அன்புள்ள நண்பர்களே:

இணையத்தில் தமிழ் முதுசொம் மின்வடிவில் நாளரு புத்தகமும், பொழுதொரு சுவடியுமென செவ்வனே வளர்ந்து வருகிறது. மின்தளத்தில் இத்தகைய முயற்சி நின்று நிலைக்கும் என்பதை இது சுட்டுகிறது.

தமிழ் இலக்கியம் என்பது தொன்று தொட்டு அக்கறை கொண்ட சிலராலேயே பதிப்பிக்கப் பட்டு வழி, வழியாய் இன்று வந்து சேர்ந்திருக்கிறது. அவ்வகையில் 'பாவேந்தர்' பாரதிதாசன் இயற்றிய 'கதர் இராட்டினப் பாட்டு' என்னும் இச்சிறு நூல் தமிழ் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர், ஆசிரியர் திரு.மாலன் அவர்களால் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு மின்பதிவாகியுள்ளது. திரு.மாலன் அவர்கள் தயை கூர்ந்து மிகவும் சிறப்பான ஒரு நூல் குறிப்பும் இத்துடன் தந்துள்ளார். அது இப்புத்தகத்தைப் போலவே பயனுள்ளது.

இந்த அரிய வாய்ப்பை எமக்களித்த திருவாளர் மாலன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையும், தமிழ் கூறும் நல்லுலகமும் என்றும் கடமைப் பட்டுள்ளது.

மிக்க அன்புடன்
நா.கண்ணன்
ஜெர்மனி
மார்ச், 10, 2003.


கதர் இராட்டினப் பாட்டு- சில குறிப்புக்கள்


மாலன்


தமிழுணர்வு, நாத்திகம், சுயமரியாதை இயக்கத் தலைவர்களோடு நட்பு, திராவிட நாடு என்ற கருத்தாக்கத்திற்கு ஆதரவு ஆகியவை பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் காணப்படுவதாலும், திராவிட இயக்க மேடைகளில் அவர் பாடல்கள் மேற்கோள் காட்டப்படுவதாலும் அவரை ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராகவே இன்று பலர் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர் தன் வாழ்வில் ஒரு கட்டத்தில் இந்திய விடுதலைப்போரிலும் தேசிய இயக்கத்திலும், மகாத்மா காந்தியிடமும் பற்றுக் கொண்டு பல பணிகளை ஆற்றினார் என்பதன் ஒரு சாட்சி இந்தக் கதர் ராட்டினப் பாட்டு. அந்த வகையில் இது சரித்திர முக்கியத்துவம் கொண்டது

பாரதிதாசனுக்கு தேசிய இயக்கத்தில் நாட்டம் ஏற்படக் காரணமாக அமைந்தவை பாரதியாரின் பாடல்கள். பாரதியாரை நேரில் சந்திக்கும் முன்னரே பாரதிதாசன் அவரது பாடல்களை அறிந்திருந்தார். பாரதியாரின் முதல் நூல் 'ஸ்வதேச கீதங்கள்'. 1907ல் வெளியானது. அதில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 1908ல் பதிநான்கு பாடல்கள் கொண்ட அதன் இரண்டாம் பதிப்பு வெளியாயிற்று. 1908 செப்டம்பர் வாக்கில் பாரதி புதுவையில் குடியேறினார். அதன் பின் 1909ல் 'ஜன்ம பூமி' என்ற தலைப்பில் பாரதியார் தனது ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார்.

பாரதியார் புதுவை சென்று குடியேறிய பிறகு, சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த 'இந்தியா' பத்திரிகை புதுவையிலிருந்து வெளிவரத் துவங்கியது. 1910 மார்ச் 12 வரை புதுவையிலிருந்து வெளிவந்து நின்று போனது. இந்தியாவிலேயே முதன் முதலாகக் கார்ட்டூன் படங்களை வெளியிட்ட பத்திரிகை பாரதியாரின் இந்தியாதான்.

