொற்காதி போகமெல்லாந் துறந்திடுவான் பொருட்டவனுந் துறந்தான் பின்னர் நற்காம தேனுவும்பால் மறுத்ததுசிந் தாமணியு நலமும் போன தெற்காளு நமன்போலு மவுணர்களா லமரரெல்லாஞ் சிதைவுற்றாரே 157. உபசரித்து கைவிடாத அரசன் தேவேந்திரனைப் போல் மகிழ்ந்து இருத்தல். மந்திரியும் புரோகிதனுந் தூதனுஞ்சே னாதிபதியும் வருமொற் றாளு மைந்துபெருங் குழவியையு மந்தனர்நண் பினருனையா ரலகு நூலோர் தந்திரமா மருத்துவரெண் வசுக்களையு மாயமட்டுந் தணவா வேந்த னிந்திரன்போ லிருப்பனிதிற் குறையிலிந்த விந்திரனு மிழந்து போமே 158. தேவர் உலகம் அவுணர் இருக்கும் உலகமாக அழிதல். அமரருல கவுணர்தங் களமருலகா யழிவதுகண் டமரர் கூடித் தமரெனவே துவட்டாவின் மகனான விச்சுருபன் றன்னைக்கூவி யிமையவர்கோன் புரோகிதனென் றொருபெயரிட் டழைத்தனன்பின் னிமையோர் கோமான் சரமெலாங் கடக்கவொரு வச்சிரமாத் ததீசியென்பு சமைப்பித் தானே 159. விச்சுரூபனைக் கொண்டு யாகம் செய்தல். ஆயிரவோ ரம்படைத்த வச்சிரத்தை நூறுமகத் தரச னேந்தித் தீயனவாம் பகைகடிந்து கற்பகநீ ழலிலிருந்து செருக்கு நாளிற் றூயனவா மவியுணருக்கு மளித்தனனத் துவட்டா மைந்தன் நாயகனா மவற்கிதயம் புலர்ந்திதழ் துடித்ததுமெய் நடுங்கிற் றன்றே 160. இந்திரனின் கோபம். அங்கமெல்லா நெருங்கியகண் ணாயிரமுஞ் சிவந்தன்தன் னாகத் துள்ளே பொங்குகின்ற வெகுளியழ லடங்காதுள் ளினும்புறம்பிற் பொடித்தா லென்ன செங்கையடு கரமறைந்து புருவமெங்கும் நடம்புரியச் சிரித்துக் கூறுந் தங்கமணிச் சிவிகையடு ஞாளிபெற்ற தனையதுநின் றலைமை தானே 161. விச்சுரூபனை, இந்திரன் அழித்தல். அச்சிரத்தை யதனாலே புரோகிதமா யிருந்ததினி யமையுங் காணென் வச்சிரத்தா லழிகவென வெறிந்தானக் குலிசமவன் வயிரத் தோளை மெய்ச்சிரத்தை யரிந்துளத்தில் வெகுளிநெடுங் கனல்தாக்கி வெதும்பி னாற்போற் பச்சிரத்தம் படச்சிவந்த தவன்றாதை யதுகேட்டுப் பதைத்துக் கூறும் 162. விச்சுரூபனின் பிதாவாகிய துவட்டாவின் புலம்பல். பாகசாதனற் கினியபுரோகித மாயிருந்து நல்லப லன்பெற் றாயே யேகனேயுனைக் குரவனென வறிந்தார்க்கு லிசமெடுத் தெறிகு வானோ சோகவாரிதி யிலெமைக்கிடத் தினவர்தமக் குமிந்தத் துயரெய் தாதோ மேகவாகனற்கு முனையெளி தாகவிதித் தனரோ விதியி னாரே 163. துவட்டா, இந்திரனை ஏசுதல். கோசமதா யிரங்களுக்குங் கோசமதாகிய வுடலைக் குறித்தி லானோ? நாசமதா யலைபுகுந்து பொன்னாட்டை இழந்தது முன்னாடிலானோ? வீசரந்நாண் முனிகுதலு மென்புதிரண் டிரங்கியவா றெண்ணி லானோ? வாசவனார் மறந்ததென்ன வரம்பையவர்தம் வாயமுது நுகர்மற திதானோ? 164. அறிவினை உடையோர் தன்மையை விளக்குதல். அறிவுடையோர் தமைமறந்தோர் பிழைசெயினு பொறுத்தினிதே யளிப்பார் மற்றைச் சிறியர்தம்மைச் சரணடைந்தோர் நலஞ்செயினு மவற்கிறுதி செய்யா நிற்பார் நறைகமழும் பாலழலி லெரித்திடினும் மடங்கியின்ப நல்கும் வேம்பு குறைவறநீர் மிகச்சொரிந்து வளர்த்தாலும் மிரதமின்றிக் கொடுத்தி டாதே 165. துவட்டா, புத்திர சோகத்தில் உருத்திரன் முதலியோரை அழைத்தல். மிக்க சோகமா யிவையிவை விளம்பியோர் வினையாற் றக்க விந்திரற் கிறுதிசெய் திடவொரு தலத்திற் றெக்க ணாக்கினி முதற்கனன் மூன்றையுஞ் செறிந்து முக்க ணான்முதற் றலைவரை யழைத்தனன் முறையா 166. யாகம் செய்தல். வஞ்ச கத்தவி மகத்திலே நெடுங்கனல் வளர்த்திட் டஞ்சி டத்திலு மாகுதி பலகொடுத் தழலோன் நெஞ்ச கத்திலு விழியிலு மிரண்டவி நிறைந்தான் நஞ்செ னக்கொதி கொதித்தது புகைந்தது நவமாய் 167. இருண்ட உடலை உடைய அவுணன் வந்தெழுதல். அறுதி நாளிடிக் கோடிமே லெழுந்ததா மென்னக் கறுவு கொண்டநூ றாயிர மந்தகர் கடுப்ப பொறிய ராவர சாயிரங் கோடிபேர் புனைந்து உறவிருண் டமெய்ய வுணன்வந் தெழுந்தன னதனில் 168. அவுணன் ஆகாய கங்கையாகிய நீரை உண்டான். ஆர குண்டலம் அரவினன் விருச்சிக வலங்கல் வீர சங்கிலி புலித்தொடை யிவைக்கண்மேல் விளங்க வார ணங்களை யடுக்கிவாய்ப் புழைகன் மடுத்துச் சேர வந்துவான் கங்கைநீர் பருகினான் றேக்க 169. அவுணன் கதை கூறத் தொடங்குதல். நித்த நித்தமோ ரம்படி தூரமெய்ந் நிமிர்ந்து சுற்று மிப்படி வளர்ந்தனன் விருத்திரா சுரனென் றுற்ற நாமமும் விருத்தியாத் தரித்தன னுலகிற் பெற்ற திண்கிரி யனையதோர் நெடுங்கதை பிடித்தான் 170. விருத்திராசூரனைக் கண்டு தேவர்கள் நடுங்குதல். வளைக்கு நீளெயி றிரண்டுமா மேருவில் வளைத்தா னளக்க ரெழுமொன் றானபோற் சுடர்விழி யகல விளக்கு வானக மடைந்திட வளர்த்தனன் மெய்யைத் துளக்கி வானவர் சதமகற் கிவன்செயல் சொன்னார் 171. இந்திரன் விருத்திராசூரனைக் கண்டு எதிர்த்தல். கண்டெ திர்ந்தனன் தழற்றினன் கதையினைக் கையால் சண்ட வாயுவாம் விசையினாற் கிரியெலாஞ் சாய்ந்த வெண்டி சாமுகத் திபங்களும் குருதிநீ ரெடுத்த தண்ட கூடமுஞ் சிதறின வமரர்பின் னிடைந்தார் 172. தேவர்கள் புறமுதுகிட்டு ஓடுதல். விண்ணின ரோடினார் விரைந்து பின்னுள கண்ணினா னிந்திரன் கண்டு வெம்பக உண்ணன்மே லுகைத்துவந் தவுணன் கைக்கதை தண்ணுலா வச்சிரப் படையிற் றள்ளினான் 173. இந்திரன் வச்சிராயுதத்தால் விருத்திராசூரனை தாக்குதல். புரந்தரன் மீளவுங் குலிசம் பொற்புறும் இருந்தடம் புரத்தினி லெறிந்து வாட்டினா னரிந்திடு மொண்புய மதற்கு முன்னமே விரிந்திடுந் தினந்தின மேரு வென்னவே 174. விருத்திராசூரனை அழிக்க முடியாமைக்கான காரணத்தை ஆராய்தல். ஆண்டு நூராயிர மமர்வி ளைத்தலுங் காண்டகும் விருத்திரன் கழுத்து வீழ்ந்தில் மீண்டவன் வளர்ந்திடு மெழுச்சி யாதென மாண்டபன் மகத்தினான் மநத்தி லெண்ணினான் 175. காரணம் கண்டு தெளிதல். வெவ்விய யாகமுன் செய்த வேளையில் வவ்வின ராகுதி மதியு மங்கியு அவ்விரு வருமவ னாகத் தாகிய யிவ்வுரு வளர்த்தன ரென்று தேறினான் 176. சந்திரனையும், அக்னியையும் இந்திரன் துதித்தல். தேறிய விந்திரன் றிங்க ளங்கியை வீறுற வழைத்திவன் மெய்யை விட்டு நீ ரேகுக புறம்பென வேத்தி னானவன் கூறவும் வழியில்லை குதிக்க வென்றான் 177. தாங்கள் வெளியேறுவதற்கான வழியை ஏற்படுத்துமாறு இந்திரனிடம் கூறுதல். வழியது திறந்திடில் வருகு வோமெனு மொழியையும் விரித்தனர் முனியு மிந்திரன் பழிதரு விருத்திரன் பாழி வாயிரு கிழிபட வஞ்சகக் கிரியை செய்தனன் 178. சந்திரனும், அக்னியும் விருத்திராசூரனை விட்டு நீங்குதல். விருத்திரன் பாழிவாய் விரித்து விண்ணின்மேற் கரத்தையு மெடுத்தனன் கணக்கி லாதநாள் வருத்திய வன்னியு மதியு மங்கவன் புரத்தினின் றகன்றுதம் புரத்தி லெய்தினார். 