முகப்பிதழ்


ஓம்
வந்தேமாதரம்

ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதாமண்டலம்

கதர் இராட்டினப்பாட்டு

பாரதிதாசன்

முகப்பிதழ் - உள்

ஸ்ரீ சி. சுப்ரமணிய பாரதி கவிதாமண்டலத்தைச்சேர்...(ந்த)

பாரதி தாசன்

இயற்றியவை :

--(0)--

கதர் இராட்டினப்பாட்டு : -- படங்களோடு கூடியது.
விலை அணா 0 - 1 - 6

சிறுவர் சிறுமியர் தேசீய கீதம் :- இதில் நல்ல வர்ண
மெட்டுக்களில் தேசீய கீதங்கள், தேசி(சீ)ய விடுக ...(தை),
தேசீயத் தாலாட்டுகள், தேசீய விளையாட்டுப் பாட்டுக ...(ள்),
சிட்டுக்குருவிப்பாட்டு, நிலாப்பாட்டு, நாய்ப்பாட் ...(டு),
தேசீயக் கப்பல், தேசீய கல்யாணப்பாட்டுகள், அனை ...(த்),
தும் உள்ளன. பாரதியார் ஆப்டோன் படமும் ...(மற்),
றும் உயர்ந்த கருத்துக்களை விளக்கும் சித்திரப் பட ...(ங்க),
ளும் இதில் அடங்கியுள்ளன. கிளேஸ் கடிதத்தில் அ ...(ழ),
காய் அச்சிடப்பட்டது. விலை அணா - 4.

தொண்டர்படைப்பாட்டு : தாய்நாடு, தொண்...(ட)
ரின் எழுச்சி, தொண்டரைக்கூட்டுதல், வீரன்தோ...(ள்),
வீரத்தமிழர், மிதவாதியை எழுப்பல் முதலிய அ§ ...(நக)
துறைகளாக அமைந்தது; நல்லமெட்டுக்கள் உயர்...(தர)
கருத்துக்களை விளக்கும் சித்திரப் படங்கள் விலை அ. 3

விலாசம் :-- P. ஜம்புலிங்க முதலியார்
தம்பு நாய்க்கர் வீதி புதுச்சேரி.

(... = எழுத்துக்கள் ஒட்டியபகுதிக்குள் மறைந்துள்ளவை)

இதழ்கள்

வந்தேமாதரம்

ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி கவிதாமண்டலம்

கதர் இராட்டினப் பாட்டு

ஆசிரியர்

பாரதிதாஸன்

வெளியிட்டவர்
காசி ஈ லக்ஷ்மண் ப்ரசாத்
ஸ்ரீ வேல் நிலயம்
புதுச்சேரி

கலாநிதி பிரஸ் புதுவை

1930

( ரிஜிஸ்டர் செய்யப்பட்டது . . . . . . . . . விலை அணா 1-1/4 )

முகவுரை

நம்பாரத நாட்டில் ஒத்துழையாமை சுடர்விட்டு எரியும்போது, நான் ஸ்ரீ பாரதிதாசனைக்கேட்டுக்கொண்டபடி அவர்கள் எழுதித் தந்த நூற்கள்; இருபது சிறுசிறு நூற்கள்; ஒத்துழையாமையின் ஒவ்வொரு தத்துவத்தையும் பற்றியவை.

அவைகளில் அப்போதே அச்ச்¢டப்பெற்றவை சில; நூல் எழுதி முடிந்தும் முகவுரை -- மேலட்டை- முடிவுறாதவை சில; சில அச்சிக்கூடத்தையே எட்டிப்பார்க்கவில்லை.

முடிவுபெறாமல் இருந்தவற்றில் இக் கதர் -- இராட்டினப்பாட்டும் ஒன்று.

இச்சிறு புத்தகத்தை நயமான விலைக்குப் பாரதவீரர்களின் பார்வைக்குக் கொணர்ந்துள்ளேன் ஆதரிப்பாரெனக்கருதி.

அன்று இதை எழுதித்தந்துதவிய ஸ்ரீ பாரதிதாஸனவர்கட்கு நான் அன்றே என் நன்றியறிதலைத் தெரிவித்துவிட்டேன்.