இந்தியா பத்திரிகை, ஸ்வதேச கீதங்கள் இவைதான் பாரதிதாசனுக்கு (அப்போது அவர் பாரதிதாசன் என்று புனைப் பெயர் சூடிக் கொள்ளவில்லை கனக.சுப்புரத்தினமாக இருந்தார்) பாரதியை அறிமுகம் செய்து வைத்தன. " இந்தியா பத்திரிகையில் சித்திர விளக்கமும் தெளிவாக எழுதியிருக்கும். படங்கள் ராஜீய சம்பந்தமானவை.அர்த்த புஷ்டியுள்ளவை. பத்திரிகை வெளிவருவதை வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்பார்கள். படத்தை வெட்டி அட்டையில் ஒட்டிவிட்டு சுவரில் தொங்கவிட்டு வைப்பார்கள்...." என்று இந்தியா பற்றியும், " சுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். இந்தியா பத்திரிகையின் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவின் விளைவுகள், (பாரதியார் குடியிருந்த தெரு) குவளையின் (குவளைக் கிருஷ்ணமாச்சாரி) கூச்சல் இவைகள் எல்லாம் சுதேச கீதத்தின் உட்பொருளை எனக்கு விளக்கின.அதன் பின் விஷயங்களைக் கொஞ்சம் உணர்வோடும் நான் ஒரு இந்தியன் என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களை என்னால் பாட முடிந்தது, நாளடைவில்" என்று சுதேச கீதங்கள் பற்றியும், பாரதிதாசன் எழுதுகிறார்.

பாரதியாரை நேரில் சந்திக்கும் முன்னரே, அவர் பாரதியார் பாடல்களைத் திருமணம் போன்ற நிகழ்சிகளில் பாடிப் பரப்பத் துவங்கிவிட்டார். இன்னும் சொல்லப் போனால், ஒருமுறை, இந்தப் பாடல்களை எழுதிய பாரதியார் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்பதையே அறியாதவராக அவர் பாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கும் பாரதியாருக்குமான முதல் சந்திப்பு நிகழ்கிறது. அந்த சந்திப்பைப் பற்றியும் பாரதியாரின் தோற்றத்தைப் பற்றியும் பாரதிதாசன் எழுதியுள்ள குறிப்பு மிக சுவையானது.

"எனது கொட்டடி வாத்தியார் வேணு நாயக்கருக்குக் ( பாரதி இவரைத் தன் கதை கட்டுரைகளில் வல்லூறு நாயக்கர் என்று குறிப்பிடுவார்) கலியாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கலியாணம். கலியாணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன்." வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?" என்பதை. அப்போது என் பின் புறமாக இதற்கு முன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவ்ற்றில் ஒன்று 'ரவிவர்மா பரமசிவம்'.

வேணுநாயக்கர் 'இன்னும் பாடு, சுப்பு' என்றார். நான், "தொன்று நிகழ்ந்ததனைத்தும்" என்ற பாட்டைப் பாடினேன். சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர்கள் இருக்கும். முப்பது பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள் நான் பாடும் போது, அந்த ரவிவர்மாப் பரமசிவத்தைப் பார்க்கிறார்கள். அந்த ரவிவர்மாப் பரமசிவத்தின் பெயர், விலாசம், என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராய் இருக்கலாம் என்று தோன்றிற்று

என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாயக்கர்.பாடினேன். அப்போது வேணு நாயக்கர், " அவுங்க ஆர் தெரியுமில்ல?" என்று கேட்டார்.

"தெரியாது" என்று நான் சொல்லி முடிக்கவில்லை. ரவிவர்மாப் படம், " நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?" என்று கேட்டார்.

நான்: கொஞ்சம்
படம்: உணர்ந்து பாடுகிறீர்கள்
வேணு நாயக்கர், அப்போது, " அவங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது! சுப்ரமண்ய பாரதி என்று சொல்றாங்கல்ல?" என்று பரமசிவப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்" என்று பாரதியாரை தான் முதல் முதலில் சந்தித்த நிகழ்ச்சியை விவரிக்கிறார் பாரதிதாசன். ரவிவர்மாவின் பரமசிவப்படம் போல இருந்தார் பாரதியார் என்பது என்ன கச்சிதமான வர்ணனை!

இந்த சந்திப்பு நடந்தது 1911ல். அன்று தொடங்கி பாரதியார் மறையும் வரை அவரோடு பாரதிதாசனுக்குத் தொடர்பிருந்தது. டர்பன் போன்று முண்டாசு, கழுத்தில் ஸ்கார்ப், திருத்திய மீசை, தாடி நீங்கலாக இப்போது பரவலாக நாம் பார்க்கும் பாரதியாரின் படம், காலமாவத்ற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாரதிதாசன் நிர்பந்தத்தின் பேரில், பாரதி எடுத்துக் கொண்ட படம். பாரதியை யானை அடித்த செய்தியைக் கேள்விப்பட்டு, பாரதிதாசன் அவருக்கு நலம் விசாரித்து எழுத, எனக்கு ஒன்றுமில்லை என்று பாரதி பதில் எழுத, நான் அப்ப்டியெல்லாம் சொன்னால் நம்ப மாட்டேன் எப்படி இருக்கிறீர்கள் என்பதற்குப் படம் எடுத்து அனுப்புங்கள் என்று பாரதிதாசன் வற்புறுத்த, 1921ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை பிராட்வே ரத்னா கம்பெனியில், வி.எஸ். சர்மா என்பவரிடம் பாரதியார் எடுத்துக் கொண்ட முழு உருவப்படம் அது. 1921ம் ஆண்டு செப்டம்பரில் பாரதியார் காலமாகிவிட்டார்.

