வீரவனப் புராணம்

மகா.வித்.தி. மீனாட்சி சுந்தரம் பிள்ளை (மொ.பெ)

பதிப்பு: உ.வே.சா
உ.வே.சா. நூல் நிலையம்.

        சிவமயம்

வை. அநந்தராமையரியற்றிய செய்யுட்கள்.

         *         *       *
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
 
பூமேவு மன்னமுகை யன்னமுங்கா ணாதமுடிப் புராண ரென்றுந்
தாமேவு முடித்தழும்பர் வீரசேகரரெனும்பேர் தம்மைத் தாங்கி
மாமேவு முமையொடுவீற் றிருந்தருளும் வீரவன மான்மி யத்தைத்
தூமேவு நைமிசத்திற் சவுனகா தியர்க்குரைத்தான் சூத மேலோன்.

அன்னவன்முன் வடமொழியி லுரைத்தபுராணத்தை யெளிதருந்த மிழ்க்கட்,  
சொன்னயமும் பொருணயமுந் தொடைநயமு நடைநயமுந் துலங்கச் செய்தான், 
பன்னவனா ரென்றிடிற்சி ராமலையிற் றமிழ்செய்தவப் பயனாத் தோன்று, 
மன்னவனற் குணக்கடலா மீனாட்சிசுந்தரநா வலவரேறே.(2)

சாலநயஞ் சார்ந்திடுமிப் புராணகாப் பியமான தமிழ்நூ றன்னைக், 
கோலமுறு திருத்தளியின் வளந்தெரித்தல் போற்பெயர்கொள் கோயிலூரின், 
பாலமருஞ் சிதம்பரநற் குரவனிடை ஞானநூல் பயின்றொ ழுக்கான்,  
ஞாலமிசை யிசைமேவிப் புதுவயல்வா ழழகப்பநாமத் தோனும். (3)

கூறுபுது வயல்வாழ்வோன் வினைதீர்த்த வேள்புதல்வன் குறைவிலாச்சீ, 
ரேறுநய சுகுணமிகு மியல்புடையான் வீரப்ப னெனும்பே ரோனும், 
வீறுபெற முயன்றெழுதா வெழுத்தினியை வித் துற்ப வித்த தற்குப், 
பேறுபுக ழெனப்பெற்றா ரிவர்களுடை முயற்சியெம்மாற் பேசற் பாற்றோ. (4)
             ---------------
கதைச் சுருக்கம் 1. நாடும் நகரமும்.

சீருஞ் சிறப்பும் பொருந்தியது பாண்டி வளநாடு. பாண்டி நாட்டின் சிறப்புக்கள் பல. சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைச் செய்யும் பேற்றினை இந்நாடு பெற்றதுடன்; சிவபெருமான், உமாதேவியார், முருகக்கடவுள் என்னும் மூவரால் அரசாட்சி செய்யப்பெறும் பெருமையினை பெற்ற சிவப்பதிகள் பல. இந்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய நிலங்கள் தத்தமக்கேற்ற சீரொடு சிறந்து திகழும். இந்நாட்டில் வீரைமாநகர் என்னும் சிவப்பதி ஒன்று சிறந்து விளங்குகின்றது. அப்பதி அளகை, சாக்கை, சாக்கோட்டை முதலிய வேறுபெயர்களையும் பெற்று விளங்கும். அந்நகரின்கண் சோலைகளும் பொய்கைகளும், மலர்ப்பொழில்களும் மலிந்து விளங்கும்.அகநகரும் இடைநகரும் புறநகரும் அமைய வேண்டிய சிறப்புகளெல்லாம் அமையப்பெற்றுத் திகழும். வேளாளர்தெரு, வைசியர்தெரு, அரசர்தெரு, மறையவர்தெரு, ஆதிசைவர்தெரு முதலிய தெருக்கள் அமையப்பெற்ற அந்நகர் எங்கும் மடாலயங்களும் கல்விச்சாலைகளும், அறச்சாலைகளும், தண்ணீர்ப்பந்தர்களும் செறிந்து விளங்கும். ஊருக்கு நடுநாயகமாக வீரசேகரப் பெருமானுடைய திருக்கோயில் சிறந்து விளங்கும். அக்கோயில் திருமதில் திருக்கோபுரம் பலவகை மண்டபங்கள் எல்லாம் அமையப்பெற்றுச் சிவலோகமாகத்திகழும். அந்நாளில் சோழ தனவணிகச் செல்வர்கள் இடைவிடாது திருப்பணி செய்தலின் வீரசேகரப்பெருமான் திருக்கோயில் என்றுங்குன்றாச் சிறப்புடன் இலங்கி மிளிரும்.

2. நைமிசவனம்

நைமிசாரணியம் என்னும் நைமிசக்காடு வட இந்தியாவிலே இருக்கின்றது. அக்காடு முனிவர்கட்கு இருப்பிடமானது. முனிவர்கள் பலர் ஒன்றாகத் திரண்டு தவம் வேள்வி முதலியவைகளைச் செய்து கொண்டு அங்குத்தான் நாட்களைக் கழிப்பார்கள். ஒரு நாள் சூதமுனிவர் என்னும் பெயரினையுடைய பெருமுனிவர் அக்காட்டிற்கு எழுந்தருளினார். அவர் புராணங்கள் யாவற்றையும் நன்கு கற்றறிந்தவர். அதனால் பூவுலகில் உள்ள சிவப்பதிகள் எல்லாவற்றின் வரலாறுகளையும் அவர் ஐயமற அறிந்திருந்தார். பெருஞ்சிறப்புப் பொருந்திய அந்தச் சூத முனிவரை நைமிசவன முனிவர்கள் பூசித்து வழிபாடுகள் செய்து போற்றினார்கள். சூதமுனிவர் தம்மைப் போற்றிய முனிவர்கட்கு வாழ்த்துரை வழங்கினார். அந்த முனிவர்கள் சூதமுனிவரைப் பார்த்துப், "பிறவியைப் போக்குதற்குச் சிவபெருமானுடைய திருவடிகளைப் போற்றி வழிபடுதலே சிறந்தது என்று நாங்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்ந்திருக்கின்றோம். பூவுலகில் சிவப்பதிகள் பல இருக்கின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் ஒருங்கே சிறந்த ஒரு சிவப்பதியினை எங்கட்குத் தெரிவிப்பின், நாங்கள் அங்குச் சென்று இறைவனை வழிபட்டு வீடு பேற்றை அடைவோம்." என்று சொல்லி வேண்டிக்கொண்டார்கள்.

வீரவனம்

சூதமுனிவர் சிறிதுபோது சிவபெருமானுடைய திருவடிகளை உள்ளத்தில் எண்ணியிருந்தார். பிறகு நைமிசவன முனிவர்களைப் பார்த்து, "ஓ முனிவர்களே! உரைக்கிறேன் கேளுங்கள். சிறப்புமிக்க பாண்டி வளநாட்டிலே வெள்ளாற்றிற்குத் தெற்கே, திருப்பெருந்துறைக்கு மேற்கே கண்ட தேவிக்குவடக்கே, சமிவனம் என்னும் கோயிலூருக்குக் கிழக்கே வீரவனம் அளகை என்னும் பெயர்களை உடைய ஒரு சிவப்பதி இருக்கின்றது. அச்சிவப்பதிக்கு நிகரான சிவப்பதி இப்பூவுலகில் வேறு ஒன்றும் இல்லை. அச்சிவப்பதியை உள்ளத்தால் எண்ணுவோரும் வாக்கால் மொழிவோறும் வீடு பேற்றினை எளிதிலே அடைவார்கள். பொன்னுலகத்தில் வாழ்கின்ற தேவர்கள் அப்பதியினைச் சிவலோகம் என்று கூறுவார்கள். அந்த வீரவனத்தின் பெருமையைக் காந்த புராணத்தின் சனத்குமாரசங்கிதை சாற்றுகின்றது. அதனை யான் உங்கட்கு உரைக்கின்றேன் மெய்யன்போடு கேட்பீர்களாக" என்று இயம்பி வீரவனப்பெருமையை விளம்பலானார்.

3. வீரசேகரர் திருமுடித் தழும்பு பெற்றது.

வீரவனத்து மரங்கள்

அந்த வீரவனமானது முன்னாளில் அரசு எலுமிச்சை, அத்தி, கொன்றை, நெல்லி, கண்டில்வெண்ணெய், முந்திரிகை, புரசு, வெட்பாலை, கோங்கு, காட்டத்தி, புன்னை, யா, மூங்கில், மந்தாரம், விரசு, பூவரசு, கூவிளம், நொச்சி, வேம்பு, பச்சிலை, விளா, வன்னி, பூவத்தி, சண்பகம், ஞாழல், பாரிசாதம், பனை, அசோகு, ஆல் அழிஞ்சில், கதலி, பேரீந்து, மதிங்கம், ஈந்து, ஏழிலைம்பாலை, வேல், சுரபுன்னை, இலந்தை, மருது, திமிசு, வெள்ளிலோத்திரம், குருந்து, இருப்பை, பூல், காவீரம், சந்தனம், நாவல், புன்கு, குங்கிலியம், தமாலம், வீழி, வெண்ணெய், சே, புளி, குருக்கத்தி, பாடலம், தேக்கு, முதலிய மரங்களால் சூழப் பெற்றிருந்தது.

வீரன்

அந்த வீரவனத்தின் அக்கினி மூலையிலே; அரையோசனை தொலைவிலே, வேடர்கள் தலைவன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெயர் வீரன். அவன் மிகுந்தபேராற்றல் உடையவன். அவனுக்குத் தாடி சடைமுடி முதலியன வளர்ந்திருந்தன. அவன் ஒருநாள் வனத்துட் கிழங்கு கொணரும் கருத்திற் புறப்பட்டான். அவனுடைய நாய் அவனைப் பின்தொடர்ந்தது.அவனுடைய கையிலே கிழங்கு முதலியவற்றைத் தோண்டுதற்குரிய இரும்புக் கருவி இருந்தது. அவ்வீரன் வீரவனத்திலே புகுந்தான். வீரை மரம் ஒன்று ஓரிடத்தில் வானளாவ வளர்ந்து நின்றது. அம்மரத்தின் அடியிலே புற்று ஒன்று அமைந்திருந்தது. அப்புற்றிலே வள்ளிக்கொடி ஒன்று தோன்றி வீரைமரம் முற்றும் மூடிப் படர்ந்திருந்தது.