179. விருத்திராசூரனின் தலையை இந்திரன் துண்டித்தல். அன்றவ ரகன்றபி னவுணர் கோமகன் றன்னொரு வளர்ச்சியும் வலியந் தாழ்ந்தது முன்னமே யெரிந்திடு மூரி வச்சிரஞ் சென்னியை யரிந்துகீட் டிசையி லிட்டதே. 180. இந்திரனை பிரமபாதகம் பிடித்துக்கொள்ளுதல். வரமதா சலத்திறை மகிழ்ந்து போயினான் திரமதா யிமையவர் திரண்டு வாழ்த்தினார் முரணிய சூரனை முன்பு செற்றிடும் பிரமபா தகமவன் பின்பி டித்ததே 181. இந்திரன் தீர்த்த நீராடி பிரமபாதகத்தை நீக்குதல். அஞ்சியே யத்தடத் தணுகி யிந்திரன் தஞ்சமாய் மூழ்கினான் வினையைத் தள்ளினான் கஞ்சமா மலர்த்தடக் கரையில் மேவினார் பஞ்சபா தகமும்வேர் பறிந்து போகுமே எம தீர்த்தச் சருக்கம் 182. எமதீர்த்தத்தின் சிறப்பு. இத்தடத் தின்சிறப் பிருக்கத் தெற்கிலே யத்தியம் பள்ளிமீ தமரர் தொட்டது முத்தியுஞ் சித்தியு மளிக்கு மூழ்கினார் சத்திய மதன்பெயர் தரும தீர்த்தமே 183. தர்மங்களின் சாட்சிகள் பதினாறு. கன்மமா ளவைக்கெலாங் கரிக ளெண்ணிரண் டன்னிய மன்றுதிக் கைந்து பூதங்கள் மன்னுயிர் பகலிரா மதியு மாதவன் உன்னிய காலமோ டுபய சந்தியே 184. எமதீர்த்த நீராடினால் வரும் பயன். இனத்தினுங் கரிகளெண் ணிரண்டுங் காணவே மநந்தினா லுரையினால் வடிவினால் வந்த கனத்ததீ வினையெல்லாங் காலன் பொய்கையி னினைத்துரைத் தாடினார் நீங்கு வார்களே 185.தீவினை நீக்கும் எமதீர்த்தம். வல்வினை யகற்சியு மறலிப் பொய்கையி னல்வினை வளர்ச்சியு நவிற்றிப் பின்னருந் தொல்வினைப் பயன்களுந் தொலைக்கு மாற்றலு வல்வினை யவனுடன் விளம்ப லுற்றனன் 186. இந்திரன் வீற்றிருக்கும் தன்மை. புண்ணிய பலன்களைப் புகலி லாயிரக் கண்ணின னிவனெனக் கனக நாட்டினிற் றண்ணிய கற்பகத் தருவி னீழலில் விண்ணவர் தொழமணி விமானத் தெய்தியே 187. அரம்பை மாதர்கள் தொழுதல். அரம்பையர் நிரந்தர மாட வாங்கவர் குரம்பையி லிளமுலை கொழிக்குஞ் செம்மணி கரும்பமு தொழுகிய கவிரின் செவ்விதழ் திரும்பிய விடந்தொறுஞ் செக்கர் வீசவே 188. கவரி வீசும் திசையெல்லாம் தேன் சிந்துதல். வீங்கிய தனத்தியர் விரித்து வீசிட வோங்கிய கவரிக ளுதவ காலினாற் றாங்கிய கற்பகச் சாதி மாலையிற் றேங்கிய புதுமதுத் திவலை சிந்தவே 189. எமதீர்த்தத்தால் வரும் செல்வச் சிறப்பு. இருப்பது தொலைந்தபி னிந்தமண் ணின்மேல் விருப்புடை யாக்கையும் புகழும் வீரமும் பொருப்பென வுயரிய குலமும் போகமு வரப்பறு கல்வியும் வாழ்வு நல்குமே 190. நரகத்தின் வகைகளைச் சொல்லுதல். கூடசான் மலியுடன் கும்யி பாகமு நாடருங் காலசூத் திரத்தி னண்ணலும் வாடுற ரௌரவ மிரண்டு வைகலுங் கீடவன் குழியினிற் கிருமி யுண்ணுமே 191. தீவினையால் வரும் துன்பம். கொடிய வல்வினைப் பயன்குறைந் தவாயுளும் மிடியது திரட்சியும் வெய்ய யாக்கையு மடிமையு மிழிகுல மரபும் வஞ்சமும் முடலுறு பிணிகளு முழைக்குந் துன்பமும் 192. தீவினை செய்பவர்கள் அடையும் நிலை. நாலெழு கோடிகா னரக மிப்படி மேலதி லழுந்துவார் வினையி ழைத்தபேர் காலருஞ் தூதரு மவர்கள் கண்முனே சூலமுங் கயிறுமாத் தோன்று வார்களே 193. நாய்கள், பேய்களுக்கு விருந்தாக்க எமதூதர்கள் கொண்டு செல்லும் விதம். வாளியின் முனையடர் வழியின் மாசுணந் தேளிடை விடாநெறி சேணிற் செங்கன லாளி வெம்புலி யடரித்தி ஞாளியுங் கூளியும் விருந்துணக் கொண்டு போவரால் 194. உடல்களை செக்கிலிட்டு ஆட்டுதல். ஒழுகிய மூளை சீயுதர வூற்றிலே முழுகிட விடுவர்தீ முகத்தில் வீசுவர் விழிகளை நீக்குவ ருடலை வீக்குவ ரழலுறக் கூட்டுவர் செக்கி லாட்டுவர் 195. கற்பில்லாத மாதரின் கண்களை கழுகிற்கு இரையாக்கல். கற்பது மகளிர்கண் கழுகிற் கூட்டுவர் வெற்பினின் றுருட்டுவர் கதையில் வீட்டுவ ரெற்புட லுரலின்வைத் திடிப்ப ரெண்ணெயி லற்பக லெரியில்வைத் தலகைக் கீவரே 196. தாகத்திற்கு உதிரத்தைக் கொடுத்தல். குரம்பையின் பசிக்கவர் குடரை நல்குவார் உரம்பெறு நீரீநசைக் குதிர மீகுவார் நரம்பினை நெகழ்த்துவர் நடனங் காணுவ ரிரும்பினை விரறொறு மேற்றி வைப்பரே 197. எமதண்டனை நீங்குதற்கான வழியைக் கூறுதல். மற்றுள வாதையும் வகுத்துக் கூறினாற் சொற்றிடு நாவையுஞ் சுடும தன்றியே செற்றிடும் வினவினார் செவியு மாதலாற் குற்றமா னவைகடீர் நெறியைக் கூறுவேன் 198. புட்பதந்த முநிவன் யமதருமராஜன் சபையை அடைதல். முந்திய யுகத்தினின் முருகன் றாதையார் சுந்தரப் பணிவிடை செய்யுந் தொன்மையான் புந்திய லருள்மொழி புட்ப தந்தனிவ வந்தக னிருந்தபே ரவைக்கு நண்ணினான் 199. புட்பதந்த முநிவனை யமதருமன் வணங்குதல். புட்பவந் தனைசெய்து புட்ப தந்தனை பெட்புறுஞ் சமனொரு பீடத் தேற்றியே நட்புட னினியன நவிற்றி னான்பல சட்பத முறங்கிய தாம மார்பனே 200. ஒருவன் எண்ணெய் கொப்பரையில் அமிழ்ந்து வேகுதல். கூற்றன தவைக்குமுன் னொருவன் கோளுடன் மேற்றிகழ் நெய்க்கடத் தமிழ்ந்தி வெந்திடத் தோற்றிய செவிவிழி துண்டம் வாய்தொறு மேற்றிய விருப்பக லெரியைச் சிந்தவே 201. புட்பதந்த முநிவன் கண்டு பதைத்தல். பொரிவது கண்டனன் புட்ப தந்தனு மரகர விவனெவ னறைக வென்றனன் மருவிய கொடும்படை மறலி யையனே தெரிகில திவன்செயல் திசைமு கற்குமே 202. இக்குறையைத் தீர்க்கக் கூடியவன் சிவபெருமான் ஒருவனே எனல். யானறிவ தற்குமுன் னெரிகின் றானிவ னூனழல் விடுத்திடு முறுதி கண்டிலேன் ஆனமர் கொடியினா னருளி னல்லதிம் மானுடன் படுந்துயர் மாற்ற லாகுமோ 203. புட்பதந்த முநிவன் கைலாயம் சென்று துதித்தல். என்றலு மெழுந்திவ னிடுக்கண் மாற்றுவான் சென்றனன் கைலையிற் செறிந்து போற்றியே யன்றவன் படுந்துய ரனைத்துங் கூறினான் பொன்றரும் புகழினான் புட்ப தந்தனே 204. சிவன் அதற்கான காரணத்தை விளக்குதல். அடியவ னுரைசெய வமலன் கூறுவான் படியினம் பூசனைக் குரிய பல்பொருள் திடமுட னுகர்ந்திடுந் தீமை யாலவன் கொடியசெந் தழலிடைக் குளிக்கின் றானரோ 205. புட்பதந்த முநிவன் தெளிவடைதல். அன்னவன் பேருரைத் தவரு மத்துயர் மன்னவ ரிதுனை மறக்க வென்றனன் பின்னரு மிறைவனைப் பெரிது போற்றியே