பாரதியின் மறைவுக்குப் பின்னும் பாரதிதாசன் காங்கிரஸ் இயக்க உறுப்பினராகத் தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியை பாரதியார் வாழ்த்திக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் பாரதிதாசன் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் என்பதை 'தேச மகா மன்றம்' என்று அவர் தமிழ்ப்படுத்துகிறார்.

பாரதியின் காலத்தில் காங்கிரசின் பெரும் தலைவராக காந்தி வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் பாரதிதாசன் காலத்தில் காந்தி காங்கிரசை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் திகழ்ந்தார். 1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப்ப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்த பிறகு அந்த இயக்கத்தின் போது கிடைத்த எழுட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, வளர்க்க, கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கத்தைப் பிரசாரம் செய்ய எழுதப்பட்டதுதான் இந்த கதர் ராட்டினப் பாட்டு. கதர் இயக்கம் வேகம் பெற்ற போது பாரதியார் உயிருடன் இல்லை.அந்த இழப்பை பாரதிதாசன் நிறைவு செய்தார்.

கதர் இயக்கத்திற்காக பாரதிதாசன் கவிதைகள் எழுதியதோடு நின்றுவிடவில்லை. 'வெகுநாள் வரையில் கதர் வேட்டி, முரட்டுக் கதர் கோட்டு, பூப்போட்ட கதர் மேலாடை இவற்றை அணைந்திருந்ததாக' புதுவை விடுதலைப் போராட்ட வீரரும் இடதுசாரித் தலைவருமான திரு.வ.சுப்பையா எழுதியிருக்கிறார். தன் கையால் நூற்ற நூலைக் கொண்டு நெய்யப்பட்ட முரட்டுக் கதர் புடவையை மனைவிக்குத் தீபாவளிப் பரிசாக அளித்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன. தன் கையால் நூற்ற நூலைத் திரித்துத் தன் முதல் மகளுக்கு அரைநாண் கயிறு அணிவித்ததாகவும் குறிப்புக்கள் இருக்கின்றன. கனக.சுப்பு ரத்தினம் முதலியாரிடம் வேட்டி சேலை வாங்கினதில் பாக்கி இரண்டு ரூபாய் பனிரெண்டணா என்ற புதுவை ஜெகநாதம் அவர்களின் 13.1.1922 தேதியிட்ட நாட்குறிப்பு, பாரதிதாசன் கதர் துணியைக் கடனுக்கு விற்றுப் பிரபலப்படுத்த முயன்றார் என்பதற்கு சாட்சியம் அளிக்கிறது.

கடனுக்கு விற்றது மட்டுமல்ல, கைக் காசை செலவழித்துக் கதர் ராட்டினப் பாட்டு என்ற நூலை வெளியிட்டார். " என் தாயார் அப்போது கழுத்தில் அணிந்திருந்த பத்துப் பவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் தான் எழுதிய கதர் ராட்டினப் பாட்டு என்ற நூலை வெளியிட்டார். நாங்களே அந்த நூலை தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்தோம்" என்று பாவேந்தரின் முதல் மகள் சரஸ்வதி குறிப்பிடுகிறார்.

1930ல் பாரதிதாசனின் இந்த நூல் வெளிவந்தபோது அதன் படிகள் பிரஞ்சுக் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படியும் அவர்களுக்குத் தெரியாமல் சில பிரதிகள் பதுக்கப்பட்டன. அவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு வெளிவந்தன. அதைத் தான் நீங்கள் இங்கு காண்கிறீர்கள். இந்தப் பிரதி எனக்கு, பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னன் மன்னால் 1990களில் பரிசளிக்கப்பட்டது.