கிழங்குள்ள கொடிகளைத் தேடித்திரிந்த வீரன் புற்றையும் வள்ளிக் கொடியையுங்கண்டான். அவனுக்குச் சிவபிரானுடைய திருவருள் கைகூடுங்காலம் நெருங்கியது. உள்ளத்தூய்மையுடைய அந்த வீரனுடைய உள்ளத்திலே தீய எண்ணங்கள் ஒன்றும் இல்லை. அந்த புற்றின் அடியில் சிவலிங்கம் ஒன்று இருத்தலை அவன் அறியான். கிழங்கு தோண்ட எண்ணிய வீரன் கையில் இருந்த இரும்புப் படையினால் புற்றினை இடித்தான். புற்று இடிபட்டது இரும்புப்படை சிவலிங்கத்தின் திருமுடியில் சிறிது தாக்கியது. தாக்கப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வெளிப்பட்டது. இரத்தத்தைக் கண்ட வீரன் மயங்கி மூர்ச்சித்து மண்மேல் வீழ்ந்தான்.

வீரன் மனைவி வருதல்

மூர்ச்சித்து வீழ்ந்த வீரன் அப்படியே நெடுநேரம் கிடந்தான். வீரனைத் தொடர்ந்து வந்த நாய் நல்லறிவுள்ளது. தன் தலைவனுக்கு ஏதோ தீங்கு நேரிட்டுவிட்டது என்று அஃது ஒருவாரு அறிந்துகொண்டது அதற்கு வருத்தம் உண்டாகியது. வீரனை முகர்ந்து பார்த்தது. காலால் வருடியது. அங்கும் இங்கும் ஓடியது;கத்தியது. பிறகு அது வீரனுடைய வீட்டை நோக்கி ஓடியது. வீரன் மனைவியைக்கண்டு துன்பமுகங்காட்டியது. நாயின் நிலைமையை வீரன் மனைவி கண்டாள். நம் தலைவனுக்கு ஏதோ தீங்கு நேரிட்டிருக்கிறது. இன்றேல் இஃது இவ்வாறு தனியே கலக்கத்துடன் ஓடிவருவதற்குக் காரணம் என்ன? என்ற எண்ணி உள்ளங் கலங்கினாள். நாய் வழிகாட்டத் தன் தலைவன் விழுந்துகிடக்கும் இடத்தை அடைந்தாள் தலைவனைக் கண்டாள். உள்ளம் பதைத்தாள். வயிற்றிலே அடித்துக் கொண்டு அழுதாள். உயிர் இருக்கின்றதா இல்லையா என்று மூக்கின்மேல் விரலை வைத்துப் பார்த்தாள். உயிர்ப்புக்காற்று வருதலை உணர்ந்தால். தலைவன் இறக்கவில்லையென்று அறிந்தாள். இவ்வாறு நேர்தற்குக் காரணம் யாதென்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள். வள்ளிக்கிழங்கு இருத்தலைப் பார்த்தாள். அதன் அண்மையில் குருதிக் கறைப்பட்டிருப்பதையுங் கண்டாள்.

வீரன் மனைவி சிவலிங்கத்தைக் காண்டல்

குருதிக் கறையை அவள் பார்த்ததும் இவ்விடத்தில் ஏதோ புதுமை இருக்கிறதென்று எண்ணினாள். வள்ளிக்கிழங்கைப் பெயர்த்தாள். அங்கு எழுந்தருளிய சிவலிங்கப்பெருமானைக் கண்டாள். அவளுக்கு மிகுந்த அச்சம் உண்டாகிவிட்டது. இரத்தம் வெளிப்பட்டிருத்தலையும் பார்த்தாள். அதனால் உள்ளம் வருந்திப் புலம்பினாள். வள்ளிக்கிழங்கை எடுத்தற்குத் தோண்டும்போது இறைவனுடைய திருமுடிமேல் இரும்புக்கருவி பட்டுக்காயம் ஏற்பட்டதற்காக அவள் பலவாறு நொந்தாள்.சிவலிங்கத்தின் திருமுடியில் வெளிப்படும் இரத்தத்தைத் துடைத்தாள்.இரத்தம் வருதல் நிற்கவில்லை. அதனால் உள்ளம் வெதும்பிய அவள் நான் என்னுடைய உயிரை விட்டு விடுகிறேன் என்று முடிவு செய்தாள். பலவாறு கதறியழுதாள். சிவபெருமான் அந்த வேட மாதின் மெய்யன்பிற்கு உள்ளம் இரங்கினார். இரத்தம் வெளிவரச் செய்தலை நிறுத்தினார். அதனைக் கண்டு வேட மாது வருத்தம் நீங்கினாள். "சிவபெருமானே! என்னுடைய கணவன் அறியாமையினாற் செய்த குற்றத்தைப் பொறுத்து அவன் மூர்ச்சை தீர்ந்து எழுமாறு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யின் நானும் என் கணவரும் தேவரீருடைய பணிகளைச் செய்து வாழ்வோம்" என்று கூறி மேலும் சிவலிங்கப்பெருமானை வணங்கினாள். வீரன் உடனே மூர்ச்சை தெளிந்து எழுந்தான். வேடமாது உள்ளம் மகிழ்ந்தாள். தன் தலைவனைப் பார்த்து, "வள்ளிக்கிழங்கு தோண்டத் தொடங்கிய நீ இங்கு எழுந்தருளிய சிவலிங்கப்பெருமானைக் காயப்படுத்தி விட்டாயே. அதனால் இவ்விடமெங்கும் இரத்தம் தோய்ந்திருத்தலைப்பார்" என்று சொன்னாள். வேடர்கோனாகிய வீரனும் சிவபெருமானைக் கண்டான். அவன் இறைவனைப் பார்த்து, "எம்பெருமானே தேவரீர் இவ்வெளியேனை ஆட்கொள்வதற்கு ஈண்டு எழுந்தருளியதை ஏழையேன் அறிந்திலேன்" என்று கூறி பலவாறு இரங்கினான்.

இறையவன்மறையவனாய் வெளிப்படல்

வீரன் அன்பும் அவன் மனையாள் அன்பும் இறைவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் அந்தணக்கோலத்தோடு அவர்கட்கு முன்பு தோன்றினார். அவர் இருவரையும் பார்த்து "நாம் உங்களை ஆளுதற்கு ஈண்டு எழுந்தருளினோம். திருமுடியிலே தழும்பேற்ற காரணத்தால் "திருமுடித்தழும்பர்" என்னும் பெயரையும் பெற்றோம். இந்த இரண்டு பெயர்களையும் காலைப் பொழுதிலே சொல்லுபவர்கள் பிறவித் துன்பம் நீங்கப் பெறுவதுடன் நல்லறிவையும் பெறுவார்கள். நாம் இறைவனுடைய திருமுடியிலே தழும்பை உண்டாக்கினோம். அதனால் தீவினையாளன் ஆனோம் என்று நீ உள்ளம் வருந்தாதே. பிரம்படித் தழும்பு, வில்லடித் தழும்பு, கல்லடித் தழும்பு, செருப்படித் தழும்பு முதலிய தழும்புகளைப் பெற்ற நமக்கு இஃதோர் பொருளல்ல. இவைகளெல்லாம் நம்முடைய திருவிளையாடல்கள் என்று அறிவாயாக! இவ்விடத்தில் எம்மையும் வடகீழ்ப்பக்கத்தில் உமையவளையும் நீயும் நின் மனைவியும் வழிபட்டு வருவீர்களாக. அவ்வாறு வழிபட்டு வருவீர்களாயின் இறுதியில் உங்களுக்கு நற்கதியினை வழங்குவோம்" என்று கூறிச் சிவலிங்கத்துக்குள் மறைந்தருளினார். வேடனும் அவன் மனைவியும் சிவலிங்கப்பெருமானை பன்முறை பணிந்து வணங்கினார்கள். பிறகு வடகிழக்குத் திக்கை அடைந்து நோக்கினார்கள். அங்கு உமையவள் திருவுருவம் வெளிப்பட்டு விளங்கியது. அதனைக் கண்ட இருவரும் மிகுந்த வியப்படைந்து போற்றினார்கள். பிறகு தமது இருப்பிடத்தை அடைந்தார்கள். அவர்கள் இருவரும் சிவலிங்கப்பெருமானையும் உமையவளையும் நாள்தோறும் வழிபடுதலை உறுதியான செயலாகக் கடைப்பிடித் தொழுகினார்கள்.

4. சோழன் திருப்பணி

கண்டன் என்னுஞ் சோழன்

காவிரிநீர் பாயப்பெறும் சோழவளநாடு மிகுந்த சிறப்புடையது. தேவாரம் பெற்ற சிவப்பதிகள் இந்நாட்டிலே நிறைந்திருக்கின்றன. இந்நாட்டின் சிறப்பினைச், "சோழவளநாடு சோறுடைத்து" என்று ஆன்றோர்கள் வியந்து பாராட்டியிருப்பதாலும் அறியலாம். இந்நாட்டில் மன்னர் மகுடம் சூடும் ஐந்து நகரங்களுள் பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்றுச் சோழமன்னர்களுடைய ஆட்சிநகராக அந்நாளிலே விளங்கியது. கண்டன் என்னும் பெயரையுடைய சோழமன்னன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். (அவன் அரசாட்சி செய்து கொண்டிருந்த காலம் பாண்டி நாட்டிலே வீரவனத்திலே வீரனுக்கு வீரசேகர சிவலிங்கப் பெருமான் வெளிப்பட்ட காலமாகும்) அந்தக் கண்ட சோழன் பேரழகு வாய்ந்தவன். பகைவர்கட்கு இடியேற்றைப் போன்றவன். ஞாயிற்றின் குலத்திலே தோன்றியவன்;அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவன்; உலகத்து உயிர்கட்குத் தாயைப்போன்றவன்; அவன் தன்னுடைய அரசாட்சியை இனிது செலுத்திக்கொண்டிருக்கும் நாளிலே அவனுடைய ஊழ்வினையினால் வெண்குட்டம் ஒரு பொட்டு அளவு நெற்றியில் உண்டாகியது. பிறகு அது முகம் முற்றும் பரவியது. அதனால் கண்டன் உள்ளம் வருந்தினான். மருத்துவர்கள் பலர் மணிமந்திர ஔடதங்களால் அரசனுடைய நோயைப் போக்குதற்கு மிக முயன்றார்கள். அந்நோய் நீங்குதற்குப் பதிலாக உடல் முற்றும் படர்ந்து மூடியது. அதனால் மன்னன் அளவற்ற தளர்ச்சியடைந்து மூ஬ச்சையுற்றான் அமைச்சர்கள் அவனுடைய மூர்ச்சையை நீக்கினார்கள். "இறைவன் எழுந்தருளிய சிவப்பதிகட்கெல்லாம் சென்று இறைவனை வழிபட்டால் இந்நோய் நீங்கும்; உள்ளம் வருந்துதல் வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்கள்.