பொன்னிகர் வடமொழி மாலை பூட்டினான் 206. புட்பதந்த முநிவன் வரம் கேட்டல். புரகரன் மகிழ்ந்துபின் புட்ப தந்தனை வரமினி யருளுவே மகிழ்ந்து கேளென முருகல ரிதழியாய் முன்னஞ் சொன்னவ னெரியழற் கடாரம்விட் டேற வேண்டுமே 207. பாவத்தைப் போக்க எமதீர்த்த நீராடுமாறு கூறுதல். தந்தன வரமவன் றன்கு லத்திலோர் மைந்தர் களாயினு மகளி ராயினுஞ் சிந்தையின் மகிழ்ச்சியாய்த் தீர்த்த வெற்பிலே யந்தகன் றடம்புகுந் தாடத் தீருமே 208. புட்பதந்த முநிவனையே அவனது பாவத்தைப் போக்குமாறு கூறுதல். அவ்வகை புரிந்தவ னகந்தை தீரென வெவ்விட மருந்தி னான்விடை கொடுத்தனன் செவ்விதிற் புவியிடஞ் சேர்ந்த ரன்பொருள் வவ்விய பாதகன் மரபிற் றோன்றியே 209. புட்பதந்த முநிவன் தீர்த்த நீராடல். பூரண வறிவினாற் புட்ப தந்தனு மேரணி யந்தகன் றடத்தி லெய்தியே நீரிடை மூழ்கினா னவனு நென்னலி னாரழகன் மூழ்கினா னதுவிட் டேறினான் 210. அவன் பாவம் தீர்ந்து உயிர் பெற்று கயிலாயம் சென்று துதித்தல். எறிய வளவிலங் கிடப மெய்தியே தேறினன் கையிலைபுக் கிறையை யேத்திட வாறணி கடவுளு மவற்கு ருத்திரப் பேறது கொடுத்தனன் பெருமை யெய்தினான் 211. புட்பதந்த முநிவன், பாவம் செய்தவனைத் தேடி நரகத்திற்குச் சென்றான். பொய்கையின் மூழ்கிய புட்ப தந்தனும் வையக மகன்றுபோய் மறலி மேவிய சைம்மினி யெனும்பதி யடைந்து தண்டமாய் நெய்யழற் பொருந்தினான் றன்னை தேடினான் 212. பாவம் செய்தவர் யாருமின்றி திரும்பினான். காணா மையினகன்றே யவன்கைலைக் கிரியடைந்தான் வாணா சுரன்முழவத் தொலிமகிழ்வா னடிபனிந்தே நாணா மழவிடையாய் முனநமனாட் டழலிடத்தே வீணா ளுறவெரிபா தகன்மெய்கண் டிலனென்றான் 213. அவன் சிவகணங்களுடன் முத்தியடைந்ததை சிவபெருமான் கூறுதல். அனுறே யவனமைவந் தடைந்தடியார் கணத்துடனே சென்றே கதியடைந்தா னதுசெயலென் றருள்செய்தான் குன்றே யெனுஞ்சிலையாய் நெடுங்குன்றே யெனுங்குணத்தாய் நன்றே யெனத்தொழுதா னதுநமனா ரறிந்தனரால் 214. எமன் புட்பதந்த முநிவனது அருளை நினைத்து மகிழ்தல். புட்ப தந்தனை மகிழ்ந்தனன் வியந்தனன் புகழ்ந்தனன் கொட்பு றும்படி யெத்தனை யுயிற்க்கிடர் கொடுத்தேம் எட்ப குந்திடு மளவுமன் பெமக்கிலை யென்றே யுட்க ரைந்துதன் சித்திர குத்தனுக் குரைத்தான் 215. சித்திரகுத்தன் எமனின் பெருமைகளைக் கூறுதல். மருவு சித்திர குத்தனும் வணங்கிநின் றுறைப்பான் அருளி ருப்பதுன் னிடத்தலா தெவர்க்குள தறிந்தாற் றரும னென்றிடுமபெயரெவர் படைத்தனர் தலைவா வருளி னிற்பவ மறுப்பவ ருனையலா தியாரே 216. தண்டித்தலின் தன்மையினை விளக்குதல். தந்தை தாயர்தம் புதல்வர்கோ திழைத்தவர் தம்மைப் பந்த மானதி லிடுகுவர்ப கைமையோ பரிவோ நொந்து வாடுமெய்ப் பிணியரை வாகட நூலோர் வெந்த கோலினார் வெதுப்பலு மறுத்தலும் வினையோ 217. எமனின் செய்கையை நியாயப்படுத்தல். மணிக ளிற்களங் கறுப்பவர் செய்கைநீ வகுத்தல் தணிக சிந்தனை யெனச்சொலித் தொழுதனன் சமனும் பிணியு ழன்றவர் தமையினு நரகினும் பிறிதோ ரணிபெ றுங்கதி புகும்படி பிரிதுமென் றறைந்தான் 218. வாதனைப்படுகின்றவர்களைக் கொண்டுவருமாறு எமன் கூறுதல். மேதியிற் கடிதே றியங்கெ ழுந்துபின் வினையால் வாதை பட்டிடுந் தலத்திடைக் குறுகியவ் வரைப்பில் வாதனைப் படும வர்களைக் கொணர்மினென் றறைந்தான் தூதரக் கணத்த வர்களைக் கொணர்ந்தனர் தொகையாய் 219. பரமசிவனின் புகழினை எமன், தீவினை செய்தவர்களுக்கு விளக்குதல். மிக்க வாதனை யுடலகொடு வருந்திய வினையீர் துக்க சாகரத் தழுந்தியே நரகிடைத் துளைவீர் தக்க பாலரு ஞாதியு மிலாத பாதகரே நக்க னார்புக ழமுதுநாச் செவித்துளை நடுவீர் 220. எமன் தீர்த்தகிரியைப்பற்றிக் கூறுதல். வந்து கேண்மினீர் வையமேற் றீர்த்தமால் வரையுண் டந்த மால்வரைத் தெக்கணத் தெமதுபே ரதுவாற் சிந்து வாமென விளங்குமச் செழுந்தட மூழ்கி லெந்த மானுடர் கிளைகளுநரகுவிட் டேறும் 221. தீர்த்தநீராடினால் பாவம் போகும் என்று எமன் உரைத்தல். உங்க டங்குலத் தெவர்களே மூழ்கினு முமக்குத் துங்க மாகிய பலமுள நரகமுந் தொலையுங் கங்கை யாடி பலத்தினு மதிகமக் கரைமேற் பொங்கு மெள்ளுநீ ரிறைத்திடிற் பெறுவர்தென் புலத்தோர் 222. நன்மைகள் பெருகும் விதம் கூறுதல். ஓத னம்பல மாதனம் வாகன முடுக்கைப் போது சந்தனங் கொடுத்திடிற் கொண்டுதம் புதல்வர் மாத னங்களும் கற்புடை மடநதையு மகவும் பேத மின்றியே பெறுகவென் றிசைப்பர்தம் பிதுர்க்கள் 223. தீர்த்தத்தின் புனிதம் கூறுதல். களித்த தங்குலத் தொருவர்தங் கன்னியை யிரந்தோர்க் களிப்பரோவிடை கொடுப்பரோ வந்தகன் றடத்திற் குளிப்ப ரோவதிற் குளித்தபேர்ப் பாதநீர் கொண்டு தெளிப்ப ரோவென வேண்டுவ ரெனச்சொல்லிச் சென்றான் 224. இராமனைத் தீர்த்த நீராடுமாறு கூறுதல். வாய்த்த வந்தக னகன்றபின் னரகிடை வதிந்தோர் தீர்த்த வெற்பென வுரைக்கையால் வினையெலாந் தீர்ந்தார் பார்த்தி பர்க்கெலா மிறைவனே நீயதிற் படிந்தால் கோத்தி ரத்தின்மூ வெழுவரும் பரகதி கொள்வார் வருண தீர்த்தச் சருக்கம் 225. வருண ராஜன் யமதீர்த்தத்தில் மூழ்குதல். இரணி யப்பெருஞ் சிங்கவென் றிரந்தபேர்க் கருளும் வருண னத்தட மூழ்கினான் மூழ்கிய வலியா வருணி னைத்துவந் தாடினான் வினையெலா மடர்ந்தான் தரணி யிற்பெரும் புனலெலாந் தீர்த்தமாச் சமைத்தான் 226. ஆறுகளுக்கெல்லாம் அரசாகிய வானீரம் தோன்றுதல். மேற்றி சைக்கணவா னீரமென் றொருநதி விளங்கு மாற்றி னுக்கெலா மரசென விரைப்பர்க ளதன்பா லேற்ற வாருண தீர்த்தமென்றொருதட மிலங்கு நாற்றி சைக்கணு மதனைவந் தனைசெயு நதிகள் 227. வருணதீர்த்தத்தின் தன்மைகளைக் கூறுதல். உணர்வி னால்வரும் வினைகளு மநத்தினா லுரையாற் புணரு மின்னலு மதனிடை மூழ்கினாற் போகு மணமி லாதவர் மூழ்கிலெண் ணியபடி வசிப்பர் பிணய னாரதின் மூழ்கினா லுமைபதம் பெறுவார் 228. கந்தத்தீர்த்தத்தைப் பற்றி அகத்திய மிநிவரிடம் கேட்டல். முநிவ னிப்படி மொழிந்தனன் முநிவனை வணங்கி யினிய கந்தனார் தீர்த்தமொன் றுளததி லென்றீர் அனைய தீர்த்தமும் விரித்துரைத் திடுகவென் றறைந்தார் கனிமொழிச்சியாக் கவ்வையுந் திருத்திய கழலான் கந்த தீர்த்தச் சருக்கம் 229. கைலாயமலையின் சிறப்புகளைக் கூறுதல். வள்ள லாரடி தொழவரு மிருடிகள் வானோ ரள்ளி மேனியிற் றரித்தநீ றுதிர்ந்திட