இந்த நூலில் உள்ள கவிதைகள் நூலாவதற்கு முன்பே பத்திரிகைகளில் பிரசுரமாயின. அவை தேச சேவகன், ஆத்ம சக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன.(1922, 1923) பாரதியின் மறைவுக்குப் பின் பாரதிதாசன் 'ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த' என்றே முகவரியிட்டுத் தனது படைப்புக்களைப் பிரசுரத்திற்கு அனுப்பி வந்தார். அவரே ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் என்ற ஓர் இதழையும் நடத்தினார். அதிலும் இந்தக் கவிதைகள் மறு பிரசுரம் செய்யப்பட்டன.( 1935) இந்த நூலின் முகப்பிலும் பாரதிதாசன் தன்னை பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவராகவே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

பாரதி எழுத்துக்களின் தாக்கத்தை இந்த நூலில் பல இடங்களில் காணலாம். பாரதியின் எங்கள் தாய் பாடலில் வரும் அறுபது கோடி தடக்கைகள் என்ற பதப் பிரயோகம், காந்தியடிகளும் கதரும் என்ற பாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். 'இடிபட்ட சுவர் போல கலி வீழ்ந்தான். கிருதயுகம் எழுக மாதோ என்று பாரதியார் புதிய ருஷ்யாவை வாழ்த்துகிறார். தேசத்தாரின் பிரதான வேலை என்னும் பாட்டு கலிதொலைத்துக் கிருத யுகம் காணப்பெறுவோமே என முடிகிறது. தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு என்று பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சுகிறார். கூட்டமுதம் நான் உனக்கு, கொஞ்சு கிளி நீ எனக்கு என்று ராட்டினைப் பெண்ணைப் பாடுகிறார் பாரதிதாசன். இடி மின்னல் காக்க குடை செய்தான் என்கோ என்பது பாரதி மகாத்மா காந்தி பஞ்சகத்தில் காந்தியைக் குறித்துத் சொன்ன சொற்கள். பாரதிதாசன் காந்தியைக் கண்ணனாகக் காண்கிறார். பாரதியின் பாஞ்சாலி சபத திரெளபதிக்கு பாரத தேவியின் சாயல் உண்டு. பாரதிதாசன் அன்னைக்கு ஆடை வளர்க என்ற பாட்டில் பாரதத் தாயைப் பாஞ்சாலியாகவும், காந்தியடிகளைக் கண்ணனாகவும் சித்தரிக்கிறார். ஆங்கிலேயன் பாரதத் தாயின் ஆடையைப் பறிப்பது போலப் படமும் உண்டு. பாரதியின் இந்தியா பத்திரிகைக் கார்ட்டூன்களும் பாரதியின் கவிதைகளும் பாரதிதாசனிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று

பின்னாளில் பாரதிதாசன் பயன்படுத்திய சில கற்பனைகளுக்கும் சொற்கட்டுகளுக்கும், உவமைகளுக்கும் இந்த நூல்தான் ஆரம்பம். புரட்சிக்கவியில் 'பானல் விழி மங்கையிடம்' என்று எழுதும் பாரதிதாசன், இங்கு, பானல் விழி உடையாள் என்று எழுதியிருப்பதைப் பார்க்க முடியும். பாரதிதாசனின் முத்திரையாகவே ஆகிவிட்ட 'அடா!' என்ற விளி ( எங்கெங்கு காணினும் சக்தியடா, கொலை வாளினை எடடா, பாரடா உன் மானிடப் பரப்பை) காந்தியடிகளும் கதரும் பாடலிலேயே இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.

பாரதிதாசனின் கவி வாழ்வின் முக்கிய கட்டத்தில் எழுதப்பட்ட இந்த நூல் அவரது காந்தி பக்தி, பாரதியின் மீதுள்ள விசுவாசம், விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கு, கதரியக்கத்தில் அவருக்குள்ள நம்பிக்கை, அவரது இலக்கியப் பயிற்சி, இசை அறிவு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய சாட்சி. அது மின் நூலாக மின் வெளியில் இன்று இடம் பெறுவதன் மூலம், தீப்பட்டு அழியாமல், வெள்ளம் கொண்டு போகாமல், செல்லரித்துப் போகாமல், காலங்களை வென்று நிற்கும் என்ற எண்ணம் வார்த்தைகளால் விவிரிக்க முடியாத சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இதை சாத்தியமாக்கிய நண்பர் டாக்டர். நா.கண்ணன் அவர்களுக்கும், அறிஞர்-ஆர்வலர் திரு. லோகசுந்தரம் அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது.

மாலன்
9.மார்ச் 2003 (கி.பி)

'பாரதி'
சென்னை 41






To the book - கதர் இராட்டினப் பாட்டு |Back to Index -மின்னூல் பட்டியல்



Courtesy:
Digitization:Mr.N.D.Logasundaram, Chennai, India
E-Book preparation:Dr.N.Kannan and M.D.Logasundaram
Special thanks to:Editor, Journalist, Author Mr.Maalan, Chennai
Copyright: 10 March 2003:- Tamil Heritage Foundation.

WARNING :
Contents of this web site are free for personal use and for research and education purposes only.


Designed by: Suba:- Copyright THF