கண்டன் சிவப்பதிதோறும் சென்று இறைவனை வணங்கல்

அரசன் அமைச்சர்களின் அறிவுரையைக் கேட்டு அயர்வு தீர்ந்தான். "அப்படியே சிவப்பதிதோறுஞ்சென்று இறைவனைப் போற்றுகின்றேன். அப்படியும் இந்நோய் தீராவிடின் உயிரை விட்டு விடுகின்றேன்" என்றான்.அரசனுடைய உரையைக்கேட்ட அமைச்சர்கள், "இறைவனைப் போற்றினால் பிறவிநோயே தீர்ந்து விடும் போது உடல்நோய் நீங்குவதுதானா அருமை? ஆதலின் உள்ளம் தளரவேண்டாம்" என்றார்கள். அரசன் சிவப்பதிதோறுஞ் சென்று சிவபெருமானைப் போற்றுதற்குப் புறப்பட்டான், வழிச்செலவுக்கு வேண்டிய பெரும் பொருளோடும் உறுதிச் சுற்றத்தினரோடும் படைகளோடும் தன் ஊரைவிட்டுப் புறப்பட்டான்.

சிவப்பதிகள்

முதலில் காசிக்குச் சென்றான். கங்கையிற்படிந்து உலகநாதனைப் போற்றினான். பிறகு, இந்திரநீலப் பருப்பதம், திருக்கேதாரம், திருப்பருப்பதம், அனேகதங்கவாதம் முதலிய வட நாட்டுப்பதிகளைக் கண்டு வழிபட்டான்.திரும்பி தென்னாட்டை அடைந்தான். தொண்டை நாட்டில் காஞ்சிபுரம், திருவோண காந்தன்தளி, திருமேற்றளி, கச்சிநெறிகாரைக்காடு, திருக்கரங்கணின்முட்டம், திருமாகறல், திருவோத்தூர், வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவிலம்பையங் கோட்டூர், திருவிற்கோலம், திருவாலங்காடு, திருப்பாசூர், திருவெண்பாக்கம், திருக்கள்ளிலி, திருக்காளத்தி, திருவொற்றியூர், திருவலிதாயம், திருவடமுல்லைவாயில், பழவேற்காடு, திருமயிலை, திருக்கச்சூர், திருவிடைச்சுரம், திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், அச்சிறுபாக்கம், திருவரசிலி, திருவக்கரை, திருஇரும்பைமாகாளம் ஆகிய பதிகளை அடைந்து வழிபட்டான். பின்னர் நடுநாட்டில் உள்ள திருவரத்துறை திருக்கூடலையாற்றூர், திருத்தூங்கானைமாடம், திருச்சோபுரம், திருவெருக்கத்தம்புலியூர், திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருக்கோவலூர், திருஅறையணிநல்லூர், இடையாற்றூர், திருத்துறையூர், திருமாணிகுழி, திருவடுகூர், திருமுண்டீச்சுரம், திருப்பாதிரிப்புலியூர், திருவாமாத்தூர், திருப்புறவார் பனங்காட்டூத் திருவண்ணாமலை, ஆகிய இடங்களுக்குச் சென்றான்.

வீரவனப் புராணம்

பிறகு துளுவ நாட்டிற்குச் சென்று திருக்கோகன்னத்து இறைவனை வழிபட்டான், மலைநாட்டை அடைந்து திருவஞ்சைக்களத்தண்ணலை வணங்கினான். அதன்பின் கொங்குநாட்டில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருநணா, திருக்கருவூர், திருச்செங்குன்றூர், கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் ஆகிய பதிகட்குச் சென்று சிவபெருமானைப் போற்றினான். பிறகு தன்னுடைய நாடான சோழநாட்டை அடைந்து, கோயில் என்னும் திருத்தில்லை, திருவேட்களம், திருநெல்வாயில், திருக்கழிப்பாலை, தென்திருமுல்லைவாயில், திருநல்லூர்ப்பெருமணம், திருமயேந்திரப்பள்ளி, திருக்கலிக்காமூர், திருச்சாய்க்காடு, திருப்பல்லவனீச்சுரம், திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு, திருக்குருகாவூர், திருக்கோலக்கா, வைத்தீச்சுரன்கோயில், சீகாழி, திருக்கண்ணார்கோயில், திருநின்றியூர், திருப்புன்கூர், திருநீடூர், திருவன்னியூர், திருவேள்விக்குடி, திருச்சேரி, திருக்குறுக்கை, கருப்பறியலூர், திருக்குரக்குக்கா, திருவாளொளிபுற்றூர், திருமண்ணிப்படிக்கரை, திருவோமாம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்கடம்பூர், திருப்பந்தணை நல்லூர், திருக்கோடிக்கா, திருமங்கலக்குடி, திருக்கஞ்சனூர், திருப்பனந்தாள், திருச்சேய்ஞலூர், திருந்துதேவன்குடி, திருவியலூர், கொட்டையூர், திருப்புறம்பயம், திருவிசயமங்கை, திருவைக்காவூர், திருவின்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், பெரும்பலியூர், திருக்கானூர், திருப்பழுவூர், திருமழபாடி, அன்பிலாலந்துறை, திருமாந்துறை, திருப்பாற்றுறை, திருவானைக்கா, திருப்பைஞ்ஞிலி, திருப்பாச்சிலாச்சிரமம், திருவீங்கோய்மலை, வாட்போக்கி, திருக்கடம்பந்துறை, திருப்பராய்த்துறை, திருக்கற்குடி, உறையூர், திரிசிராப்பள்ளி, திருநெடுங்களம், மேலைக்காட்டுப் பள்ளி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருவெறும்பியூர், திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, தென்குடித்திட்டை, திருப்புள்ளமங்கை, திருச்சக்கரப்பள்ளி, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை, திருநல்லூர், திருஆவூர், திருச்சத்தி, முற்றம், திருப்பட்டீச்சுரம், திருவாறை, திருவலஞ்சுழி, திருக்குடந்தை, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருவிடைமருதூர், குரங்காடுதுறை, திருநீலக்குடி, திருவைகன்மாடக்கோவில், திருக்கோழம்பம், திருவாவடுதுறை, திருதுருத்தி, திருவழுந்தூர், திருமாயூரம், திருப்பறியலூர், திருவிளநகர், திருநனிபள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருத்தலைச்சங்காடு, திருக்கடவூர், திருக்கடவூர்மயானம், திருவேட்டக்குடி, திருத்தெளிச்சேரி, திருத்தருமபுரம், திருநள்ளாறு, திருஅம்பர்மாகாளம், திருக்கோட்டாறு, திருமீயச்சூர், திருதிலதைப்பதி, திருப்பாம்புரம், திருவீழிமிழலை, பெருந்துறை, திருவன்னியூர், திருக்கருவிலி, திருநறையூர், திருசித்தீச்சுரம், திருஅரிசிற்கரைப்புத்தூர், திருச்சிவபுரம், திருக்கலயநல்லூர், திருக்கருக்குடி, திருவாஞ்சியம், திருநன்னிலத்துப்பெருங்கோயில், திருக்கொண்டீச்சுரம், திருப்பனையூர், திருவிற்குடி, புகலூர், வர்த்தமானீச்சுரம், இராமநதீச்சுரம், திருச்செங்காட்டங்குடி, திருப்பயற்றூர், திருமருகல், திருச்சாத்தமங்கை, திருநாகைக்காரோணம், திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர், திருத்தேவூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாரூர், திருவாரூர்அரநெறி, திருமூலட்டானம், திருபரவையுண்மண்டளி, திருவிளமர், திருக்கரவீரம், திருப்பெருவேளூர், திருத்தலையாலங்காடு, திருக்குடவாயில், திருச்சேறை, திருநாலூர்மயானம், திருகடுவாய்க்கரைப்புத்தூர், திருவிரும்பூளை, திருவரதை, திருஅவளிவணல்லூர், திருப்பரிதிநியமம், திருவெண்ணி, திருப்பூவனூர், திருப்பாதாளீச்சுரம், திருக்களர், திருச்சிற்றேமம், திருவுசாத்தானம், திருஇடும்பாவனம், திருகடிக்குளம், திருத் தண்டலைநீணெறி, திருக்கோட்டூர், திருத்தேங்கூர், திருவெண்டுறை, கொள்ளிக்காடு, திருக்கொள்ளம்பூதூர், திருக்காறாயில், திருக்கன்றாப்பூர், திருநாட்டியத்தான்குடி, திருநெல்லிக்கா, திருவலிவலம், திருவாய்மூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருஅகத்தியான்பள்ளி, திருக்கோடிக்கா ஆதிய சிவப்பதிகள் யாவற்றையுங்கண்டு வழிபட்டு, கண்ட சோழன் தன்னூராகிய காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான், ஆயினும் அவனுடைய குட்டநோய் ஒருசிறிதும் குறையவில்லை.

பாண்டியநாட்டிற்குப் புறப்படல்

அரசன் அமைச்சர்களையும் அந்தணர்களையும் அழைத்தான், "நல்வினை மிக்க சிவப்பதிகள் பலவற்றைத் தொழுது வழிபட்டும் நோய் சிறிதும் குறையவில்லையே, இனிமேல் யாது செய்யலாம்" என்று உசாவி உள்ளம் வருந்தினான். அவர்கள் அரசனைப் பார்த்துப், "பாண்டி நாட்டில் உள்ள சிவப்பதிகளையுங்கண்டு வழிபட்டபின் பகர்வாயாக" என்றார்கள். அரசன் மீண்டும் முன்போல் சிவப்பதி வழிபாட்டைத் தொடங்தினான்,

திருவாலவாய், திருவாப்பனூர், திருப்பரங்குன்றம், பிரான்மலை, திருவாடானை, திருக்கானப்பேர், திருவேடகம், திருப்பூவணம், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருப்புனவாயில், திருப்புத்தூர் ஆகிய சிவப்பதிகளை அடைந்து சிவபெருமானைப் போற்றினான். திரு இராமேசுரத்திற்குச் செல்வதென்று முடிவு செய்தான். கிழக்குத் திக்குநோக்கிப் புறப்பட்டான்.

வீரவனம் அடைதல்

வீரவனத்திற்கு மேற்குப்பக்கமாக வந்து சேர்ந்தபோது கதிரவன் மறைய, அரசன் தன் படைகளோடு அங்குத் தங்கினான்(பாடிவீடு) கூடாரம் அமைத்துக் காட்டில் உள்ள கனிகளைத் தின்று கவலை தீர்ந்திருந்தான்.