காசி ஈ. லக்ஷ்மண் ப்ரசாத்
ஸ்ரீ வேல் நிலயம்,
புதுவை

பாரததேவி

வெண்பா

விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் - மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு

பக்கம்-1


வந்தேமாதரம்

ஜன்ம பூமியின் சிறப்பு

வெண்பா

தேர்நின்ற வீதிச் செயபேரிகை முழங்கப்
போர்நின்ற வீரர்குலம் பூத்தநிலம் - பார்நின்று
அடல்வளர்த்துப் பாரதநற் புத்திரன்நான் ஆக
உடல்வளர்த்த நாடு என்உயிர்

குறிப்பு : அடல்வளர்த்து - (என் தேக)பலத்தை வளரச்செய்து

பக்கம்-2,3

காந்தியடிகளும் கதரும்

பறை முழக்கம்

சுவை : வீரம்

இதன்மெட்டு, கடைசிப்பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும்
ஸ்வரத்தால் அறிக

அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
அறைந்திடடா புவி முற்றும் - எங்கள்
அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்

சுற்றும்-சுற்றும்-சுற்றும்

இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம் தட்டு - அட
யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை

கொட்டு-கொட்டு-கொட்டு

இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள்
ஏதமில்காந்தியடிகள் அறச்செயல்

வெல்லும்-வெல்லும்-வெல்லும்

கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
கழற்றுகின்றேன் அதைக் கேளே - நீவிர்
கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்

தூளே-தூளே-தூளே

பால்நுரை போலப் பருத்தியுண்டு சொந்தப்
பாரத தேசத்தில் எங்கும் - எனில்
பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம்

சிங்கம்-சிங்கம்-சிங்கம்

வானம் புனல் சுடர் நாணும்படி உடை
வர்ன(ண)மும் சொர்ன(ண)மும் கொண்டு - பெரும்
வையம் களித்திட நெய்யும் திறம்எமக்

குண்டு-உண்டு-உண்டு

ஆனஇந்நாட்டினைச் சந்தையென் றாக்கிய
அந்நியர் போக்கையும் கண்டோம் - எனில்
ஆக்கந் தருவது சக்கரம் ஆம் எனக்

கொண்டோம்-கொண்டோம்-கொண்டோம்

பானல் விழியுடயாளெங்கள் தாயிந்தப்
பாரினை யாள்பவள் என்றே - நெஞ்சில்
பாயும் எழுச்சிக் கனல் சொன்னதாகச்சொல்

நன்றே-நன்றே-நன்றே

தடக்கைகள் - நீண்டகைகள் ; இன்னல் - துன்பம் ;
ஏதமில் காந்தியடிகள் - குற்றமில்லாத காந்தியடிகள்
கன்னல் - கரும்பு ; பண்டைமுதல் - ஆதிமுதல்
சுடர் - சூரியன் ; பானல்விழி - பானல் பூப்போன்ற கண்
எழுச்சிக்கனல் - ஆவேசத்தீ)

பக்கம்-4 >>> 6

சுதந்தரதேவியும் கதரும்

சுவை : சிங்காரம்
இராகம்-பியாக் / தாளம்-சாப்பு

ஆளை மயக்கிடும் மாதொருத்தி - உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் - அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே - என்னைப்
பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே - உன்றன்
தோளைத் தழுவிடக் கூடும் என்றே - அடி!
சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் - அவள்
காளியனுப்பிய கன்னியென்றாள் - என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)

இந்தத் தினம் இந்த நேரத்திலே - நல்ல
இன்ப மிகுக்கக் கலந்திடுவோம் - இதில்
பிந்தியெதற்கடி மாதரசீ - இங்குப்
பேசிய நேரமும் வீண்கழித்தோம் - என்று
சிந்தை களிக்க உரைத்து நின்றேன் - ஒரு
சேதியிருக்குது கேள் என்றனள் - அந்த
விந்தைக்கேட்கவும் ஆவலுற்றேன் - என்
வேட்கை பொறுக்கவும் கூடவில்லை - பின்பு (ஆளை)

கன்னியுரைத்தது கேட்டிடுவீர் - உள்ளக்
காதல் இருப்பது மெய் எனிலோ - அட
சின்ன இராட்டின நூலிழைப்பாய் - அதில்
தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் - வரும்
அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் - அதற்
கப்புறம் என்னைக் கலந்திடுவாய் - என்று
கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் - அவள்
கட்டளைதன்னை மறப்பதுண்டோ - அந்த (ஆளை)

குறிப்பு : இராட்டினத்தில் நூலிழைத்து நெய்து உடுத்த வேண்டும் அந்நியர் நூலைத் தொலைக்க வேண்டும் அதன் பின்புதான் சுதந்தரம் பெறமுடியும் என்பது இதன் கருத்து