வதனைத் தள்ளி யோடுநீ ரருவியாற் கைலைவான் சைலம் வெள்ளி தாகவே விளங்கிய தெனும்படி விளங்கும் 230. செம்பொன்னால் செய்த சிலம்புகளால் நிரைந்த வெள்ளியங்கிரி. அலங்கல் சேர்குழ லம்பிகைப் பணிவிடைக் காகத் துலங்கு தாழ்வரை யிடத்தினிற் சோலையிற் சுனையிற் கலந்த மங்கையர் காலினுங் கழன்றசெங் கனகச் சிலம்பி னானிறைந் திடுமது வெள்ளியஞ் சிறம்பு 231. பரமசிவனும் பார்வதியும் வீற்றிருந்த மலை கைலாயம். உத்தி யானமொன் றம்மலை யுச்சிமீ தோங்கு மத்தி லேயரு படிகமண் டபமுள ததிலே பத்தி யாமணிக் கனகபீ டிகையதிற் பரனுஞ் சத்தி யாகிய விறைவியு மிருந்தனர் தலைநாள் 232. அடியார்கள் ஆலயத்தினுள் புகுந்து செல்லுதல். ஆயி ரங்கொடு முடிப்பெரு வாயினான் கமைந்த கோயி லானதிற் புகுதுவ ரடியவர் கூட்டம் வாயில் காவலர் முனிந்திடி லகலுவர் மகவான் பாயு மால்விடைப் பதினொரு கடவுளர் பலரும் 233. பரமசிவனும், உமாதேவியும் வீற்றிருக்கும் காட்சி. வெண்மு கிற்கரு முகிலென வரனுமை விளங்கச் சண்மு கத்தவன் மயூரமுஞ் சதுமுக னனமு முண்ம யக்கமா யருதரம் பயந்திடு மொளிக்குங் கண்ம கிழ்ச்சியா யருதரம் வியந்திடுங் களிக்கும் 234. பரமனை தேவர்கள் வணங்கும் நிலை. ஐய நோக்கிய திசைதொறு மிறைஞ்சுவ ரமரர் செய்ய வாய்மலர்ந் திடுதொறுந் திசைமுகன் றிருமால் கையில் வாய்ப்புதைத் தணுகியே வருகுவர் கமலத் துய்ய தாளசைத் திடுதொறுங் கூற்றுவன் றுளங்கும் 235. அரம்பை மாதர்களின் ஒலிச்சிறப்பு. நார தாதியர் வீணையின் மந்தர நயத்தை வார றாமுலை யரம்பையர் நடத்தொலி மறைக்குந் தூர மீதினி லிறைஞ்சிடு மிருடியர் தொகுதி யார வாரமா நந்திசெங் கைப்பிரம் பசைந்தால் 236. வினாயகனும், முருகனும் விளையாடும் தன்மை. கந்த வேள்விழி நாலுமூன் றைந்தெனக் கரத்தாற் றந்தி மாமுக னெண்ணலுந் தந்திமேற் கடத்தைச் சிந்தி வேலவன் பரப்புவ னிருவருஞ் சினந்து வந்து கூறுவ ரிகலினை யாற்றுவன் வள்ளல் 237. முருகன் 'ஓம்' என்னும் மந்திரத்தை உச்சரித்தல். உளறு மன்பினா லிப்படி மகிழ்வதி லொருநா ளேறு யர்த்தவன் குமரனை முகங்கண்மு விரண்டா லாறெ ழுத்தினை வேறுவே றுரையென வறைந்தான் வேறெ ழுத்தற ஓமெனு மெழுத்தையே விரித்தான் 238. பிரமன் முருகனை வினவுதல். எடுத்தொரு மொழியய னியம்புங் கந்தனே தொடுத்தவோ ரக்கரஞ் சொல்லு கென்னவு மடுத்ததோ ரக்கர மறைத்த தென்விடை கொடுத்தரு ளெனவிளங் குமரன் கூறுவான் 239. பிரணவ மந்திரத்தின் சிறப்பை முருகன் உரைத்தல். நிறைதரு மக்கர மைந்து நீர்மையாற் பிறரறி தாம்விரித் துரைக்கப் பெற்றியே லறைமொழி யன்னவர் யாவர் கேட்டது மறைமொழி தன்னைவைத் துரைக்க வல்லதோ 240. கடவுளை மறைப்பது முறையல்ல என்று பிரமன் கூறுதல். சொல்வதன் றென்றபின் சொல்லு வானயன் கல்வியு ஞானமுங் கருத்துங் காட்சியும் நல்வினைப் பலன்களு நமக்கு நல்கிய செல்வனை மறைத்திடுஞ் செப்ப முள்ளதோ 241. பிரமன் காரணம் கேட்டல். அறிவினி லறிவுமா யத்த னன்னையாய்க் குறைவறு முலகெனுங் குடும்பி யாயெழி னிறைதரு மின்பமாய் நித்த மாகிய விறைவனை மறைப்ப தென்னியம்பு கென்றனன் 242. அனைத்திலும் கலந்த கடவுளை மறைப்பதன் காரணம் வினவுதல். பண்ணுட னல்லிசை பழத்திற் றீஞ்சுவை கண்ணுடன் மணியளி கலந்த வாறென வெண்ணறு முயிர்தொறு மிரண்டற் றொன்றிய வண்ணலை மறைப்பதென் னறைக வென்றனன் 243. சிவபெருமான் வினவ முருகன் பதிலளித்தல். ஈசனு மன்னதை யியம்பு கென்றனன் மாசறு மறுமுக வள்ளல் கூறுவான் தேசிக னாமெனச் சிறப்புச் செய்தெனப் பூசனை புரிந்திடில் புகல்வ தென்றனன் 244. சிவபெருமான் முருகனை வணங்கிக் கேட்டல். வேற்றடங் கரத்தனை நோக்கி வெண்ணகை நீற்றின தொளியினு நிலவு சிந்திடக் காற்றினுங் கனலினுங் கலந்த வெங்கணை யேற்றிய சிலையினா னிழிந்து கேட்டனன் 245. முருகன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சிவனுக்கு சொல்லுதல். தாமரை மலர்நிகர் சண்மு கத்தினான் மாமணிக் கனக பீடிகையின் மன்னியே காமனை யுருக்கிய கண்ணி னானுடன் ஓமெனு மெழுத்திய லுரைப்ப தாயினான் 246. பிரணவத்தின் பஞ்சபேதங்களைக் கூறல். உகைதரு மநமுத லுள்ள மீறதாய் அகரமு முகரமு மகர மாவது நகைதரு விந்துவு நாத மாவதும் பகர்தரு பிரணவம் பஞ்ச பேதமே 247. அக்கரபேதங்களைக் கூறுதல். மெய்தரு கலைகளின் விருத்தி யாகிய வைகரி யோடுபை சந்தி மத்திமை யெய்திக சூக்கும மென்ற வாக்குகள் பெய்திய வக்கரம் பேத மாகவே 248. மகாமந்திரங்களும், நான்கு வேதங்களும் உரைத்தல். ஐம்பதோ டொன்றதா மக்க ரங்களு மொன்பதோ டொன்பதா முயர்ப தங்களு மின்புறு மந்திர மேழு கோடியு நண்பல மளித்திடு நாலு வேதமே 249. ஓம் என்பதன் உன்மைப் பொருள் உரைத்தல். இருபது மெட்டுமா மிறைவ னூல்களும் ஒருபது மெட்டுமா முயர்பு ராணமும் மருவுறு மறையுள வனைத்தும் ஓமெனும் பொருளினி லடங்குமெய்ப் பொருளி தென்றனன் 250. சிவபெருமான் சாபம் கொடுத்தல். உவகைதன் மகவிடத் துள்ள தாயினு மிவனம தைந்தெழுத் திகழ்ந்து கூறலாற் புவனமு மிகழ்ந்திடு மென்று பொம்மலாற் றவமுத லவற்கொரு சாப நல்கினார் 251. முருகனை மனிதனாகப் பிறக்க சாபமிடல். அஞ்சலித் திடுகவென் றறைந்த கந்தனே வஞ்சகத் தால்வெறு மனித னாகுவாய் அஞ்செழுத் திகழ்ந்தனை யாகை யான்முக மஞ்சொழித் தொருமுக மாக வென்றனன் 252. முருகன் நடுக்கமுறுதல். மைவிடந் தலையுற மயங்கு வாரென வவ்வுரை யழலுறக் குமர னஞ்சினான் இவ்வுல கத்திலைந் தெழுத்தி கழ்ந்தபேர் வெவ்விடர் படுவது விளம்ப வேண்டுமோ 253. பார்வதி சிவனை வேண்டல். இமையவ ரிருடிய ரிரியல் போயினார் தமைமறந் தரியயன் றாமு நீங்கினார் சிமைய மண்டப மிசையுறையுஞ் செம்மலை யுமையவள் பணிந்திவை யுரைப்ப தாயினால் 254. சாபம் வேண்டாம் என்று பார்வதி வேண்டுதல். புகைபடிற் சருகெழு புதிய மென்றளிர் சிகையழற் பெறிற்றிறஞ் செவ்வி காணுமோ நகைமுக மொழியினு நலங்கு நம்பியிப் பகைமொழி உரைசெயப் பரிக்கப் பாலனோ 255. சிறுவர் சொல் தீயினும் கொடியதோ என்று வினவுதல். குழலினும் யாழினுங் குழைந்த செவ்வியாய் மழலையஞ் சிறுவர்சொல் மருந்தி லின்பமாம் பிழைசெயு மிவன்மொழி பெருந்த கைப்பிராற் கழலினு விடத்தினு மதிக மானதே 256. குற்றத்தைப் பொருத்தருள வேண்டுமாறு பார்வதி வேண்டல். பொறுத்தரு ளெனச்சொல்லிப் புண்ட