வீரன் கனவு காண்டல்

கண்டன் சிவப்பதிதோறுஞ் சென்று இறைவழிபாடு செய்து கொண்டிருந்த அந்நாளில், வேடனாகிய வீரன் தன் மனைவியோடு வீரசேகரப்பெருமானைப் போற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் வீரனுக்கு அன்பு மேலிட்டது. என்னை ஆளாகக்கொண்ட சிவபிரான் திருக்கோயில் இல்லாமல் இவ்வாறு பெருங்காட்டில் உமையவளோடு எழுந்தருளியிருப்பது நன்றாகுமோ? பிற சிவப்பதிகளைப்போல் இப்பெருமானுக்கு கோயிலும் பூசையும் அமையவேண்டியது இன்றியமையாததாகும். வறியவனாகிய யான் இதன் பொருட்டு யாது செய்வேன்? எவரிடத்திலே சென்று இக்குறையை நீக்க வேண்டுவேன்? இலை சருகு முதலியன உதிராதபடி மூடியிருந்த புற்றையும் இழுஞனாகியயான் இடித்துத் தொலைத்துத் திருமுடியிலே தழும்பு ஒன்றையும் உண்டாக்கினேன். என்னுடைய மனக்கவலை தீருமாறு எம்பெருமான் எந்நாள் திருளவருள் புரிவான்? என்று கூறி வருந்தினான். இக்கவலையினால் உள்ளஞ்சோர்ந்து கிடந்தான். இறைவன் திருவருளால் அவனுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்போது வீரசேகரப்பெருமான், முன்தோன்றிய மறையவர் கோலத்தோடு வீரன் கனவில் தோன்றி வீரனைப் பார்த்து, "அன்பனே! கவலைப்படாதே. நமக்குக் கோயிலும் பூசையும் உண்டாகும் அவைகளை நீயும் காண்பாய்; மற்றவர்களுங்காண்பார்கள். சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்து மன்னன் கண்டன் என்னும் பெயரை உடையவன். நம் இடத்திலே பேரன்புள்ளவன். பழவினைப்பயனால் அவனுக்கு வெண்குட்ட நோய் உண்டாகியது. அவன் அதன் பொருட்டு வருந்தி நம்முடைய பதிகளுக்கெல்லாஞ்சென்று நம்மைப் போற்றி வழிபட்டுக்கொண்டு வருகிறான். இப்போது இராமேசுரத்திற்குச் செல்லும் எண்ணத்தோடு இங்கு வந்து, இந்த வீரவனத்திற்கு மேற்குப்பக்கத்திலே தங்கியிருக்கிறான். உனக்குத் திருவருள் செய்தது போல் அவனுக்குந்திருவருள்புரிய எண்ணங்கொண்டுள்ளோம். அவன் நம்மை வந்து பார்க்குமாறு நீ சென்று அவனிடம் கூறுவாயாக" என்று இயம்பி மறைந்து அருளினார்.

வேடர்கோன் வேந்தனைக் காண்டல்

கனவுகண்ட வீரன் திடுக்கிட்டெழுந்தான். சிவபெருமான் திருவருளை எண்ணி வியந்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு சோழ மன்னனைக் காணப்புறப்பட்டான். கடவுள் கனவிற் கழறியவாறே கண்டன் வீரவனத்தின்மேல்பால் தங்கியிருத்தலைக்கண்ட கண்டன் கணக்கிலா உவகைகொண்டான். அரசன் அமர்ந்திருக்கும் (கூடாரம்) பாடிவீட்டை அடைந்து, வாயில் காவலரைப் பார்த்து. "மன்னனைக் காண்டற்கு நான் வந்துள்ளேன் என்று நீங்கள் அரசனிடம் சென்று கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினான். வாயில்காவலர் அரசனிடம் சென்று, "தங்களைக் காண்டற்கு வேடன் ஒருவன் வந்துள்ளான்" என்று விளம்பினர். "அவனை அழைத்து வாருங்கள்" என்று அரசன் கட்டளையிட்டான். காவலர் வீரனைக் காவலனிடம் அழைத்துச் சென்றனர். வீரன் வேந்தனை வணங்கி ஒருபுறத்திலே ஒடுங்கி நின்றான்.

வேந்தன் வேடனைப் பார்த்து, "நீ யார்? இங்கு வந்த காரணம் யாது இயம்புவாயாக!" என்றான். வீரன் மீண்டும் வேந்தனைப் பணிந்து, "ஐயனே! நான் இந்தக் காட்டில் வாழும் ஒரு வேடன். நின்னைக்கண்டு அடிபணியும்பொருட்டு வந்தேன். இந்தக் காட்டின் கிழக்குப்பக்கத்தில் ஒரு பெரும் வீரைமரத்தின் அடியில் புற்று ஒன்று இருந்தது. அப்புற்றில் இருந்த வள்ளிக்கிழங்கை எடுக்கும்பொருட்டு அதனை இடித்தேன். அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கத்தைக் கண்டேன். அதன் முடி என் கருவியால் தாக்குண்டு உதிரத்தைப் பெருக்கிப் பிறகு மாறியது. அந்தச் சிவலிங்கத்தின் தோற்றத்தை நினக்குத் தெரியப்படுத்தற்கு எண்ணியே அடியேன் இவ்விடத்திற்கு வந்தேன்" என்று கூறி மீண்டும் பணிந்தான்.

நோய் நீங்கல்

வீரசேகரப்பெருமானுடைய தோற்றத்தைக் கேட்ட அளவில் காதின் குட்டநோய் நீங்கியது. அந்தப்புதுமையை அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். அந்தணர் அமைச்சர் முதலியோர் மகிழ்ச்சியடைந்தார்கள். வீரனுங் களிப்படைந்து நின்றான். சிலர் கண்ணாடியைக் கொண்டுவந்து அரசனிடம் காட்டினார்கள். காதின் குட்டம் நீங்கியதைக் கண்ட கண்டன் சிவலிங்கப்பெருமானைக் காண விழைந்தான். " அந்த இலிங்கம் எங்கே இருக்கிறது அதனை எனக்குக் காட்டுவாயாக" என்று கூறி எழுந்தான். அவ்வளவில் காலின் குட்டமும் நீங்கியது. அதனைக் கண்ட அரசன் இறைவன் திருவருளை எண்ணிக் கைகுவித்து வணங்கினான். அப்பொழுதே கையின் குட்டமும் அகன்றது. வேடன் வழிகாட்ட வீர மரத்தடியை அடைந்து வீரசேகரப்பெருமானைத் தழுவிக்கொண்டான். அரசனுடைய குட்டநோய் முழுதும் நீங்கியது. அவனுடைய உடல் முன்னையினும் பேரழகுடையதாய்ச் சாணை தீட்டப்பெற்ற மணியைப்போல் விளங்கியது. அரசன் வியப்புங்களிப்பும் அடைந்தான். வீரசேகரப்பெருமானைப் பலகால் விழுந்து பணிந்து எழுந்தான். பலவகைப் புகழ்பாடல்களைப் பாடினான். பன்முறை இன்பக்கூத்தாடினான். பன்முறை அந்தக் கடவுளின் அருளைக் கொண்டாடினான். பன்முறை தழுவிக் கொண்டான்.

அரசனுக்கு நோய் நீங்கியதால் மகிழ்ச்சிமிக்கது. அவன் களிப்பின் மிகுதியால் அந்தணர்களைத் தழுவிக் கொண்டான் அமைச்சர்களைத் தழுவிக் கொண்டான்; உறவினர்களைத் தழுவிக்கொண்டான்; களிப்புடன் நின்ற வேடனைத் தழுவிக் கொண்டான். " இறைவனுடைய திருவருள் இருந்தவாறென்னே? சிவப்பதிகளையெல்லாம் வழிபடச்செய்த பெரியோர்களின் இயல்பைப் புகழ்வேனோ? என் உடலின் வெளுப்போடு கூற்றுவனின் சிவப்பையும்(சினத்தையும்) நான் போக்கினேன் என்னுடைய ஆணவமலக் கறுப்பும் தீர்ந்தது" என்று பலவாறு கூறி மகிழ்ச்சியடைந்தான். பின்னர் ஒருவாறு தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றான்.

சோழன் திருப்பணி

இருப்பிடத்தை அடைந்த அரசன் அமைச்சர் முதலானவர்களுடைய முகத்தைப் பார்த்து, "காசிமுதலிய சிவப்பதிகட்குச் சென்றும் நீங்காத குட்டநோய் இந்த இடத்திற்கு வந்ததும் நீங்கிவிட்டது. இன்பம் உண்டாகியது. பொருந்திய சிவப்பதிகள் பலவற்றுள்ளும் இப்பதி சிறந்தது என்பதை உணர்ந்தேன். இதனை எனக்குத் தெரியப்படுத்திய இவ்வேடனுக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றுமில்லை. என்னை ஆட்கொண்டருளிய சிவபெருமான் திருக்கோயில் இல்லாமல் காட்டிலே எழுந்தருளியிருக்கிறார். தொழிலாளர்கள் பலரை அழையுங்கள். அவர்கட்குப் பொருளைக் கொடுத்துக் காட்டை அழித்துத்திருத்துங்கள். அழகிய கோயிலைச் சிறப்பாகக் கட்டுங்கள். எவ்வளவு பொருள் செலவானாலும் கவலைப்படாதீர்கள்" என்று கட்டளையிட்டான். அரசனுடைய கட்டளையைக் கேட்ட அமைச்சர்கள் "அவ்வாறே செய்கிறோம்" என்றார்கள். வேடனாகிய வீரனும் அரசனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றான்.

அமைச்சர்கள் தொழிலாளர்கள் பலரை அழைத்துக் காட்டை அழித்து ஒழுங்குபடுத்தினார்கள். வீரசேகரப்பெருமான் எழுந்தருளியிருந்த வீரை மரம் ஒன்றுமட்டும் எஞ்சி நின்றது. அக்காட்டில் இருந்த விலங்கு முதலிய உயிர்த்தொகைகள் வேறுகாட்டை அடைந்தன. காடு களையப்பெற்ற பின் அமைச்சர்கள் சிற்ப நூல் வல்லார் பலரை அழைத்துத் திருக்கோயிலை அமைக்கும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே சிற்ப நூல் வல்லார், கருப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், வசந்த மண்டபம், ஊர்தி மண்டபம், திருவிழா மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், திருமதில், திருக்கோபுரம், திருமடைப்பள்ளி, வேள்விச்சாலை முதலிய எல்லாவற்றையும் அழகுறச் செய்து முடித்தார்கள்.

சோழ தீர்த்தம்

திருக்கோயில் திருப்பணி முடிவுபெற்ற செய்தியை அமைச்சர்கள் அரசனுக்கு அறிவித்தார்கள். அரசன் திருக்கோயில் முதலியவைகளைப் போய்ப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். மூழ்குதற்கு நன்னீர்ப்பொய்கை இல்லையே என்று உள்ளம் வருந்தினான். சிவபிரான் முன்னர்ப் பணிந்து முறையிட்டான். விண்ணொலி ஒன்று "நமக்கு முன்பு சிவகங்கை என்னும் பெயருடைய நன்னீர்ப் பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் எல்லையை அறிதற்கு மணமலர்களையும் சிதறியுள்ளோம். அதன் எல்லைப்படி அதனைத் தோண்டி நினது பெயரை அத்தீர்த்தத்திற்கு இடுவாயாக" என்று முழங்கியது. அரசன் சென்று மலர்கள் சிதறிக்கிடக்கும் எல்லையைப் பார்த்தான். அந்த அளவிற்கு அதனை வெட்டிப் படி முதலியவைகளைக் கட்டி. அதற்குச் சோழ தீர்த்தம் என்று பெயரிட்டான்.