பக்கம்-6 >>> 12

தேசத்தாரின் பிரதான வேலை

சுவை : சாந்தம்

"நாடகங்களிலே கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு"
என்று பாடுவதுண்டு அந்தக் குறத்திப் பாட்டு மெட்டு

பால்நுரைபோல் பாரதத்தில்
பஞ்சுவிளைப்பீரே - நல்ல
பஞ்சுவிளைப்பீரே - அந்தப்
பஞ்சுதனை சுத்திசெய்வீர்
பனிமலைபோல் நீரே

தேனருந்தும் ஈக்களெல்லாம்

சேர்ந்து மொய்த்தல்போலே - மிகச்
சேர்ந்து மொய்த்தல்போலே - முழுத்
தேசமென்று ராட்டினத்தைச்
சேர்ந்து சுற்றுவீரே

ஆனமட்டும் சிலந்தியிழை

போல மெலிதாக - அது
போல மெலிதாக - உம்
ஐந்துவிரல் தேர்ச்சியிலே
அழகிழை நூற்பீரே

ஏனத்தினிற் சோறுகேட்கும்

ஏழையரும் யாரும் - நம்
ஏழையரும் யாரும் - பஞ்
சிழையை நுற்றுத் தரி(றி)நெய்தால்
கொத்தடிமை தீரும்

தாய்நிலம்போய் மற்றவரைத்

தலைவணங்க லாமோ? - தன்
தலைவணங்க லாமோ? - இனித்
தரி(றி)த்தொழிலின் நன்மையினை
மறப்பதுண்டோ நாமே

காய் நினைத்து கனியிழக்கும்

கதை மறப்பீர் நீரே - அந்தக்
கதை மறப்பீர் நீரே - உங்கள்
கதி நினைத்து வறுமை யென்னும்
கனல் அவிக்க வாரீர்

போயழிக்கும் நமதுரிமை

போக்க நினைப்போரை - மெல்லப்
போக்க நினைப்போரை - மிகப்
போற்றுகநீர் இப்பணி யெப்
போது மறவாமே

தோய்மது வாய்க்காதில்வந்து

வீழ்ந்ததொரு வாக்கு - வந்து
வீழ்ந்ததொரு வாக்கு - அது
தொல்லைகெட வந்துதித்த
காந்தி அண்ணல் வாக்கு

கதரணிவீர் என்றுரைத்த

காந்தியண்ணல் ஆணை - எழிற்
காந்தியண்ணல் ஆணை - அதைக்
கருதிடுவீர் அது உமக்கு
நாரதனார் வீணை

கதரணிவீர் என்றமொழி

அடிமையுற்றநேரம் - நாம்
அடிமையுற்றநேரம்
கருதிடுவீர் அதுநமக்கு
நான்மறையின் சாரம்

கதரணிவீர் எனும் அடிகள்

காந்தியின் வாய்க்குமுதம் - நம்
காந்தியின் வாய்க்குமுதம் - மிகக்
கருதிடுவீர் அதுநமது
வாழ்வினுக்கோர் அமுதம்

கதரணிவீர் என்னும் வார்த்தை

யுடனோழுகும் அன்பும் - அத
னுடன் ஒழுகும் அன்பும் - நம்
காந்தியண்ணல் அன்புமொழி
யால் விளையும் இன்பம்

சதுர்நமக்குத் தோளிலுண்டு

மானமுண்டு பாரீர் - நல்ல
மானமுண்டு பாரீர்
சதைவருத்தித் தாயடிமைத்
தனம் அகற்ற வாரீர்

விதிநமக்கு வாய்த்ததுண்டோ

வேற்றுவர்கை பார்க்க - நாம்
வேற்றுவர்கை பார்க்க
விளையும் பஞ்சில் விரல் பொருந்த
விடுதலை நீர் காண்பீர்

அதிகமுண்டு விளைவுநிலம்

அதிகமுண்டு மக்கள் - இங்
கதிகமுண்டு மக்கள்
நிதிக ளெல்லாம் பிறருக்கிட்டு
வறுமைகொள்ள வேண்டாம்

கதரணிவோம் ஒன்றுகூடிக்

கலி தொலைக்க நாமே - தீக்
கலி தொலைக்க நாமே - தீக்
கலிதொலைத்துக் கிருதயுகம்
காணப் பெறுவோ மே

பணி - வேலை,மது - தேன், ஆணை - கட்டளை, வாய்க்குமுதம் - வாயாகிய அல்லி மலர், சதுர் - பலம்