ரீகமுங் கருத்திடச் சிவந்திடுங் கழலிற் றாழ்ந்தனள் அறத்திற நால்வருக் கருளு மண்ணலு மறுத்தில னுமையுடன் மகிழ்ந்து கூறுவான் 257. சிவபெருமான் பார்வதிக்குக் கூறுதல். சரவணக் குமரனின் றனத்தின் பாலுண மருவியுண் மடிமிசை வருமந் நாளிலே பிரணவ மொழியெலாம் பிரித்துக் கூறினோ மருமறை களின்விதி யன்று கேட்டனன் 258. அறியாமையால் செய்தது குற்றமல்ல என சிவன் உரைத்தல். ஆதலின் குரவரா லறிந்த தவ்வுரை தீதிலைத் தாதையைச் சிறுவர் செய்திடிற் பேதைமைத் தொழில்களும் பிழையன் றாமினிக் காதினைக் கயலிணைக் கடந்த கண்ணியே 259. சிவன் உபசாரம் கூறுதல். உபசார வுரைகேளு முமையேநம் முருவாகி யளியாகிநீள் தபசார கிரிசேரு மெவரேனும் வினைராசி தணிவாகுவா ரபசார மொருகோடி யபராத மொருகோடியவை தீருமோர் செபமான தொருகோடி பலமாநம் மடியார்கள் திருவாணையே 260. மலையின் பெருமைகளைக் கூறுதல். கணியார மலர்வீச வலர்வீசு மதன்மீது கனசாரமே யுணர்வான முனிவோர்கள் புரிவார்கள் சிவயோ வுபசாரமே யணுவாகு மதுசேர வருவார்காண் மலைபோலு மபசாரமே தணியாத மலைமாதர் மலர்மாதர் விலையாடு தபசாரமே 261. முநிவர்கள் செய்கின்ற தவத்திற்கு பலத்தைத் தரும் மலை. நினைவான பொருள்யாவு மடியார்கள் பெறவீசு நிதிராசியே கனமான பவமான வெயிலாற வுறவீசு கனிராசியே தினமான மனுமான மறுதேவர் புனலாடு ஜெலராசியே சனகாதி முனிவோர்கள் தபசார பலமான தபசாரமே 262. அம்மலைக்கு முருகனை அனுப்புமாறு சிவன் கூறுதல். இடர்தீரு மதுசேர விவனேக விடையீக வெனவோதினான் வடிவேலன் விழிமாரி புனல்சோர விறையோனை வலமாகியே கடிதான மயிலேறி நொடிப்போதி லதிதூர கதியேகியே செடியாய விரியேழு சடையூடு நடுவாய சிலையேகியே 263. முருகன் தீர்த்தநீராடச் செல்லல். தாதைதான் முனிந்துரைத்தான் சாபமெலாங் கங்கையெனுந் தாயார்க் கோதப் போதுவா னெனவதனுட் பகீரதியிற் புகுந்தாடிப் புனித மாகி நீதியா மஞ்செழுத்தா லங்கநியா சங்கர நியாசம் பண்ணி யாதியான் வடிவமெலா மஞ்செழுத்தாற் பாவித்தா னகத்தின் மீதில் 264. முருகன் பஞ்சாட்சரத்தை ஒலித்து இறையை உணர்ந்து நின்றமை. தகதியெனுங் குண்டலியி லழலோம்பி நகரதிரோ தானத் தோடே மகரமலம் யகரமுயிர் சிகரமிசை சத்திமற்றை வகர மாகு நகரமக ரங்களந்த யகரமுற வகையினடு வணைய தாகு சிகரவக ரங்கடனை முதலாயஞ் செழுத்துரைத்தான் செங்கை வேலான் 265. முருகன் மீண்டும் ஆறுமுகத்தை அடைதல். அறுமுகமா யுபதேசங் கொடுக்கவல்ல தலைமையும் பெற்றதி கனானான் இறைவனு முமையுடனே விடைமேல்வந் தெடுத்தவனை யிறுகப் புல்லி முறைமையினா லொருதீர்த்த முனக்களித்தோ மெனவளித்தார் முநிவர் வானோர் நிறைவிடனங் கணைந்துமலர் மழைபொழிந்து வரைகளெல்லா நிரப்பி னாரே 266. கடவுளரை வரவேற்றல். சக்ர பாணியன் வருகதா மரையினான் வருக மெய்க்க ணாயிரம் படைத்தவன் வருகுகன விளம்பி முக்க ணாயகன் மொழிப்படி முடிவிலீ சான திக்கி லேயுயர் சிகரமேற் பீடிகை செறித்து 267. முருகன் கந்ததீர்த்தமாடல். பீடி கைக்குள் வைத்தமரர் சேனா பதிபெயரிட் டாட லுற்ற வேலவற் கவன்றீர்த்த நீராட்டி வானலுற்ற வாசவன் றிருமக ளருமணமுங் கூடு வித்திடு மெனசொலி மறைந்தான் குன்றில் 268. முருகனுக்கு தேவயானியைத் திருமணம் செய்வித்தல். ஆவி லேறினான் மொழிப்படி குகற்கு நீராட்டி பாவ நீங்கிடத் தாங்களு மந்தநீர் படிந்து மூவர் தேவர்கள் முநிவர்கள் மகிழ்ந்திட முருகன் தேவர் சேனையைத் திருக்கலி யாணமுஞ் செய்தான் 269. எல்லாக் கடவுளரும் தீர்த்தநீராடல். வீறு தேவர் சேனாபதி காட்டிய வெள்ள மாறு மாமுகத் தண்ணலா லனைவரு மதன்பாற் பேறு கொண்டு வானவர்களும் விடைகொடு பெயர்ந்தார் கூறு கந்தன்முன் னொருசெப கோடியே கொடுக்கும் 270. அகத்தியர் அக்னித் தீர்த்தத்தைக் கூறத்தொடங்குதல். மின்னு வேலினான் றடத்தினை யுரைத்தனம் விரித்துப் பின்ன ரேதுநாம் விளம்புவ தெனச்சொன்னான் பெரியோன் வன்னி தீர்த்தமும் புகளுமென் றிராகவன் வணங்கிச் சென்னி மேற்கரங் குவித்தனன் அகத்தியன் செப்பும் அக்கினி தீர்த்தச் சருக்கம் 271. வசிட்டர் மலர் கொய்யச் செல்லுதல். முன்ன மேபல மகமெலா முடித்தெழு முநிவர் பன்னி மார்களை யழைத்துநம் மனைகளிற் பயின்ற வன்னி யோம்புமு னவிந்திடா தெனச்சொலி வனத்திற் பொன்ன றாமலர்த் தருப்பை கொண்டணைகு வான்போனார் 272. அருந்ததி முதலியோர் அக்னியை வளர்த்தல். விருத்தர் பாலரா மழல்களின் விருத்தியை வேண்டி மருத்தி னார்சில சமித்தினான் மடந்தையர் வளர்த்தா ரருத்தி யாலது வளர்ந்ததே யன்றியு மவன்றன் கருத்தின் மீதினும் வளர்த்தனர் ஆசையாங் கனலை 273. மன்மதன் கரும்பு வில்லைக் கையிலேந்தி வந்தான். அரும்பு கைக்குமென் முலையினார் சொரிந்தநெய் யாசை யரும்பு கைக்குமே லெரிவிடுஞ் செயலைநே ராகக் கரும்பு கைக்கொடு வருந்தினான் பாவான் கண்டு கரும்பு கைக்கொடு நடந்தன னன்பொடு காமன் 274. அக்னி தேவனை தனது பாணங்களால் வருத்தினான். அடைந்து நம்பனார் நயனமாய் மதனையன் றழித்தா னிடைந்த காமனும் பழம்பகை முடிக்குமா றெண்ணி யுடைந்த வன்னியைக் கணைகளால் வருத்தினா னொருவன் முடிந்த போதினி லல்லவோ பெரும்பகை முடித்தல் 275. அக்னி தேவன் பாணங்களை நீராகக் கரைத்தான். இருப்பு வாளியு முருக்கிநீ ரெனப்பணு மெரியோன் கருப்பு வில்லியான் கணைகளா னீரெனக் கரைந்தான் பொருப்பு லாவிளங் காற்றானாற் புழுங்கினான் காற்று நெருப்பு மாகினா லாற்றுவா ரில்லையே நிலத்தில் 276. அக்னி தேவன் தளர்தல். படுக்கை மீதினிற் சொரிந்திடும் பல்லவம் பலவும் அடுக்கு நாண்மலர்த் தொகுதியு மழற்றிட வயர்ந்தான் நடுக்கு வீரமும் பெருமையும் படைத்த னன்றாகு மிடுக்க னெய்தினார் சிறியரன் றோதுய றிழைப்பார் 277. சந்திரனாகிய அக்னியால் வருந்துதல். ஓம வங்கியாங் கடவுடன் னுளமெலா முருகிச் சோம வங்கியான் மெலிந்தனன் பிறையினைச் சுடர்கே ளேம வாங்கியா மெனச்சொலி நடுங்கினா னெரிக்குட் காம வங்கிபோற் கொடியதே துளதெனக் கவன்றான் 278. அக்னி தேவன் உருகுதல். வட்ட வாழியைக் கடந்தநாள் விடத்தொடு வந்தோன் கிட்டி நாடொறும் வடவைவான் கனலுடன் கிளர்ந்தோன் விட்ட மாதரா லழிந்தவென் னரசெலா மிதன்பாற் கட்டி னார்களோ சுடுமதி யெனக்கனல் கரைந்தான் 279. மன்மதனின் பாணங்களால் நெளிந்தான். ஆசு கங்களென் னிடத்திலே வீசினா னனங்கன் வீசு மம்பெலா மெரிந்தவென் விரகவே