குடமுழுக்கு

கோயிலைச் சுற்றித் தெருக்களை அமைக்கச் செய்தான். நால்வகைக் குலத்தோரும் தங்கி வாழ்தற்கு மாடமாளிகைகளையும் உண்டாக்கச் செய்தான். உணவுச்சாலை முதலியவைகளை ஏற்படுத்தினான், கூத்தபிரான், சிவபிரான் உமையவள் முதலிய மூர்த்திகளுடைய திருவிழா வடிவத்தைச் செய்தான். குடை, கொடி, கவரி கோவிலுக்கு வேண்டிய பாத்திரங்கள் பூசைப்பொருள்கள் முதலிய எல்லாவற்றையும் செய்தமைத்தான். நால்வகை வகுப்பார்களையும் குடியேற்றினான். நன்னாள் ஒன்றிலே பல்லியங்கள் முழங்கக் குடமுழுக்குச் செய்தான். பூசனை செய்யும் ஆதிசைவர்கள், கோயிற் பணிபுரியும் திருத்தொண்டர்கள் ஆகிய எல்லோருக்கும் பொன்னாடை முதலியவைகளை வழங்கினான். நாள்வழிபாடாகிய பூசை, சிறப்பு வழிபாடாகிய திருவிழா முதலியவைகளையும் நடத்தி மேலும் நடத்தற்கு ஏற்பாடு செய்தான். வீரவனத்தின் பெருமையும் சோழன் திருப்பணியும் உலகெலாம் பரவியது. சோழனும் வேடனாகிய வீரனும் மிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

5. சோழன் மகப்பேறும் வீடுபேறும்

கண்டன் கடவுளைப் போற்றுதல்

சோழ மன்னன் ஒருநாள் வீரசேகரப்பெருமானுக்குப் பூசனை முதலியவைகளை மிகுந்த சிறப்புடன் செய்தான். "அன்பு என்னும் தாய் அருள் என்னும் குழவியைப் பெறும் என்பார்கள். நீ நின்னுடைய திருவருளினாலே எனக்குப் பேரருள் புரிந்தாய். உலகோர் தாயற்ற சேய் என்று என்னை இகழாவண்ணம் அன்பையும் எனக்குக் கொடுத்தருள்வாயாக! என் உடலில் தோன்றிய வெண்மையைப் போக்கினாய். பிறவிப் பிணியைக் கொடுக்கும் வெண்மையையும் (அறிவின்மையையும்) போக்கியருளுதல் வேண்டும்." என்று கூறி வீரசேகரப் பெருமானைப் புகழ்ந்து பாடலானான்.

   வீரசேகரர் வணக்கம்

ஒருமல வலியான் என்றும், 
    இருவினை உடையான் என்றும், 
வெருவுமும் மலத்தான் என்றும்  
    விளம்பினர் விளம்பி நிற்க
அருள்கனிந் தென்னை ஆண்டாய்:
     ஆண்டதற் கியையு மாறுன்
பொருவிலா ஞானம் ஏய்த்தி
     பூரணா நந்த வாழ்வே.     (1)

வெருவுற மடங்கும் ஓரேழ்
     விடையுடை விடையாய் போற்றி
கருநிறக் கடல்சு வற்றும்
     கணையுடைக் கணையாய் போற்றி
பெருகெழில் சுமந்த ஆக்கப்
     பெண்ணுடைப் பெண்ணாய் போற்றி
முருகலர் மேனிக் கொப்பு
    முகிலுடை முகிலாய் போற்றி.    (2)

கமலையொண் மாமை நோக்கும்
    கண்ணுடை அடியாய் போற்றி
அமருமக் கண்சூழ் என்பு
     கைவிரல் அணிந்தாய் போற்றி
பமரமுண் டுழக்கும் பச்சைத்
    துளவொரு பாலாய் போற்றி
தமரவே தங்கள் நாறும்
    பரிகலம் தரித்தாய் போற்றி.     (3)

திரிபுரம் எரித்தாய் போற்றி
    தீமழுத் தரித்தாய் போற்றி
கரியற உரித்தாய் போற்றி
     கலைபல விரித்தாய் போற்றி
அரியுடல் பரித்தாய் போற்றி
    அடியர்மா சிரித்தாய் போற்றி
விரியறந் தெரித்தாய் போற்றி
     வீரைஅங் குரித்தாய் போற்றி.   (4)

ஒளிகெழு பிழம்பே போற்றி
    உமையவள் மணாள போற்றி
அளிகொளெண் குணத்தாய் போற்றி
     அமைந்தவெட் டுருவாய் போற்றி
முளிதவிர் வீரை மூலம் 
    முளைத்தெழு சுடரே போற்றி
தெளிபவர்க் கினிக்கும் வீர
    சேகரப் பிரானே போற்றி.        (5)

இவ்வாறு வீரசேகரப்பெருமானைப் போற்றி வணங்கிய சோழன் பிறகு உமையவள் முன்பு சென்று அந்தப் பிராட்டியையும் புகழ்ந்து வணங்கலானான்.

   உமையவள் வணக்கம்

உருகுமெய் அடியர் உள்ளத்
    தொளிவளர் விளக்கே போற்றி
கருகுவன் மலநோய் தீரக்
    கடைக்கணித் தருள்வாய் போற்றி
பெருகுபல் லறமும் நாளும்
     பெயர்வற அமர்ந்து வாழும்
குருகுமுன் கையாய் போற்றி
     குலமலை மருந்தே போற்றி.      (1)

எண்ணிய அன்பு செய்வார்
    என்றுமெய்ப் புறாமல் ஓம்பும்
புண்ணிய முதலே போற்றி
    பூரணா நந்த ரூபம்

நண்ணிய தாயே போற்றி
    நல்லவர் நயந்து நாளும்
அண்ணிய வீரை மேவும்
     அருட்பெருங் கடலே போற்றி.    (2)

நகுபரை யாதி யிச்சை
    ஞானம்வண் கிரியை ஆகி
மிகுதொழில் ஐந்தும் எங்கள் 
     வீரசே கரனார் செய்யத்
தகுதுணை ஆகி நிற்கும்
    தண்ணிய அமுதே தஞ்சம்
புகுமவர் எய்ப்பில் வைப்பே
    புண்ணிய வாழ்வே போற்றி.       (3)

அறைதரும் இலயம் போகம்
     அதிகாரம் மூன்றும் ஆகி
நிறைதரும் இனும்பல் வேறாய்
    நிகழ்தரு திருவே போற்றி
மறைதரு முதலே போற்றி
    மறையினுட் பொருளே போற்றி
உறைதகு மறையின் அந்தம்
    உணர்தரா உமையே போற்றி.      (4)

மருவளர் அளகம் போற்றி
    வளர்ஒளி வதனம் போற்றி
உருவளர் அருட்கண் போற்றி
    உவமையில் செவ்வாய் போற்றி
கருவளர் பவந்தீர் ஞானங்
    கசிந்தெழு கொங்கை போற்றி
திருவளர் உமையே நின்பொற்
    சேவடிக் கமலம் போற்றி.        (5)

இவ்வாறு வணங்கிய சோழன் மேல்பாற்காட்டில் அமைந்த தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்றான். தான் தங்கியிருந்த இடத்துக் காடுகளையெல்லாம் அழித்துச் சோழ மன்னன், அந்த இடத்திலே தன் பெயரால் ஓர் ஊர் உண்டாக்கி; அவ்விடத்திலேயே தங்கியிருந்து கொண்டு நாள்தோறும் வீரசேகர்ப்பெருமானையும் உமையாம்பிகையையுஞ் சென்று வணங்கி வந்தான்.

மகப்பேறு

கண்ட சோழனுடைய மனைவியின் பெயர் சுசீலை; பேரழகு வாய்ந்தவள். அவள் உமையாம்பிகையினிடத்திலே பேரன்பு கொண்டாள். வெள்ளிக் கிழமை தோறும் சிவகங்கையில் மூழ்கி மாவிளக்கு வைத்து இறைவியை வழிபட்டதுடன்; வடை, பாயசம், பால்சோறு முதலியவைகளைச் செய்து பூசை செய்யவும் ஏற்படுத்தினாள். சுசீலையின் விருப்பம் நன்மகப்பேற்றை அடையவேண்டும் என்பதுதான். உமையாம்பிகை சுசீலையின்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்தினாள். இறைவியின் திருவருள் நோக்கிற்குப் பின் அருமையான பொருளும் உண்டோ ? நன்னாள் ஒன்றிலே சுசீலை ஆண்மகனைப் பெற்றாள்.

வீரசேகரச் சோழன்

தனக்கு ஆண்மகன் தோன்றியதைக் கண்டு கண்ட சோழன் பெருங்களிப்படைந்தான். மறையவர் முதலியோர்க்கு மணிபொன் முதலியவைகளை வழங்கினான். தேர்ந்த கணிதர்களைக் கொண்டு பிறந்தநாட் குறிப்பு முதலியவைகளை எழுதச் செய்தான். அம்மகனுக்கு வீரசேகரச்சோழன் என்று பெயரிட்டான்.

இராமேசுரஞ் சென்று மீளல்

சோழமன்னன் காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செல்லுதலை அடியோடு மறந்திருத்தலைக் கண்ட அமைச்சர்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று நினைவுண்டாக்கினார்கள். நாட்டை விட்டுப் புறப்பட்டு நெடுங்காலமானதை அறிந்த அரசன் புகாருக்குத் திரும்ப எண்ணினான். வீரவனப்பெருமானை விட்டுச் செல்ல அவன் உள்ளம் இடங்கொடுக்கவில்லை. இறையவன் முன்சென்று, "கறைமிடற்றண்ணலே! உன்னை யான் எவ்வாறு மறந்திருப்பேன்?" என்று கூறி இரங்கினான். இறையவன் விண்ணொலியாக, "அரசனே! நீ இப்பொழுது நின் ஊர்க்குச்செல். ஆண்டிற்கொருமுறை சித்திரைத் திங்களிலே இங்கு வந்து வணங்கிச்செல் பலன் கிடைக்கும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அரசன் தன் மனைவியோடு வீரசேகரரிடமும் உமையாம்பிகை இடமும் பிரியா விடைபெற்றுப் புறப்பட்டான்.பிரிவதற்கு வருந்திய வேடன் வீரனுக்கும் தகுந்த நன்மொழிகள் கூறிப் படையுடன் புறப்பட்டான். இராமேசுரஞ் சென்று வழிபாடாற்றிக் கொண்டு மீண்டான். சோழன் வருகையை உணர்ந்த பாண்டியன், சோழனை வரவேற்று விருந்து நடத்தினான். சோழன் வீரவனத்தின்கண் நிகழ்ந்த செய்திகளையெல்லாம் பாண்டியனுக்குப் பகர்ந்தான். பிறகு தன் உறுதிச் சுற்றத்தோடு புகாரையடைந்தான். இறைவன் கட்டளைப்படி ஆண்டுக்கொரு முறை வீரவனத்தை அடைந்து இறைவழிபாடு செய்து கொண்டிருந்து இறுதியில் சிவலோகம் அடைந்தான். வீரனும் தன் மனைவியோடு நெடுநாள் வீரவனேசரை வழிபட்டுக் கொண்டிருந்து, இறுதியில் வீடுபேற்றை அடைந்தான்.