பக்கம்-12 >>> 14

இராட்டினச் சிறப்பு

சுவை : சிங்காரம்

தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே
என்ற மெட்டு

கூட்டமுதம் நானுனக்கு
ராட்டினப் பெண்ணே - அடி
கொஞ்சும்கிளி நீஎனக்கு
ராட்டினப் பெண்ணே

பாட்டினிக்கப் பாடுகின்ற

ராட்டினப் பெண்ணே - பண்டு
பாரதத்திலே பிறந்த
ராட்டினப் பெண்ணே

ஊட்டமுறத் தோளுறமும்

உடலழகும் - எனக்
கூக்கமும் கொடுத்துவரும்
ராட்டினப் பெண்ணே

காட்டுமலர் தேனுருசி

வண்டறிதல்போல் - நாம்
கைகலந்த பின்புசுகம்
கண்டு மகிழ்ந்தேன்

தொட்ட கைகள் விட்டதில்லை

மாதமும் பல - உன்னைச்
சூல்படுத்தி என்னை இன்பம்
தோய வைத்த(¨)ன

எட்டுதிசை யோர் அடையும்

இன்ப மனைத்தும் - நமக்
கின்றளித்த தெய்வமதை
என்றும் மறவோம்

சுட்டிநம்மை வாழ்த்துதடி

இந்த உலகம் - நாம்
துள்ளி விளை யாட ஒரு
பிள்ளை பெற்றதால்

இட்டு வழங்கும் படி செய்

இவ்வுல கெங்கும் - நாம்
ஈன்ற சுதந் தரப் பிள்ளை
காப்பரிசியே

பக்கம்-14 >>> 18

அன்னைக்கு ஆடை வளர்க

சுவை : சோகம்
ப·றொடை வெண்பா

"ஆவி இழக்கலாம்
ஆடை இழப்துண்டோ!
கூவிக் குரல் இழக்கும்
கோதைதுயர் கண்டிருந்தும்!
வீரர்களும் மன்னர்களும்
மீட்கக் கரு தீரோ!
காரிகை என்மானமுங்கள்
கண் முன் இழப்ப துன்டோ?"

என்று துடித்தழுதாள்
அன்றந்தப் பாஞ்சாலி
சென்றுதுர்ச் சாதனன் தான்
சேலை பறித்திடுங் கால்
முப்பத்து முக்கோடி
மொய்ம் புடைய மைந் தர்களை
இப்புவியிற் பெற்ற
எழில் பாரதத்தாளின்
ஆடை பறித்தார்
அதிகாரம் கொண்டவர்கள்
ஓடி அவளின்
உடை மீட்க வேண்டாமோ
பஞ்சு விளைவிக்கப்
பறந்தோட வேண்டாமோ
மிஞ்சு பொதி பொதியாய்
மெல் இழை தான் நு(நூ)ற் கோமோ
நெய்து நெய்து வேறு
நிலத்தார்க்கும் நாமுதவச்
செய்து குவியோ மோ
சிறந்த கதராடை
ஓகொநம் பாரதத்தாய்
உற்றதன் மைந்தரிடம்
சோகத்தால் வாய்விட்டுச்
சொல்லுவதும் கேளீர்

"ஆவியிழக்கலாம்
ஆடைஇழப்பதுண்டோ
கூவிக் குரலிழக்கும்
கோதை துயர்கண்டிருந்தும்
வீரர்களும் மன்னர்களும்
மீட்கக் கருதீரோ
காரிகை என் மானமுங்கள்
கண்முன் இழப்பதுண்டோ?"

கேட்டீரோ நம்மவரே
கீர்த்தியுள்ள பாரதரே
வாட்டுகின்ற தந்தோ நம்
மாதாவின் இம்மொழிகள்

"தீயார் துகிற் பறித்துத்
தீர்க்கின்றார் எனமானம்
மாயாமலர்க்கண்ணா
வந்துதுயர் தீர்த்திடுவாய்"

என்று பாஞ்சாலி
இசைக்க அது கேட்டுச்
சென்று மலர்க் கண்ணன்
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்
வளர்ந்ததுவாம் வண்கடல் போல்
வான் போல் மலையைப்போல்
இங்கது போல் தேசம்
இளமைந்தர் நம்மிடத்தில்
சிங்கம் கதறுதல் போல்
தேம்பி அழுதழுது

"தீயர் துகில் பறித்துத்
தீர்கின்றார் என்மானம்
மாயாமலர்க்கண்ணா
வந்து துயர் தீர்த்திடுவாய்"