தனையாற் _ச லம்பினி யவற்குவே றில்லையென் பொருட்டாற் _றச மெங்கணும் பிழைத்ததே யெனச்சொலித் தெளியும் 280. காமத்தீயின் தன்மைகளைக் கூறுதல். எனத ழற்சுடு முயரிலா தவைகளை யிசைவேள் தனத ழற்சுடு முயிர்களா னவையையென் றனது புனல வித்திடக் கடத்துநீ ரமையுழேழ் கடலின் கனல விக்கினு மவியுமோ விதுவெனப் புகன்றான் 281. அக்னி தேவன் காமனை ஏசுதல். கிளைக்கு மென்னெழு நாவினாற் புகையெழக் கிடத்தி துளைக்கும் டேய்கடம் மிசையினா லென்னையுந் துளைத்த விளைக்கு முற்பக லொர்வடுக் கிறுதிதா முதவி விளைத்த பிற்பகற் றமக்குமஃ திழைப்பரோ யென்னும் 282. காமத்தீக்கு ஏழு கடலும் போதாது. ஏழு மாதவ ரறிகிலோ முனிவரேயென்னு மேழு வாரிதி யதிகமோ விரகநோய்க் கென்னு மேழு தாபதர் மடந்தைமா ரதத்தி லெழுதே னேழு நாவினும் பருகுநா ளெந்தநா ளெண்ணும் 283. சுவாகாதேவி அக்னி தேவனை வினவுதல். நவ்வி யங்கணார் ளிரும்பிலிப் படியெழு நாவோன் அவ்வி யஞ்சுமந் தமரருக் களித்திடா தயர்ந்தான் செவ்வீ யங்கிபோ லிருத்தல் கண்டவன் பெருந்தேவி பவ்வி யங்களே தெனச்சொல வவனெலாம் பகர்வான் 284. அக்னி தேவன் நடந்ததைக் கூறுதல். முநித்த போதனர் மகத்தினி னிருத்தலு முநிவோ ரனத்தை நேரெனுந் தேவிமா ரவியினால் வளர்ந்தார் தனித்த போதவர் தனத்திலே தழுவுவான் சமைந்தே னினைத்த பேரையுஞ் சபிப்பரே யெனமந நிறுத்தேன் 285. தன்னுடைய காரியத்தை விளக்குதல். சொல்லுதன் மறுத்திடல் பொறுத்திடுத தோகாய் முல்லையின் மிகுந்தவர் முலைக்குளரு சற்றும் புல்லுதல் கிடைக்குமெனி லங்கவர் பொருட்டா னல்லுயிர் துறந்திகினு நன்றென வுரைத்தான் 286. மன்மத பாணங்களை மாதர்கள் மீது படாமல் தடுப்பேன் என்றல். வாள்படு விழிச்சியர்கள் வாயமிர்து பெற்றால் வேல்படை தடுப்பனென் விழிக்கமல மீதே தாள்படினு மெய்த்துயிர் தழைக்குமவர் தாளிற் றூள்படினு மித்துயர் துடைக்குமுள தென்றான் 287. அக்னி தேவனுக்கு சுவாகா தேவி உரைத்தல். கற்புடைய மடந்தையர்கள் காதல ருரைத்தா லற்பமு மறார்களிவை யானதிமை போல விற்படர் மணிக்கரு விழிக்குதவி யுன்டோ வெற்தகுவி நீயென விளங்கொடி யுரைப்பாள் 288. பத்தினியர்களின் சாபம் மிகுதியாகும். சோபமிகு னும்முரை துணிந்துமுயல் வுற்றாற் பாபமிகு மன்றிமுநி பன்னியர்க ளாலே சாபமிகு மல்லதெழு தாபத ரறிந்தாற் கோபவெறி கொள்வரது கொள்ளினெளி தாமோ 289. பத்தினிமார்கள் மன்மதனை நாயைப்போல் மதிப்பார்கள். இந்நிலை மறந்திடுக வேழுமுநி வொர்தம் பன்னியர்கள் கற்பியல் பழுத்தகொடி யன்னா ரன்னியரை மைந்தர்த மதையரென வுன்னு நன்னிலையர் காமனையு ஞாளியின் மதிப்பர் 290. பத்தினிமார்களின் குணங்களைச் சொல்லுதல். சிற்பரனி லும்பெரிய தெய்வமென வேதம் பொற்புடைய கொண்கரிசை போற்றிநிறை பெற்றார் சொற்பன சுழிப்தி துரியத்தினுனிலு மற்றுங் கற்பெனு மணிப்பணி கழற்றிய றியார்காண் 291. பத்தினியர் சாபம் எளிதில் முடியுமோ. அரம்பையெனு மோர்கணிகை யையிரு சிரத்தோன் றங்கெட விதித்தமொழி தப்பவிலை யென்றால் வரம்புற நிரம்புமெழு மாமுநிவர் மின்னார் திரும்பிமுனி வாகவிதி செய்யிலெளி தாமோ 292. மன்மதனுக்கு அக்னி தேவன் அறிவுரை கூறுதல். காணுமவ ருக்குணிறை கற்புதவு நீராள் வாணுதல ருந்ததி வதிட்டமுநி பின்னே நாணொடக லாதுலவு நவ்வியவள் பாலும் பூணுற விருப்பினை புகழ்க்கிறுதி யன்றோ 293. அவர்களை வசப்படுத்த முடியாது எனக் கூறல். பொன்பொரு ளினைப்பகைவர் போலவு மதிப்பா ரின்பமுறு மந்திர மியற்றிலவை யெய்தா வன்பொடு கொளற்கரியர் மற்றுநெறி காணோந் துன்பற நினைத்திவை துணிந்தனை கொலென்றாள் 294. முநிவர்களின் செயல் தன்மைகளை விளக்குதல். மாறுகொடு மாலுலகை வாயினில் விதித்தார் சீறியது கண்டுயர் ததீசிமுநி யென்பா ரீறில் புவனத்திர ளெவற்றையு மயிற்க்கால் தோறுநிறை விதித்தனர் சொலற்கரிய ரன்றோ 295. இந்திரன் பெற்ற சாபத்தைக் கூறுதல். மச்சறு முயிற்பிருகு மாமுநிவ னாலே யச்சுதர் பிறக்குமுறை யாருமறி யாரோ வச்சிர தரன்கௌத மன்கொடுமை யாலே யெச்சுருவ முற்றன னிதற்குரிமை யன்றே 296. மன்மதன் அக்னி தேவனுக்கு பதிலளித்தல். தன்னுரிமை யானவ டடுத்தெதிரி னின்றாள் நன்றுமொழி யென்றவ னகைத்துமொழி சின்றான் பொற்றழுவு தாரையிரு பூண்முலை யணைத்தா னன்றுமதி யென்பவ னவற்குவினை யுண்டோ 297. சிவன் மீது முநிவர்கள் செய்தது பளிகாமல் போனதைக் கூறுதல். இட்டமுநி பன்னிய ரெவற்கு நிறைபோகக் கட்டுரக கங்கணர் கபாலியென வந்தார் மட்டரிய மாமுநிவர் வஞ்சனை யிழைத்தே விட்டன ரவர்க்கதனின் மேவியது முண்டோ 298. பிரம்மனின் செயல்களைக் கூறுதல். முந்தைமறை நாலினுடன் மூவுல களித்தோன் மைந்திலொரு மங்கையை வகுத்தவ ளிடத்தே சந்தத முயங்கினார் தடுத்தவரு முண்டோ விந்தமதி யெந்தமதி யேழைமதி யென்றான் 299. சுவாகா தேவி உபாயம் கூறுதல். இப்படி உரைத்தன னிடர்ப்படுதல் கண்டாள் ஒப்பொருவ ரற்றவு னுளத்தைமுலை யாகுஞ் செப்பினி லடக்கினவர் சேரும்வகை யெவ்வா றப்படிப் புணர்ப்பனினி யச்சமற வென்றாள் 300. திருட்டு வேடமாக ஒரு காரணத்தை நினைத்தல். பள்ளியி லகன்றனள் பணைத்தமுலை யார்பால் விள்ளுமொழி யன்றுசெயல் வேறுமிலை யென்னா வுள்ளமெனு மூசலை யுகைத்தவர்கள் போலே கள்ளவடி வாகவொரு காரண நினைத்தாள் 301. சுவாகாதேவி வேறு வடிவமெடுத்தல். அற்றமறு கற்புடை யருந்ததியின் வேட முற்றனள் படிந்ததிலை யன்றையு மொழிந்தாண் மற்றையநு சூயைமுதன் மாதின்வடி வெய்தி வெற்றுடல் கிடந்துழலு மெல்லணை புகுந்தாள் 302. மின்னலைப் போன்று சுவாகா தேவி நடந்து வருதல். அற்பொலி கடைக்கண்வி ளையாடுமிட மெல்லா முற்பல மலர்ந்தபல வோடைநிக ராக கற்பக நறுந்தொடை கலந்தகுழல் சோர வெற்பிணை சுமந்துவரு மின்னென நடந்தாள் 303. அக்னி தேவன் கண்டு மயங்குதல். புண்டரிக மாளிகை புரிந்தகுயி லோகோ தண்டனுயி ரோவவை தனித்துவர லின்றே அண்டரமு தோபழைய தானதது வென்றே தெண்டிரை கடைந்துதவு தெள்ளமுத மென்றான் 304. அக்னி தேவன் வருணித்தல். ஓவிய நடந்ததெனி லுண்மையல வில்வேள் தேவியெனி லன்றுகுல தேவதையு மென்றான் பாவியை மறந்துமுநி பன்னியர்கள் பின்போ மாவிவரு கின்றதென வாதரவு கொண்டான் 305. மன்மதனுடைய கணைகளாலே துளைத்த இடங்களை வருடினால். பற்றினள் புயத்தின் மிசைபாணி மலராலே சுற்றினண் மதன்கணை துளைத்தவிட மெல்லா மொற்றின