6. வீரை பலவாகியது

சுகுண பாண்டியன்

அந்நாளில் சுகுணபாண்டியன் என்பவன் மதுரையில் அரசு புரிந்துகொண்டிருந்தான். கண்டசோழனால் வீரவனத்தின் பெருமையை உணர்ந்த அவன் வீரவனப் பெருமானைப் போற்றி வழிபடுதற்கு எண்ணினான். உறுதிச் சுற்றத்தினரோடு புறப்பட்டுக் காடுகளைக் கடந்து வீரவனத்திற்கு வந்து சேர்ந்தான். சோழ மன்னனுடைய திருப்பணிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். சிவகங்கையில் மூழ்கினான். திருநீறுகண்மணிமாலை முதலியவைகளை அணிந்தான். ஐந்தெழுத்து மறையை ஓதினான. கோபுர வாயிலிலே பணிந்து எழுந்து கோயிலுக்குள் வலம் வரத் தொடங்கினான் பாண்டியன் உள்ளத்தில் ஓர எண்ணந் தோன்றியது. "இக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கம் மிகப் பெருமை பொருந்தியது என்று சோழன் சொன்னது பொய்யோ மெய்யோ தெரியவில்லை. வியத்தகு நிகழ்ச்சி ஒன்றைக் கண்டால் சோழன் சொன்னது உண்மைதான் என்று துணியலாம்" என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு சென்றான். வடக்குப் பக்கத்தை அடைந்தவுடன் வானளாவி நின்ற வீரைமரத்தைக் கண்டான். அம்மரத்தின் பெயர் யாது என்று பக்கத்தில் இருந்த முதியவர்களை உசாவினான். அம்மரத்தின் பெயர்"வீரை" என்று அவர்கள் மறுமொழி கூறினார்கள். அதைக்கேட்ட பாண்டியன் அம்மரத்தைப் பலா மரமாகுமாறு வீரசேகரப்பெருமான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் அப்பெருமான் உண்மையாகப் பெரும் பெருமை பொருந்தியவர்தான் என்று உள்ளத்திலே எண்ணிக்கொண்டு சென்றான்.

வியத்தகு நிகழ்ச்சி

அவ்வளவில் அவ்வீரைமரம் பலாமரமாக மாறியது. பாண்டியன் இரண்டாம்முறை வலஞ்செய்யத் தொடங்கி மேற்குப் பக்கமாகச் சென்றவுடன் பலாப் பழத்தின் நறுமணம் மூக்கைத்துளைத்தது. பாண்டியன் முதலிய எல்லோரும் அதனை அறிந்தார்கள்.அதுபலாப் பழத்தின் மணந்தான் என்று துணிந்த பாண்டியன் வடக்குப் பக்கத்தை அடைந்தான். அங்கு முன்பு கண்ட வீரை மரத்தைக் காணவில்லை. அம்மரம் நின்ற இடத்திலே பலா மரம் விளங்குதலைப் பார்த்தான். அம்மரம் வானளாவி நின்றது. அடிமுதல் முடிவரை கனிகள் நிறைந்து இருந்தன. கோயிலின்மேல் பலாக்கனியின் சாறு ஒழுகிக் கொண்டிருந்தது. மேலும் அச்சாறு கல் தரைகளிலும் ஒழுகிப் பிசுபிசுப்பைச் செய்தது. கனியின் பக்கங்களிலே ஈக்கள் மிகுதியாக மொய்த்துக் கொண்டிருந்தன. இந்த வியத்தகு நிகழ்ச்சியைப் பலருங் கண்டார்கள். பலா மரத்தினைப் பார்த்து இறும்பூதடைந்தார்கள், சுற்றுப்பக்கத்து ஊரினரும் அப்புதுமையைப் பார்ப்பதற்கு அங்கு வந்து கூடினார்கள், இஃது எங்குங் கண்டறியாத புதுமையாக இருக்கிறதென்று பேசிக் கொண்டார்கள் சிலர் பலாச்சுளைகளை உண்ணுதற்கு விரும்பிக் கையிலெடுத்தார்கள். உண்டால் யாது நேருமோ என்று அஞ்சித் தரையிலே போட்டுவிட்டார்கள்.

சிலர் இது வீரவேகரருடைய திருவிளையாடல் என்று செப்பினார்கள். சிலர் இஃது உமையாம்பிகையின் திருவிளையாடல் என்று உரைத்தார்கள் சிலர், இஃது இருவருஞ் சேர்ந்து செய்த திருவிளையாடல் என்றார்கள். சிலர் இதற்கு ஒப்பான சிவப்பதி வேறு இல்லை என்றார்கள். பலரும் இப்படிப் பலவாறு பகர்ந்து கொண்டிருக்கப் பாண்டிய மன்னன் நாம் உள்ளத்தில் எண்ணியதற்காகவே இறைவன் இவ்வாறு செய்துள்ளான் என்று உறுதியாக அறிந்தான். "அந்தோ நாம் அறிவின்மையின் இவ்வாறு உள்ளத்தில் எண்ணினோம். வேறொரு தீமை நேர்ந்திருப்பின் அதனை யாரே தடுப்பார் என்று நினைந்தான். தான் எண்ணியதை எல்லோரும் அறியுமாறு தெரியப்படுத்தினான். பின்னர் வீரசேகரப்பெருமாள் முன்னர்ச் சென்றான் அழுதான்: தொழுதான்:நிலத்திலே விழுந்தான். மூவுலகும் போற்றும் முதல்வனே! நின் பெருமையை நான் அறியேன். திருமால் முதலியவர்களும் நின் பெருமையை அறியார்கள் எனின் இச்சிறியேன் எவ்வாறு அறிவேன்? என்செயல் எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது. ஓர் அரசன் ஒரு வேடன் கூறியதைக் கேட்டுத் திருப்பணி முதலியவைகளைச் செய்தான். இவனோ அறிவில்லாமல் சிவபெருமானுடைய பெருமையை ஆராய்ந்து பார்த்தான். இவனுடைய குலத்தினரும் இச்செய்கையையே நெறியாகக்கொண்டுள்ளார்கள் போலும் என்று உலகத்தார்கள் நினைக்க நான் பெரிய தவற்றினைச் செய்தேன். இறைவனே! என்னுடைய குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று பலவாறு இரங்கி வருந்தினான்.

இறைவன் திருவருள்

வீரசேகரப்பெருமான் சுகுணபாண்டியனுக்குத் திருவருள் புரியத் திருவுள்ளங்கொண்டருளினார். "பாண்டியனே! கேட்பாயாக. நீ நம் பெருமையை ஆராய்ச்சி செய்து பார்த்தது நல்லதுதான். உலகத்தார் பலரும் நம் பெருமையை நன்கு அறிந்து கொள்ளுமாறு நீ செய்தாய். உனக்கு வேண்டுவது யாது? அதனைத் தெரிவிப்பாயாக! இந்த பலாக் கனியை எல்லோரும் அன்புடன் உண்க நீயும் உண்பாயாக! உண்பவர்கட்குள்ள நோய்களெல்லாம் நீங்கும் இறுதியில் இப்பலா முன்போல் வீரை மரமாகவே விளங்கும்" என்று உருவற்ற விண்ணொலியாக விளம்பினார். பாண்டியன், "நான் உய்ந்தேன் உய்ந்தேன்" என்று உரைத்து ஒரு கனியை எடுத்து உண்டான். எல்லோரையும் எடுத்து உண்ணுமாறு பணித்தான். அரசனுக்குத் தீராமல் இருந்த வயிற்று நோய் தீர்ந்தது. உண்டவர்கள் யாவருக்கும் இருந்த நோய்கள் நீங்கின. பலரும் பாண்டியனைப் புகழ்ந்தார்கள். பலா மரம் பழமைபோல் வீரை மரமாக விளங்கி நின்றது. வானவர்கள் மலர்மாரி பெய்தார்கள் பாண்டியன் வீரசேகரர் கோயிலுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தான். தானும் பல திருப்பணிகளைச் செய்தான். வீரசேகரப்பெருமானையும் உமையாம்பிகையையும் வணங்கித் திருவாலவாயை அடைந்தான். அங்குள்ளவர்கட்க்கு வீரவனத்தின் பெருமையைக் கூறினான். மிகுந்த சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

7. குபேரன் வழிபாடு

குபேரன் தவம்

குபேரன் என்பவன் நான்முகனுடைய கொள்ளுப்பேரன். விச்சிரவா என்பவனுக்கு மைந்தன். குபேரன் பிறந்தவுடனே தன் தந்தையைப் பணிந்து, "நான் செய்ய வேண்டியதைத் தெரிவித்தருள்க " என்று வேண்டினான். விச்சிரவா தன் மைந்தனைப் பார்த்து, "இறைவனை நோக்கித் தவம் புரிக" என்று கட்டளையிட்டான். குபேரன் மீண்டும் தன் தந்தையைப் பார்த்து, "இறைவனுடைய தன்மை எத்தன்மையது? அதனைக் கூற வேண்டும்." என்று வேண்டிக்கொண்டான்.

விச்சிரவா தன் மைந்தனைப் பார்த்து. " இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலுக்கும் முதல்வனாவான். உலகத்து உயிர்த்தொகைகளுடைய துன்பத்தைப் போக்கிச் சுகத்தைச் செய்தலால் சங்கரன் எனவும் கூறப்படுவான். அவனுடைய பெயர் இன்னும் பலவாகும். அவன் எல்லோரினும் பெரியவன் ஆவான். ஞாயிறு திங்கள் முதலியவற்றின் இயக்கமும் நான்முகன் திருமால் முதலியோர்களுடைய தொழிலும் அப்பெருமானால் தான் நிலைபெறுகின்றன. அப்பெருமாளுனுடைய பெருமை எவராலும் கூறமுடியாது. அப்பெருமானை வழிபடுதலால் கல்வி, செல்வம், போகம், ஆயுள் முதலிய நன்மைகள் எல்லாவற்றையும் அடையலாம். மேலும் மெய்யறிவையும் வீடுபேற்றையும் அடையலாம்.அந்தணர்களைக் கொலை செய்த தீவினை: தாய் தந்தை மக்கள் முதலியவர்களைக் கொன்றதனால் உண்டாகிய தீவினை, மற்றைத் தீவினைகள் ஆகியவைகளைல்லாம் இறைவனுடைய பெயரைக் கூறிய அளவில் நீங்கும். ஆகையால் நீ பரமசிவனுடைய திருவடிகளை நினைத்துத் தவஞ்செய்வாயானால் உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். ஆகவே அப்பெருமானை எண்ணித் தவம் புரிவாயாக" என்று கூறினான்.