என்று ரைத்திட்டாள்
இதனைச் செவியுற்றுச்
சென்று கண்ணக் காந்தி
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்
வளர்க வளர்கநம் வாழ்வு

பக்கம்-18,19

பாரததேவி வாழ்த்து

அகவல்

பொன்னிறக் கதிர்விளை நன்செயிற் புத்தொளி
வடிவமர் அன்னாய் நின்னெழில் வாழ்க
கணுவகல் கரும்பின் இனியநற் சாறும்
கதலியும் செந்நெலும் உடையநீ வாழ்க
தென்றலின் குளிரும் தேன்சுவைப் பழமும்
நன்றியல் சோலை நலத்தினாய் வாழ்க
வானுயர் பனிமலை வண்புனற் கங்கையென்
றுலகெலாம் உரைக்கும் பெரும்பகழ் உடையநீ
முப்பது கோடியர் முனிவராய் வீரராய்ப்
பெற்றிடும் தேவிநீ வீறுகொள் பெற்றியாய்
கலிப்பகை வென்றே தலைநிமிர் குன்றனாய்
கடையுகம் முற்றினும் திறல்கொடாக் காளிநீ
அறமெனும் வயிரக் குலிசத் தோளுடை
அன்னைநீ வாழ்க அன்னைநீ வாழ்கவே

வந்தேமாதரம்

பக்கம்-19,20 முடிவு

ஹார்மோனிய ஸ்வரம்

ஸரி க க / கா க க / கா க க / கா மா கா

அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய

ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா

றைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்

ஸ்ஸ் ஸ்¡ ஸா / ஸ்நி நீநீ / தா தா நீ* / பா மா கா

அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்

கா கா , / கா கா , / கா பம பா ,,

சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,

ஸ்¡ ஸ்¡ நீ / ஸ்¡ ஸ் ஸ் ஸ்¡ ஸ் ஸ் / ஸ்¡ ஸ்¡ ரீ

இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்

ஸ்¡ ஸ்¡ நீ / தா தா தா / தா தா ,, / தப

என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட

பா ஸ்¡ ஸ்¡ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா

யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை

கா கா / கா கா / காம மபா

கொட்டு / கொட்டு / கொட்டு

(* இக்குறி கருப்புக்கட்டை)

பின் உறை-உள்

ஸ்ரீ சச்சிதானந்தர் ஔஷதாலயம்

சென்னை வீதி

புதுச்சேரி


-----

உயர்ந்த ஔஷதங்கட்கு நேரில் எழுதி தெரிந்து கொள்ளவும்.

"ஆவாரம் பூ குல்கந்து" தேகத்திற்கு அமுதினும் இனிமை பயக்கும். ஓருசேர் டப்பி 1-க்கு ரூ. 1

"ஸ்ரீ சச்சிதாந(ன)ந்தர் கல்நார் பற்பொடி" வாய் பற்களைச்
சேர்ந்த எவ்விதக்கெடுதல்களுக்கும் உற்ற
துணையாயிருப்பது பெரிய டப்பி 1-க்கு அ.(ணா) 6.

"படை நிவாரணி" கைகண்ட மருந்து டப்பி 1-க்கு அணா - 8

"நன்னாரி வாலை ஷர்பத்" சர்மநோய், கீல்வாதம், மேகநீர்
இவற்றிற்கு நல்லதுமிக்க குளிர்ச்சியைத்தரும்
பெரிய புட்டி 1-க்கு ரூ 1-4-0

இந்திராணி பரிமள ஸ்நானப்பொடி நறுமணமுள்ளது. சொரி,
தினவு இவைகளை நீக்கி காந்தியை உண்டாக்கும்
பாக்கட் 1-க்கு விலை அணா 2

சீதபேதி மாத்திரை ஆச்சரியமான குணந்தருவது
பாட்டில் 1-க்கு விலை ரூ.-1.

பின் உறை - வெளி

வயிரங்கள்!

-----

பிரான்ஸ்-ஆண்ட்வர்ப், சூய்ஸ்
முதலிய எல்லா வகையிலும்
பல ரகங்களிலும் வேண்டிய
வயிரங்களுக்குக்
கீழ்கண்ட விலாசத்திற்கு
எழுதவும்

VICTOR BLEASDALE

No. 16 Rue de la Marine
Pandichery.

Back to e-Book index ......To see the Original

Web page Design: Adept & Adroit

இணைய இதழ் வனைஞர் : அடெப்ட் அண்டு அட்ராய்ட்



இது ஒரு முதுசொம் வெளியீடு!

A proud release of Tamil Heritage Foundation!