டனத்தை யழலொத்த நிலவாலே வற்றின வுடற்குளிர வாயமு தளித்தாள் 306. தினம் ஒரு உருவம் கொண்டு காமத்தை ஒழித்தாள். வாருருவ வீறுமுலை மார்புருவ நேரே யீருடலு மொன்றென விசைக்க விருபாலுங் காருருவ மானகுழழ் கட்டவிழ நித்த கோருருவ மாயிவ னுலத்துய ரொழித்தாள் 307. மீண்டும் சுவாகா தேவி தனது உருவில் வருதல். ஆசைதணி வித்தபி னிறங்கியி ரன்னாள் வீசியளி சுற்றியதன் வேடமொடு வந்தாண் மாசகல ருந்ததியை வைத்துவரு வானேன் பேசுகென வங்கியடு பெண்கொடி யுரைப்பாள் 308. கபட உருவத்தைக் கொண்டு மகிழ்வித்ததைக் அக்னி தேவனுக்கு உரைத்தல். விஞ்சிய வருந்ததியின் மெய்யுருவு கொள்ள நெஞ்சினி னினைத்திடினு நீறுசெயு மென்றே யஞ்சியநு சுயைமுத வலாறுபெயர் போல வஞ்சனை யுடற்கொடு மருட்டிமகிழ் வித்தேன் 309. அக்னி தேவன் இப்பாவங்களைப் போக்க இமோர்ப்பருவதச் சாரலுக்குச் சென்றார். ஈதுசெய லென்றிவ ளியம்ப வெழுநாவோ னீதிநெறி பேணினை நினைக்குரிமை யன்றோ காதலி யெனப்புதிய கட்டுரை யுரைத்தே மாதவ முடிக்கவிம வானிடைப் புகுந்தான் 310. பத்தினிகளும் இமோர்ப்பருவத்த்தில் ஏறி தவம் செய்தல். ஆறுமுநி வோரு முயரன்ன மனையாரைச் சீறினார்கள் வேறொருவர் சிந்தனையு ளுகந்தீர் வேறகலு நீரெனவிடுத் தனர்கள் மின்னா ரேறியிம வானிடை யிருந்துதவ முற்றார் 311. தீர்த்தகிரிக்குச் செல்லுமாறு ஆகாயக் குரல் கேட்டல். கருநெறி யிறையவன் கரவி லாநெறித் தெருவைய ரொடுதவஞ் செய்யும் வேலையி லருநெறி தீர்த்தமால் வரையி லேகுமென் றொருமொழி வந்தரத் துரைப்பக் கேட்டனர் 312. அனைவரும் தீர்த்தகிரிக்குச் சென்று தவம் செய்தல். பனிவரை தன்னிலும் பாவ நீங்கிடுந் தனிவரை தீர்த்தமால் சைல மாதலா லனையதின் முளரியு மாறு மாதரு மினிதினி லெய்தியே யியற்றி னார்தவம் 313. ஆறு பத்தினிகளும் கார்த்திகைப் பெண்களாதல். அன்றிறை தீர்த்தமொன் றவர்க்கு நல்கினார் குன்றினிற் சிலையிடைக் கூவ லோடெழுஞ் சென்றதின் மூழ்கியே தேவ மாதர்க ளன்றிய கார்த்திகை யுடுக்க ளாயினார் 314. கார்த்திகை மாதர்களை வருணித்தல். கணைப்பத மிளவராற் கவின தாகவு மணித்தொடை யழகுடை யரம்பை யாகவு மிணைக்கரு விழிக்கய லினம தாகவுந் துணைத்தக வாரன்மீ னாகத் தோன்றினார் 315. அக்னி தேவன் தீர்த்தநீராடல். பாவகன் படிந்துதன் பாவநீங்கினான் தேவரெண் சுனையவர் தீர்த்த மானது காவல வெனச்சொலிக் கரிய மாலுடன் மாவளர் தீர்த்தமால் வரையை நண்ணினார் சுவேதகேதுச் சருக்கம் 316. ராமனும் அகத்தியரும் தீர்த்தகிரியில் செல்லுதல். அப்பொழு திளவர சாளு மிந்திர னிப்புவி தனிலிழிந் தேறு வானெனத் துப்பிதழ் மடந்தையர் சூழ மேருவை யப்பெனு விமானமே லொருவன் றோன்றினான் 317. விமானத்தின் மீது ஒருவன் வந்து தோன்றுதல். பொழிந்திடும் விடவராப் புழையெ யிற்றினா லழிந்திடுந் துயரற லவனி மீதிலே விழிந்திடு முழுமதி யென்ன நித்திலக் கொழுந்தொளி விடுமொரு குடைநி ழற்றவே 318. ஆலவட்டம் அசையும் காட்சி. மங்கையர் முகத்தினை மறுவி லாமுழுத் திங்களென் றணுகிய சிலவ ராவெனக் கங்கண மணிவெயில் கலந்த தாமரை யங்கையி லசைந்திட வால வட்டமே 319. தேவர் மாதர்கள் வெண்சாமரை வீசுதல். அரிவைய ரிருபுறத் தணைந்து வால்வளைக் கரமலர் நீட்டிவெண் கவரி வீசிடத் திருவொடு நவமணி சிறந்த புட்பக மிருசிறை யடித்துவந் திழிவ போலுமே 320. அகத்தியர் வரும் வழியில் அவர்கள் வருதல். வந்தினி திழிந்தனன் வரையில் சாரலி லிந்திர வூர்தியு மேவன் மாதரு மந்தர மிசையினின் றவனி நோக்கிடச் செந்தமிழ் முநிவருந் திசையிற் சென்றனன் 321. வெறிய உடலை அரிந்து புசித்தல். இருந்தவ னொருவனோ டிருவர் நிற்றலும் பொடுந்தியங் கவர்களைப் போற்றி யேகியே வரைந்தொரு தலத்திடை வளரும் வெற்றுட லரிந்தரிந் தருந்தினா னருவ ருத்ததே 322. அகத்திய முநிவனைக் கண்டுகொள்ளுதல். வகுத்தவன் வகுத்ததே யன்றி மண்ணின்மேற் றொகுத்தன யாவையுந் துய்த்தலின் மையான் மிகத்தசை வெறுத்தது விதியு நீங்கிய தகத்திய முநியிவ னாமென் றெண்ணினான் 323. இராமனையும் கண்டுகொள்ளுதல். அயலுற மருவிய வரச கோவையுந் தயரதன் மகனிவன் சங்கை யின்றென மயலுறு மதியுடன் படுத்தி வாள்விழிப் பயனுற மகிழ்ந்தவர் பாங்கர் நண்ணினான் 324. இருவரையும் வணங்குதல். பூதர வுயரமும் புணரி யாழமு மேதமு மகற்றிய முநியை யேத்தினான் கோதம முநிவனைக் குடும்பி யாக்கிய பாதனை முடியுறப் பணிந்து போற்றினான் 325. அகத்தியர் அவனை வினவுதல். பூமிசை முடியுறப் பணிந்து போற்றிய கோமகற் கியன்றநல் லாசி கூறியே மாமலை யருந்தவ முநிவன் மன்னநின் நாமமும் வரவையு நவிலு கென்றனன் 326. தான் அடைந்த நற்கதியைக் கூறுதல். மெய்த்தசை யருந்திய வினையை வீட்டினீர் கைத்தல நெல்லிப்போற் கதியைக் காட்டினீர் சத்திய மடைந்தபேர் தம்மை யோம்புத லுத்தம குணத்தினோர்க் குரிமை யல்லவோ 327. தான் தன்னுடைய உடலின் மாமிசத்தை புசித்து வாழும் சுவேதகேது என்பதைக் கூறுதல். எண்ணிய சுவேதகே தென்ப தென்பெயர் மண்ணிடை யோதனம் வழங்கிடா மையால் விண்ணுலு மிழிந்துகீழ் விரைந்தென் மேனியின் புண்ணுடை யுடற்றசை புசித்து வாழ்ந்தனன் 328. சுவேதகேது தனது கடமைகளைக் கூறுதல். பொங்கிய நகுடனைப் புயங்க னாக்கிய அங்குறு முநிவனே யயோத்தி மன்னனே யுங்கடன் வரவினா லொழிந்த தென்விதி யெங்கட னினியுமக் கேவல் செய்வதே 329. இருவரையும் காணாமல் போயிருந்தால் நரகம் கிட்டியிருக்கும் என்றல். என்றொரு தரணியு மினிது நல்கிய மன்றநும் பெயரினை மறந்து வாழ்வனேன் மன்றினி லிருந்தழி வழக்கு ரைத்துளோ னன்றியை மறந்துளோ னரக மென்னதே 330. நரகத்தின் தன்மைகளைக் கூறுதல். புறமொழி பகர்ந்தவன் கொடாது பொய்த்தவன் சிறுபிழைக் குறுபெருந் தண்டஞ் செய்தவன் நிறைதகு கற்பினா டன்னை நீத்தவ னறைமது வருந்தினோ னரக மென்னதே 331. நரகத்தை அடைபவர்களின் தன்மையைக் கூறுதல். குருவினை விருந்தினைக் குழவி தன்னைவிட் டொருவனே மனியிருந் துதரம் போற்றினோ னரனிசை பழித்தவ னழுந்துந் தீநர கிரவியுள் ள்ளவினு மென்ன தாகவே 332. எவரெவர் நரகத்தை அடைவர் என விளக்குதல்.. மறைமொழி யிகந்தவன் கநகம் வவ்வினோன் பிறர்மனை புகுந்தவன் பொய்ம்மை பேசினோன் குறைவறக் கண்ணினீர் குடிக்கு நல்கிடு மிறைமகன் புகுநர கென்ன தாகுமே 