குபேரன் தந்தையைப் பணிந்து தவம்புரியச் சென்றான். மகாமேருமலையில் ஓரிடத்தில் அமர்ந்து தவஞ் செய்தான். சிலநாள் கிழங்குகளை உண்டான்: சிலநாள் கனிகளைத் தின்றான்: சிலநாள் பசிய காய்களைத் தின்றான்: சிலநாள் சருகுகளை உண்டான்: சிலநாள் தண்ணீரைக் குடித்தான்.சிலநாள் காற்றை அருந்தினான். சிலநாள் எதுவும் உண்ணாமல் இருந்தான். இப்படியே ஆயிரம் ஆண்டுகள் சிவபெருமானைக்குறித்து அருந்தவம் புரிந்தான். சிவபெருமான் உமாதேவியோடு குபேரனுக்குக் காட்சி கொடுத்தார். குபேரன் சிவபெருமானைப் பணிந்து போற்றினான். நின் எண்ணம் யாதென்று கேட்ட இறைவனைப் பார்த்துக் குபேரன், "நின்திருவடிக்கண் குறையாத அன்பு வேண்டும்;பெருஞ்செல்வம் வேண்டும்; புட்பக விமானம் வேண்டும்; நர வாகனம் வேண்டும்; வடதிசையை அரசாட்சி புரியும் பெருஞ்சிறப்பு வேண்டும் இவைகளை அடியேனுக்குக் கொடுத்தருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான்.

வீரவனத்திற்குச் செல்லக் கட்டளை

குபேரன் வேண்டுகோளைக் கேட்ட சிவபெருமான் குறுநகை கொண்டார். "பூவுலகில் நாம் எழுந்தருளியுள்ள பகுதிகளில் ஒரு சிறந்த பகுதிக்குச் சென்று தம்மை வழிபட்டு நீ விரும்பியவைகளை அடைவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். குபேரன் மீண்டும் இறைவனைப் பார்த்துத் தேவரீர் எழுந்தருளியுள்ள சிவப்பதிகளில் சிறந்த பதி ஒன்றை அடியேனுக்குத் தெரிவித்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான் குபேரனைப் பார்த்துப் "பாண்டி வளநாட்டிலே குருந்தவனத்திற்கு மேற்கே, மருதவனத்திற்கு (கண்டதேவி) வடக்கே, சமிவனத்திற்கு(கோளிலூர்) கிழக்கே, வெள்ளாற்றிற்குத் தெற்கே வீரவனம் என்னும் பெயருடைய ஓர் இடம் இருக்கிறது. மற்றைப் பதிகளைவிட அப்பதியிலே நாம் மிகுந்த விருப்புற்று, உமையவளுடன் வீரசேகரர் என்னும் திருப்பெயரைத் தாங்கி எழுந்தருளியுள்ளோம். அந்த இடம் மிகுந்த சிறப்புடையது. நீ அவ்விடத்திற்குச் சென்று தவம் புரிவாயாக" என்று கூறி மறைந்தருளினார்.

குபேரன் வழியில் உள்ள பதிகளையெல்லாம் கண்டு வழிபட்டுக்கொண்டு பாண்டிய நாட்டை அடைந்தான். மிரவனத்தைச் சேர்ந்து சோழ தீர்த்தத்தில் மூழ்கினான். வீரசேகரரையும் உமையாம்பிகையையும் போற்றி வணங்கினான். பின்னர்த் தவம்புரியத் தொடங்கி நூறாண்டுகள் தவம் புரிந்தான்.

குபேரன் அருள் பெறல்

வீரசேகரப்பெருமான் குபேரனுடைய தவத்திற்கு உள்ளம் மகிழ்ந்தார். உமாதேவியோடு தோன்றிக் காட்சி தந்தார். குபேரனைப் பார்த்து, "ஓ குபேரனே! நீ விரும்பியவைகளையெல்லாம் தந்தோம் நீ தங்குகிற நகரத்தின் பெயரை இப்பதியும் எய்தும். ஆகவே நீ நின்னுடைய அளகைப்பதியை அடைந்து அரசு புரிந்து வாழ்வாயாக" என்று கூறி உமையவளோடு மறைந்தருளினார். குபேரன் மகிழ்ச்சி கொண்டான். பூசை திருவிழா முதலியவற்றை வீரசேகரப்பெருமானுக்குச் செய்து வழிபட்டான். பிறகு தன்னுடைய நகரத்தை அடைந்து அரசியற்றிக் கொண்டிருந்தான். அன்று முதல் வீரவனம் அளகை என்னும் பெயரையும் பெற்றது.

8. சத்தியபுட்கரிணி

ஆதானம் பெற்ற அந்தணன்

பாண்டி நாட்டிலே மங்கலம் என்னும் ஊரிலே வேளாளன் ஒருவன் இருந்தான். அவன் நற்குணமும் நற்செயல்களும் உடையவன். இறைவன் இடத்திலே அன்பு கொண்டவன். அவனுக்கு நெடுநாள் வரையிலும் மகப்பேறு உண்டாகவில்லை. அவன் தன்னுடைய நிலம் வீடுவாசல் முதலிய எல்லாவற்றையும் விற்றுப் பொருளாக்கிக்கொண்டு தன் மனைவியாளுடன் காசிக்குப் போய் இறைவனை வழிபட்டுத் தவஞ்செய்ய எண்ணினான். அப்போது தனக்கிருந்த ஆக்களில் பத்தை இறைவனிடத்தில் அன்புள்ளவனும் கல்வி கேள்விகளில் வல்லவனும் ஆகிய ஓர் அந்தணனுக்குத் தானமாகக் கொடுத்தான். மற்றவைகளை இடையன் ஒருவனிடம் விற்றுவிட்டுத் தான் காசிக்குச் சென்று விட்டான். நாட்கள் பல சென்றன. அந்தணனிடம் இருந்த ஆக்கள் இடையனிடம் விற்க்கப்பட்ட பழகிய ஆக்களோடு போய்ச் சேர்ந்துவிட்டன.

ஆக்களைக் காணாத அந்தணன் தேடிக்கொண்டு வந்து அவைகளை இடையன் இடத்திலே கண்டான். இடையனைப் பார்த்து, "என்னுடைய ஆக்கள் பத்து நின்னுடைய மந்தையிலே வந்து சேர்ந்துவிட்டன. அவைகளை என்னிடங்கொடுத்துவிடுவாயாக" என்று கேட்டான். இடைமகன் ஆக்களைக் கொடுக்க இணங்கவில்லை. அவைகள் தன்னுடையவைகளே என்று வல்லடி வழக்குப் பேசத் தொடங்கினான். அந்தணனைப் பார்த்து, " உன்னுடைய ஆக்கள் என்பதற்கு அறிகுறி காட்டுவாயாக" என்று கேட்டான். "அறிகுறி ஒன்றும் இல்லை. இஃது இஃது என்னுடைய ஆக்களாகும் விட்டு விடுவாயாக" என்றான். (இடையனுக்கு புத்தி புடரியிலே) ஆகையால் அவன் " எல்லாம் என்னுடையதேயாகும் நீ சாட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு வந்தாலும் நான் ஆக்களை விடமாட்டேன்" என்று கூறிவிட்டான்.

அந்தணன் அவ்வூர்க்காரர்கள் சிலரிடம் நிகழ்ந்தவைகளைக் கூறினான் அவர்கள் இடையனை அழைத்துக் கேட்டபொழுதும், "எல்லாம் என்னுடையவைகளே" என்று பொய்யுரை புகன்றான். மேலும் அவர்களைப் பார்த்து, "பழிபாவங்களுக்கு அஞ்சாத இந்தப் பார்ப்பான் பகருவதெல்லாம் பொய். இந்த வழியாக இவனுடைய ஆ ஒன்று வந்ததைக்கூட நான் பார்க்கவில்லை. எல்லா ஆக்களும் என்னால் மிகுந்த பொருள் கொடுத்து வாங்கப் பெற்றவை. நான் கூறுவது முழுவதும் உண்மை" என்றான்.

பாண்டியன்முன் வழக்கு

நடுநிலை பிழையாத அவர்களுடைய அறிவுரையையும் ஆயன் செவியிற்கொள்ளவில்லை. அவர்கள் ஆயனையும் அந்தணனையும் சுகுணபாண்டியனிடம் அனுப்பினார்கள். அறிவற்ற கடையனாகிய இடையன் அந்த வெண்கொற்றக்குடையனிடமும் தடையறப் பொய் பேசினான். சுகுணபாண்டியன் இடையனைப் பார்த்து, "அந்தணன் ஆக்கள் உன் ஆக்களோடு வந்து சேரவில்லை என்று, வீரவனத்தில் எழுந்தருளிய வீரசேகரப்பெருமான் முன் வந்து மொழிவாயா?" என்று கேட்டான். "அந்தணன், ஆக்கள் என்னிடம் வந்தன என்று அங்கும் கூறுவானாகில் வரவில்லை என்று நானும் உரைப்பேன்" என்றான். அரசன் அமைச்சர்களையும் வழக்காளர்களையும் அழைத்துக்கொண்டு வீரவனத்தை அடைந்தான்.

இடையன் கண் இழத்தல்

அரசன் வீரசேகரப்பெருமான் முன் சென்று, ஐயனே! அமலனே! காலகாலனே!!! என்னை ஆண்டவனே!!!! உண்மை வெளிப்படுமாறு திருவருள் செய்வாயாக" என்று வேண்டிக்கொண்டான். வீரசேகரப்பெருமான் உண்மையை வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். "அரசனே! இந்தச் சோழ தீர்த்தத்தில் இருவரும் முழுகி எழுந்தால் உண்மை வெளிப்படு" மென்று விண்ணொலியாகக் கூறியருளினார். பாண்டியன் அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தான். எல்லோரையும் சோழ தீர்த்தக் கரைக்கு அழைத்துச் சென்றான். ஆயனையும் அந்தணனனையும் பார்த்து, " நீங்கள் உண்மையைக் கூறி இந்தப் பொய்கையிலே முழுகுங்கள்" என்று கட்டளையிட்டான்.

"இடையனுடைய ஆக் கூட்டத்தில் என்னுடைய ஆக்கள் பத்துப் புகுந்திருக்கின்றன" என்று கூறி அந்தணாளன் சிவகங்கையில் மூழ்கிக் கரையில் ஏறினான். அவனுக்கு முதுமை நீங்கி இளமை உண்டாகியிருந்ததுடன் சந்தனம் மாலை ஆகியவைகளை அணியப்பெற்றவனாகவும் விளங்கினான். கண்டவர்கள்"சிவசிவ" என்று ஆரவாரஞ் செய்தார்கள். பூமாரி பொழிந்தது.