333. அன்னத்தையும், கன்னியரையும், நீரையும் விற்கின்றவர் அடையும் நரகம். அண்ணமுங் கன்னியு மயமும் விற்பவன் மன்னனைக் களத்தினில் வைத்து மீண்னவன் றன்னைவந் தடைந்தபேர்க் கிறுதி தந்தவ னின்னவர் புகுநர கென்ன தாகுமே 334. சுவேதகேது விடைபெற்று செல்லுதல். என்றுரை பலபகர்ந் திருவர் தாளினுங் குன்றென வணங்கிநின் இனிமை கூறியே மின்றிகழ் விமானமேல் விண்ணி லேகினா னன்றவ னகன்றபின் னண்ணல் கூறுவான் 335. இராமன் சுவேதகேது பற்றி அகத்தியரிடம் வினவுதல். சாடுற வளர்க்கும் வாதாவி யாகிய வாடது படுத்துநோ யகடு விட்டெழ கூடவே பரகதி கொடுத்த மாதவ தேடியிங் கிவன்வரல் தெளியக்கூ றென்றான் 336. சுவேதகேது பற்றி அகத்தியர் கூறுதல். விரதமா முநிவன் கூறும் விதர்ப்பநா டென்னு நாட்டில் சுரதனோ டிவனைத் தந்த மன்னவன் சுதன்ம னென்பான் தரும தேவதைபோ லிந்தப் புவியெலாந் தனிக்கோ லோச்சிப் பருதிபோல் விளங்கிப் பின்னர் விருந்தனாம் பருவஞ் சார்ந்தான் 337. சுதன்மன் சுவேதகேதுவோடு ஆட்சி செய்தலைக் கூறுதல். வெற்றியை வரைந்த தூய்மை வேள்வியை வளர்த்த தூய்மை துற்றன புவியின் பாரச் சுமையது கனத்தி னாலே முற்றிய வேள்வித் தண்ணீர் மூழ்கிய மகிழ்ச்சி யாலே மற்றடம் புயத்தி னாற்கு வளர்ந்தது வயிர மேனி 338. அரசனது உடல் எங்கும் நரைகள் தோன்றின. ஐந்தரு வடிவ மிந்த வரசனை யறியு மாறு வந்திடும் விழுது போல வடிவெலா நரைக ளான சுந்தர வடிவ மெல்லாந் திரங்கின சுருதி யாளர் மந்திர வரிசி தூவப் பொலிந்திடும் வடுக்கள் போல 339. அரசன் இறக்க சுவேதகேது அரசுபுரிதல். மூப்பினா லிவ்வா றோய்ந்து முறையினா லுடலை நீத்து மாப்பொனா டணைந்தா னிந்தாச் சுவேதகே தென்னு மன்னன் காப்புநா ணணிந்து செம்பொற் கலசநீர் பலவு மாட்டிச் சேப்புநீண் மகுடஞ் சூட்டிப் புரந்தனன் றிசைக ளெல்லாம் 340. கொடைத்தன்மையோடு ஆட்சி செய்தல். தண்டமிழ் புனைவோர்க் கெல்லாந் தனமெழு கிரிபோற் றந்தான் குண்டல மௌலி யாதி தூணியுங் கொடுத்தான் கன்னிக் கெண்டையங் கருங்கட் செவ்வாய்க் கிளிமொழி யவரை யீந்தான் வண்டினந் தொடரு மாவு வாசியும் யாவு மீந்தான் 341. அந்தணர்கள் முதல் அனைவருக்கும் தானம் கொடுத்தான். பாரிலே மறையோர்க் கெல்லாம் பழனமும் பதியு மீந்தான் றேரிலே யனந்த மீந்தான் சிவிகையும் கலையு மீந்தான் றாரிலே துலங்கு மார்பன் றானமாப் பொழிந்த செங்கை நீரிலே கடல்க ளேழு நிறைகட லான தன்றே 342. அன்னதானத்தைத் தவிர அனைத்தும் கொடுத்தான். அன்னமென் பதுவே யன்றி யனைத்திள பொருளு மீந்தான் சென்னெலுங் கமுகங் காவுஞ் செண்பகக் காவும் யாவும் கன்னலுந் தெங்கு மாவுந் கதலியுங்காடாக் கண்டான் மன்னுகோ டலையுமாறு மதகுவாய்த் தலையுங் கண்டான் 343. பாலை நிலத்தில் சென்று தவம் செய்தான். பற்பக லிவையா னீக்கிப் படியெலாம் புதல்வர்க் கீந்து வெற்புகள் பலவு நீங்கி விரைவிலா ருயிர்கள் சோரும் கற்பிள வனைய பாலைக் கடும்பெரு வனத்தி லெய்தி யற்பக லுணவ தின்றி யருந்தவ முடித்தான் பின்னர் 344. சுவேதகேது சுவர்க்கம் அடைதல். துன்னருந் தவங்க ளெல்லா முடித்தபின் சுவேத கேது பன்னக வுரிபோ லிந்தப் படியிலே யுடலை நீத்துப் பொன்னுல கணைந்தான் முன்னம் புரிந்தநல் வினையி னாலே யந்நெறி யயனார் தோன்றி யவனுடன் விதிக்க லுற்றார் 345. அன்னம் கொடாதவனானவனுக்கு அமுத பானம் அருவருப்பாக இருந்தது. ஈகையே முதலாந் தான மீகையின் பலத்தி னாலே பாகசா தனனார் பெற்ற பதவியுன் பதவி யாக வோகையாற் களித்து வாழ்வா யோதனம் பகுந்தி டாதோ னாகையா லமுது பான முனக்கரு வருப்ப தரமே 346. சுவேதகேதுவின் உடலை காக்கைகள் மூக்கினாலும் தொடவில்லை. அன்னமும் பகுந்தி டாவுன் னாக்கையைக் காக்கை தீண்டா பின்னொரு கழுகுஞ் சேரா ஞாளியுங் பிணங்கி வாரா வன்னியுங் கலவா தண்ட வனத்தது வளரா நிற்கு தன்னது பசிநோய் தீர வருந்திவா னுலகை யாய்வாய் 347. அன்னதானத்திற்கு நிகர் வேறு உண்டோ. கன்னி தான் நெடும்புவி யுங்கலை மாவுங் கனப்பிரிவு மின்ன தான மணித்தே ரும்வேண் டும்பணி யுமென்பழனச் சொன்ன தான மற்றுமுள சுகிர்த யாக பலன்களெலா மன்ன தான பலத்தை நிகராமோ வாகாதாகாதே 348. அன்னம் கொடுத்தவனே தன் உயிரையும் உதவினவனாவான். போதநல் லறிவு மைந்து புலன்களும் பொறியு ஞாநச் சோதியங் கடவு ளாரைத் தொழுகையு மறந்தின் பேறு மாதரில் லறமு மன்ன மயங்கொடுத் திடுத லாலே யோதன முதவி னானே யுயிரையு முதவினானே 349. கொடைகளில் சிறந்தது உணவளித்தலே. உண்டி யுதவுங் கொடைபோல யுலகிற் சிறந்த கொடைகாணேன் கொண்ட கொழுநற் கினையாகச் சிறந்த கடவுட் குலங்காணேன் மண்டு மறத்தின் சிறப்பாய துணையுங் காணேன் மறுமையின்கட் கண்ட வுருப்பிற் கருவிழிபோற் சிறந்த வுறுப்புங் காணேனே 350. இராமன் மூலம் சுவேதகேதுவின் பாவம் போயினதைக் கூறுதல். என்று பகரா வுன்விதியு மிராமன் வரவா லகலுமென வன்று மொழிந்தே யயன்போனா னவைகா ணிவன்றன் வரவென்றார் மன்ற லுலாவ மணத்துடனே வரிவண் டுலாவ வண்டுடனே தென்ற லுலாவு மலையமுநி திருமாற் கறியத் தெளிவித்தான் 351. இராமன் சீதாதேவிக்குக் கூறத் தொடங்கினான். தெளிவித் ததற்பின் னவனுடனே செல்லா வுனக்குத் தீர்த்தமுள தொளிவித் தகரை யருச்சியென வுரைத்து மறைந்தா னுயர்முநிவ னளிவித் தியபூந் தொடைமார்ப னசலத் திடைசேர்ந் ததின்பெருமை கிளிவித் தகமா மொழிச்சீதை கேழ்க்கும் படித்தான் கிளத்திடுவான் இராம தீர்த்தச் சருக்கம் 352. இராமன் சீதையைப் போற்றுதல். பார முத்தின மருங்குசேர் படிகவெண் பாறை காரடுத்தவா னகத்தொளி கலந்துமுன் காண்டல் வாரடுத்தமா மலையெனு மிளமுலை மடவாய் தாரகைக்குலம் வளைந்தவான் சசியெனத் தகுமால் 353. மலையின் காட்சியை சீதைக்கு சுட்டிக்காட்டுதல். மஞ்சு சூழ்வரைத் தடமெலா மடப்பிணைக் குருதி பஞ்சு மாறளைந் தேகிய வயப்புலி யடிக ணஞ்சு தோய்விழி வரையர மடந்தையர் நடந்த பஞ்சு தோயடிச் சுவடென விளங்குதல் பாராய் 354. மரங்களின் காட்சியை விளக்குதல். பரவி மிக்கிரி யிடத்திலே பாடரந் தருவுங் குரவு மற்றுள கணிகளு மதுவினீர் கொழித்தல் கரிய கற்றொருங் கங்கைநீர் பெருகுதல் கண்டு குருவு மப்படித் தீர்த்தநீர் சொரிந்திடு தகவாம் 355. தீர்த்தமலையின் தீர்த்த பெருமைகளைக் கூறுதல். பார்க்கு ளேயுள கங்கையா திகளெலாம் பார்த்தோம் கார்க்கு லாவிய தீர்த்தமால் வரைக்கிணை காணோம் மேற்கு லாவுவ