பாண்டியன் உவப்படைந்தான். இடையனை நோக்கி, "நீயும் உண்மையை உரைத்து மூழ்குவாயாக" என்று கட்டளையிட்டான். கோனான், "கோக்கள் முற்றும் என்னுடையவைகளே" என்று கூறித் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான். அவனுடைய கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன. கோனான் மிகுந்த அச்சமடைந்து தண்ணீருக்குள்ளே தடுமாறிக் கொண்டு நின்றான். மடையனாகிய இடையனுடைய நிலையைக் கண்ட பாண்டியன். "இந்த அறிவிலியின் கையைப் பிடித்துக் கரையேற்றுங்கள்" என்றான். அண்மையில் நின்ற ஒருவன் தண்ணீரில் இறங்கி ஆயனைக் கரையேற்றினான்.

ஆயன் அறிவுபெறல்

இப்புதுமையைக் கண்டோ ர் இடையனின் மடமைக்கு இரங்கினார்கள். அரசன் ஆயனைப் பார்த்து, "ஏட! நீ என்ன காரியஞ் செய்தாய்? இப்பொழுதேனும் அந்தணாளனுடைய ஆக்கள் பத்தையும் கொடுப்பாயா? கொடுக்கமாட்டாய?" என்று கேட்டான். இடையன் அரசனைப் பார்த்து, "வருவதறியாமல் இவ்வாறு கெட்டுப்போனேன். பத்து ஆக்கள் மட்டும் அல்ல; மேலும் பத்து ஆக்களை அந்தணன் வாங்கிக்கொள்க. கண்கண்ட தெய்வமாக விளங்கும் வீரசேகரப்பெருமான் என்னுடைய பொருள்கள் எல்லாவற்றையும் கவர்ந்துகொள்க. நான் இந்தக்கடவுளுக்கு வழிவழி அடிமை செய்வேன். கண்களை இழந்து உயிர் வாழேன். எனக்கு இரங்கியருள வேண்டும். அறிவில்லாமல் நான் செய்த குற்றத்தைப் பொறுப்பது அறமாகும். என் குருட்டைக் கடவுள் நீக்கியருளும்படி செய்ய வேண்டும்" என்று பலவாறுகூறி அரசனைத் தொழுதான்.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள் இடையனுக்காக இரங்கினார்கள். பாண்டியனும் இரங்கினான். " இந்தத் தீர்த்தத்தில் இன்னும் இவன் மூழ்குமாறு செய்வாயாக" என்று உருவிலிச்சொல் எழுந்தது. அதனை எல்லோரும் கேட்டார்கள். அரசன் ஆயனைப் பார்த்து, "மீண்டும் இந்நீரில் மூழுகுவாயாக!" என்று கட்டளையிட்டான். இடையன் அஞ்சி இன்னும் என்ன தீமை நேருமோ என்று கலங்கித் தீர்த்தத்தில் மூழ்கினான். குருடான அவனுடைய கண்கள் இரண்டும் பார்வையைப் பெற்றன. அரசன் முதலியோர் மகிழ்ச்சியடைந்தார்கள். உண்மையை வெளிப்படுத்தியபடியால் சிவகங்கையாகிய சோழ தீர்த்தம் சத்தியபுட்கரிணி என்னும் பெயரையும் அடைந்தது.

இடையன் அந்தணாளனுக்கு அவனுடைய ஆக்களோடு மேலும் பத்து ஆக்களைக் கொடுத்தான். தன் செல்வத்தை வீரசேகரருக்கு உரைமையாக்கித் தான் தனக்கேற்ற தொண்டு செய்துகொண்டிருந்தான். அந்தணன் ஆக்களையெல்லாம் இறைவனுக்கே கொடுத்துவிட்டான். பாண்டியன் வீரசேரைப் போற்றி அமைச்சர் முதலியோருடன் மதுரையை அடைந்தான். தொண்டு செய்து கொண்டிருந்த ஆயன் இறுதியில் சிவபிரானுடைய திருவடிகளை அடைந்தான்.

திருமால் பூசித்தது

சாபம் பெற்ற திருமால்

ஒரு காரணத்தை முன்னிட்டுத் திருமாலைப் பிருகு முனிவர் "பத்துப் பிறப்புக்களை எடுத்துப் பூவுலகில் உழல்வாயாக" என்று சபித்தார். சாபத்தைப் பெற்ற திருமால், நாம் நிலவுலகில் பிறந்து உழலும்போது பகைவர்களால் தோல்வியடையாமல் இருக்க வேண்டுமே அதற்கு யாது செய்யலாம் என்று எண்ணமிட்டார். சிவபெருமான் திருவடிகளைப் போற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்று முடிவு செய்தார். அதற்குத் தக்க இடம் வீரவனமே என்று திருவருளால் தேறினார். புறப்பட்டு வீரவனத்தை அடைந்தார். சிவகங்கையில் மூழ்கினார். திருவெண்ணீற்றை அணிந்தார். கண்மணி மாலையைப் புனைந்தார்; கோவிலுக்குட் புகுந்து நந்தி தேவரைப் போற்றினார்; பிறகு உள்ளே சென்று வீரசேகரப்பெருமானுக்கும் உமையவளுக்கும் அபிடேகம் செய்து வாசனைப் பொருள்கள் அணிந்து மலர்மாலைகள் புனைந்து இனிய உணவுகளைப் படைத்துப் புகழ்ந்து போற்றலானார்.

வீரசேகரரைப் புகழ்ந்து பாடுதல்

எண்ணிய வாறடி யார்பெற
    மேய இரும்பேறே
புண்ணியர் பாலக லாதுவி
    ளங்குறு பொன்னேஉள்
கண்ணிய யோகர் கருத்தி
    னிருங்கதிர் கான்றோங்கும்
அண்ணிய செஞ்சுட ரேயுன்
     அடைக்கலம் அடியேனே.    (1)

கற்பனை யத்தனை யுங்கட
     வாவொளிர் கனவாழ்வே
தற்பர ஞானசொ ரூபகு
     ணாதிச யத்தேவே
புற்புத மாமுடல் வாழ்க்கையெ
     ணாருட் பொலிகோவே
அற்புத சிற்பர னேஉன்
    அடைக்கலம் அடியேனே.     (2)

பிணிகிளர் மெய்யும் அதிற்புகும்
     வாழ்வும் பெரிதென்றே
துணிகிளர் சிந்தையர் என்றுமு
     றாத சுயஞ்சோதி
கணிகிளர் கொன்றைந றுந்தொடை
     வேணிய காபாலி
அணிகிளர் வீரையு ளாய்நின்
     அடைக்கலம் அடியேனே.     (3)

பெயர்வரு நோய்பல வற்றுளும் 
    வெய்துபி றப்பாய
கயமிகு நோயென ஓதுவர்
    அந்தக் கடுநோய்கள்
உயலரி தாமொரு பத்துடை
    யேனென் றொழிவேனோ
அயவர்வறும் வீரையு ளாய்நின்
      அடைக்கலம் அடையேனே.    (4)

பூதரம் நாணிடு புங்கவ!
     சங்கம் புரிகாத!
மாதர மேயவு மாதர! 
     ஓதர! மணிகண்ட
சீதரன் ஆம்எனை ஆதிய
     ராலுந் தெரிவொண்ணா
ஆதர! வீரையு ளாய்நின்
     அடைக்கலம் அடியேனே.       (5)
என்று துதித்து வணங்கினார்.

சிவபிரான் அருள் புரிதல்

திருமாலின் வழிபாட்டைக் கண்டு சிவபிரான் மகிழ்ந்தார். அவர் முன் தோன்றி, "திருமாலே! கேட்பாயாக! நீ சிறந்த இப்பதியை அடைந்து நம்மை வழிபட்டபடியால், நீ எடுக்கப்போகும் பத்துப் பிறவிகளும் உலகத்திற்கு உதவியாக இருக்குமாறு அருள்புரிந்தோம். இப்பதியில் வைகும் தவத்தினர் வீரம் முதலியவைகளை அடைகுவர். ஆகவே நீயும் நிருதி திக்கிலே ஒரு கோயில் கொண்டு அமருவாயாக! நீ வீரத்தை வேண்டி வசந்த காலத்தில் நம்மை வழிபட்டபடியால் உனக்கு வீரவசந்தத் திருமால் என்னும் பெயர் ஏற்படும்." என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். திருமாலும் அவ்வாறே நிருதி திக்கில் கோயில் கொண்டு எழுந்தருளினார்.

வீரராகவன்

இராமாயணம்

சரயு என்னும் ஆறு, வளத்தைப் பெருக்கும் கோசல நாட்டில் அயோத்தி என்னும் நகர் உள்ளது. அந்நகரத்தைத் தசரதன் என்னும் அரசன் அரசாட்சி புரிந்தான். அவனுக்கு இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்று நான்கு மைந்தர்கள் தோன்றினார்கள். அவர்களுள் இராமனையும், இலட்சுமணனையும் விசுவாமித்திரர் அழைத்துச் சென்றார். இராமன் தாடகை. மாரீசன் முதலியவர்களை அழித்து முனிவர் தவத்தை நிறைவேற்றினான். அகலிகையின் சாபத்தை இராமன் போக்கினான். பிறகு மிதிலைக்குச் சென்று வில்லை வளைத்துச் சீதையை திருமணம் புரிந்தான். பிறகு நாட்டை அடைந்தான். கைகேயி விருப்பப்படி தம்பியுடனும் மனைவியுடனும் காட்டிற்குச் சென்றான். பஞ்சவடி தீரத்திலே தங்கியிருந்தபோது இராவணன் என்பவன் சீதையைக் கவர்ந்து சென்றான். பிறகு இராமன், அநுமான், சுக்ரீவன் முதலியவர்களின் துணையால் படை திரட்டிக் கொண்டு இராவணனோடு போர் செய்யப் புறப்பட்டான். தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தான். பொதிகை மலையை அடைந்து அகத்தியரைப் போற்றினான். தனக்கு நல்ல வீரம் உண்டாவதற்கு வழி யாது? என்று அகத்தியரைக் கேட்டான். அகத்தியர் இராமனைப் பார்த்து, "வீரவனம் என்னும் பெயருடைய சிவப்பதி ஒன்று இருக்கிறது. நீ அங்குச் சென்று சிவபெருமானைப் போற்றுவாயானால் வீரம் முதலிய சிறப்புகள் உண்டாகும்" என்று கூறி வீரவனம் இருக்கும் இடத்தையும் அதன் பெருமையையும் விளக்கமாகக் கூறி அருளினார்.

இராமபிரான் வீரவனம் அடைந்து வீரசேகரரைப் போற்றுதல்

இராமபிரான் புறப்பட்டு வீரவனத்தை அடைந்தான். சி